போலித் திருமணச் சான்றிதழ்களைப் பெற்று பிரிட்டனுக்கான விஸா மோசடி செய்த இலங்கையின் பிரிபல தடகள வீரர் ஒருவரும் இரு வீராங்கனைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றதுடன் இலங்கை அஞ்சலோட்ட அணி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட பிரசன்ன அமரசேகரவும் தடகள வீராங்கனைகளான லலன சாந்தி மற்றும் கீதநந்தினி கலகேயுமே இந்த மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இதில் பிரசன்ன அமரசேகர தமிழ் யுவதியொருவரிடம் 25 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு அவரைத் திருமணம் செய்ததாக போலி திருமணச் சான்றிழைப் பெற்று தாங்கள் கணவன், மனைவி போன்று பிரிட்டனுக்கான விஸாவை சுலபமாகப் பெற்றுள்ளார்.
இதேபோல் இரு பெண் வீராங்கனைகளும் இரு முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்தது போல் போலி திருமணச் சான்றிதழைப் பெற்று தாங்களும் கணவன் மனைவியெனக் கூறி பிரிட்டனுக்கான விசாவைப் பெற்றுள்ளனர்.
இவர்களும் அந்த முஸ்லிம் இளைஞர்களிடம் தலா 25 இலட்சம் ரூபாவைப் பெற்றுள்ளனர்.
இதில் பிரசன்ன அமரசேகர திருமணமாகாதவர். ஏனைய இரு பெண்களும் திருமணமானவர்கள்.
பிரபல தடகள வீரர்களென்பதாலும் இவர்கள் சமர்ப்பித்த திருமணச் சான்றிதழ்களில் சந்தேகம் கொள்ளாததாலும் பிரிட்டிஷ் தூதரகம் எதுவித தயக்கமுமின்றி பிரிட்டனுக்கான விஸாவை அனைவருக்கும் வழங்கியுள்ளது.
எனினும், இவர்கள் போலியான திருமணச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தே விஸா பெற்றது இரகசியத் தகவல் மூலம் தெரியவர இவர்கள் ஆறுபேரும் பிரிட்டனுக்குப் பறப்பட முன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதே குற்றச்சாட்டில் மற்றொரு தடகள வீரரான ரங்க விமலவன்ச என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் கொடுத்து போலியான திருமணச் சான்றிதழைப் பெற்றது, இலஞ்சம் பெற்று பிரிட்டனுக்கான விஸாவை பெற்று கொடுக்க முனைந்தது போன்ற "கிரிமினல்' குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், ஏற்கனவே இலங்கை விளையாட்டு வீரர்கள் பலர் பிரிட்டனுக்கான விஸாக்களை பெற்றுள்ளனர். இது குறித்தும் தற்போது குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment