Tuesday, October 7, 2008

பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/7!





காதல், கல்லூரி போன்ற சிறந்த படைப்புகள் மூலம் தமிழின் முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்த பாலாஜி சக்திவேல் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார்.

நாயகன், நாயகி உள்பட பெரும்பாலான பாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்துக்கு வழக்கு எண் 18/7 என வித்தியாசமாகப் பெயர் சூட்டியுள்ளார் பாலாஜி சக்திவேல்.

முதல் இரு படங்களையும் தன் குரு இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸுக்காகத் தந்தவர், இந்த முறை தனது நண்பர் லிங்குசாமியின் சொந்தப் பட நிறுவனத்துக்காக எடுக்கிறார்.

இந்தப் படத்தின் கதை மனதை உலுக்கும் ஒரு நிஜ வழக்கு ஒன்றின் அடிப்படையில் உருவாகிறதாம். அது என்ன சம்பவம் என்பதை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார் பாலாஜி சக்திவேல்.

முழுக்க முழுக்க புதுமுகங்களையே இந்தப் படத்திலும் பயன்படுத்தும் நோக்கம் என்ன?

விசேஷமாக ஒன்றுமில்லை. சில கதைகளுக்கு எந்த பிம்பமும் படியாத புதிய முகங்கள் இருந்தால் அதிக நம்பகத்தன்மையும், பிரஷ்னெஸும் கிடைக்கும். அதற்காகத்தான். இன்னொன்று கதையின் தன்மைக்கேற்ப அவர்களை மாற்றிவிடலாம்.

இந்தக் கதை நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைத் தரும் ரசிகர்களுக்கு, என்கிறார் பாலாஜி.

கதைக்குப் பொருத்தமான முகங்களுக்கான தேடுதலை தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.

ரொம்ப 'வாய்தா' வாங்காமல் சீக்கிரமாக 'வழக்கை' முடிங்க பாலாஜி!

No comments:

Post a Comment