Wednesday, October 8, 2008

கருணா- தமிழர் பிரதிநிதியா: "தினமலர்" நாளேடு சாடல்



சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவை மகிந்த ராஜபக்ச அரசு நியமித்திருந்தாலும் தமிழர் பிரதிநிதியாக அவர் செயற்படுவாரா? என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமலர்" நாளேடு சாடியுள்ளது.

இன்று புதன்கிழமை வெளிவந்த "தினமலர்" நாளேட்டின் தலைப்புச் செய்தி:

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்திய சிறிலங்கா இராணுவம், இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து உடனடியாக பணிந்தது. கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்த, இராணுவத்துக்கு சிறிலங்கா அரசு உத்தரவிட்டதாக தெரிகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் அதிரடி தாக்குதல் நடத்துகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ளதாகக் கருதப்படும் பதுங்குக் குழிகளைப் பார்த்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இந்த சண்டையால் கிளிநொச்சியில் வாழும் அப்பாவி தமிழ் மக்கள் வாழ்வா, சாவா என வெளியேறி வருகின்றனர். இதில் நாளாந்தம் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.

அரசின் கருத்துக்களைத் தெரிவித்தார்: இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன்படி, ஆயிரக்கணக்கானோர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகளைக் குவித்தனர். நேற்று முன்நாள் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நேற்று முன்நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், சிறிலங்கா துணைத் தூதுவரை தனது செளத் புளக் அலுவலகத்துக்கு அழைத்து, இனப் பிரச்சினையில் இந்திய அரசின் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, "கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புலிகளுடன் நடந்த சண்டையில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.

இந்தியாவின் எதிர்ப்பு, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டில் இருந்து திசை திருப்பும் நடவடிக்கையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினராக நேற்று முறைப்படி நியமிக்கப்பட்டார். ஆனால், இவர் அங்குள்ள தமிழர் பிரதிநிதியாகச் செயற்படுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கிடையே நேற்று, சிறிலங்கா இராணுவம் கிளிநொச்சியில் தனது கண்மூடித்தனமான தாக்குதலை திடீரென நிறுத்தி, திட்டத்தை மாற்றியது. அப்பாவி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளைத் தவிர்த்து, கிளிநொச்சியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் உள்ள அக்கரயான் குளத்தில் புலிகளின் மறைவிடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை மட்டும் குறிவைத்து ஹெலிகாப்டர்களில் சென்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment