* தயாசிறி ஜயசேகர எம். பி. கூறுகிறார் பாராளுமன்ற உறுப்பினரான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரனே, பிள்ளையானின் செயலாளருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், பாராளுமன்றத்துக்கு புலி உறுப்பினர் ஒருவர் வந்து சென்றிருக்கிறாரென ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;
""பிள்ளையானின் செயலாளர் புலிகளுடன் தொடர்பு வைத்து செயற்படுவதாக கருணாவே ஊடகத்துக்கு தெரிவித்திருந்தார். இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்தவர்கள். சமாதான காலத்தில் ஐ.தே.க.தான் இவர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவுபடச் செய்தது' என்றார்.
அத்துடன் கருணா கூறுவதை வைத்துப்பார்க்கும்போது புலி உறுப்பினர் ஒருவர் இன்று (நேற்று) பாராளுமன்றம் வந்து சென்றிருப்பதாக நேற்றைய தினம் பாராளுமன்றம் வந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான பிள்ளையான் எனும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்து சென்ற ஆசனத்தை காட்டி தயாசிறி ஜயசேகர கூறினார்.
பிள்ளையான் புலிகளுடன் தொடர்பு வைத்து செயற்படுவதாக கருணா கூறுகிறார். ஒருபுறம் புலிகளை அழிப்பதாக கூறும் அரசு, இவ்வாறானவர்களையும் தமது உறுப்பினர்களாக கொண்டிருக்கிறது. புலிகளின் கிழக்கு உறுப்பினர்களாக இருந்தவர்கள் இன்று இங்கு அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர்.
இதேநேரம், மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதானதொரு தினத்தில் பிள்ளையான் அநுராதபுரம் வந்து, வடமத்திய மாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியும் சென்றுள்ளார்.
பிள்ளையான் வருவதற்கு முன்னர் பொலிஸார் பெரும் சுற்றி வளைப்பு சோதனையை நடத்தியுள்ள அதேநேரம், அதில் எந்தத்தற்கொலைக் குண்டுதாரியும் அகப்படவில்லை. எனவே, அந்த குண்டுதாரி இங்கு பிள்ளையானுடனேயே வந்துள்ளார்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment