அசோகவனம் என்று ஏற்கெனவே இயக்குநர் ஒருவர் தலைப்பை பதிவு செய்து வைத்திருப்பதால் தன் படத்துக்கு மாற்றுப் பெயரைத் தேடி வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் புதிய படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகிறது. ஏஆர் ரஹ்மான் இசைமைக்கிறார். இந்தப் படத்துக்கான அனைத்துப் பாடல்களையும் ஒரே ஷெட்யூலில் முடித்துக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான்.
இதன் இந்திப் பதிப்பில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயுடன் விக்ரம் நடிக்கிறார். தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராயுடன் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். தவிர பிருத்விராஜ், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உட்பட பலரும் நடிக்கிறார்கள்.
சத்தமில்லாமல் படப்பிடிப்பைத் துவங்கிவிட்ட மணிரத்னம், சாலக்குடி காட்டில் படப்பிடிப்புக் குழுவினருடன் இப்போது முகாமிட்டுள்ளார். இப்போது ஆதித்யா, வையாபுரி சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் படமாகி வருகின்றன.
நாளை முதல் அபிஷேக் பச்சன் கலந்துகொள்கிறார். கோவாவில் எந்திரன் ஷூட்டிங்கை முடித்த கையோடு 8ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்க ஐஸ்வர்யா ராய் சாலக்குடி வருகிறார்.
அடுத்த ஆண்டு திரைக்கு வரும் இப்படத்துக்கு அசோகவனம், ராவணன், வனவாசம் போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால், படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தில், புரொடக்ஷன் நெம்பர் 11 என்றுதான் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே இந்தப் படத்துக்கு அசோகவனம் என்ற தலைப்பையே மீண்டும் பெற முயற்சிகள் நடக்கின்றன.
முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் படத்தின் பெயரை அறிவிக்கப் போகிறாராம் மணி.
படம் ரிலீஸான பிறகு சொல்லாமல் இருந்தால் சரிதான்!

No comments:
Post a Comment