திருகோணமலை நகரின் வீதிகளில், பொது இடங்களில் மாணவிகளைக் கேலி செய்வோர், அவர்களுடன் அங்கசேஷ்டைகளில் ஈடுபடுவோர் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கும். அவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள் தங்கள் பாடசாலை நிர்வாகம் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கலாம். ஏன் இந்தத் தொல்லை என்று பாடசாலை நிர்வாகம் தவிர்க்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகள் தொலைபேசி மூலம் நேரடியாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கலாம். இவ்வாறு திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் நேற்று திங்கட்கிழமை காலை நகரிலுள்ள இரண்டு முன்னணிப் பாடசாலைகளில் இடம்பெற்ற சர்வதேச ஆசிரியர் தினம் 2008 நிகழ்வுகளில் பிரதம அதிதியாகப் பங்குபற்றிப் பேசுகையில் தெரிவித்தார். பாதிக்கப்படும் மாணவிகள் சார்பாக பாடசாலை நிர்வாகம் அல்லது பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொள்வதற்கான நீதிமன்றத்தின் தொலைபேசி இலக்கம் மற்றும் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி வெளியிட்டார்.
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முதலில் திருகோணமலை சென் மேரிஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வில் பங்குபற்றினார். பின்னர் உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றினார். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
?ஆசிரியர் தின நிகழ்வுகளில் பங்குபற்றுவதில் பெருமையடைகின்றேன். காரணம், எனது தாயார் பாடசாலை அதிபராகவும் தந்தை ஆசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். நான் படித்தது, ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் புகழ்பெற்ற யாழ். பரியோவான் கல்லூரியாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் மாணவருக்கு உறவினரல்லாத ஒருவர் குருவாக பாடசாலையில் அமைகின்றார்.
மனித வாழ்விற்கு வழிகாட்டிகளாக வழிபாட்டுத் தலங்களான கோவில், தேவாலயம், பள்ளிவாசல் மற்றும் விகாரை ஆகியன அமைவது போல மாணவ வாழ்வில் பாடசாலை அமைகின்றது. மாணவப் பருவம் பதினாறு வருடங்கள் வரையில் பாடசாலையில் கழிகின்றது. நாளைய தலைவர்கள் உருவாகும் இடமாகவும் பாடசாலை விளங்குகின்றது.
மாணவருக்கு வாழ்க்கைக் கடலில் நீச்சல் பயிற்சி வழங்குபவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். நீந்திக்கரை சேருவது மாணவரின் பொறுப்பாகும். மாணவனின் குருவானவர் ஆசிரியர் வடிவில் பாடசாலையில் அமைகின்றார். எனவே ஆசிரியர்கள் ஒழுக்கசீலம் நிறைந்த எதிர்கால சமுதாயத்தை தோற்றுவிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இப்பொறுப்பை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றவேண்டும்.
16 வயதுக்குட்பட்ட மாணவ சமுதாயத்தின் இயற்கைப் பாதுகாவலர்களாக தாய், தந்தை, இருக்கின்றனர். பாடசாலையில் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாராலும் கைவிடப்பட்ட குழந்தைகளின் சட்டபூர்வமான பாதுகாவலனாக நீதிமன்றம் இருக்கின்றது.
16 வயதுக்குக் குறைந்த சிறாரின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமி அவர் விரும்பியோ, விரும்பாமலோ பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தண்டனைக் கோவைச் சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
16 வயதுக்குட்பட்ட சிறார் வீதிகளில் அனுமதியின்றி திரியக்கூடாது. வீதியில், பொது இடங்களில் பராயமற்ற சிறுமியரை கேலி செய்வது, அங்கசேஷ்டைக்குள்ளாக்குவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். பாடசாலை மாணவிகள் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்குள்ளாகும் சம்பவங்கள் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
வவுனியாவில் நீதிபதியாக இருந்தபோது இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்களில் கடுமையான நடவடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்தினேன்.
திருகோணமலையிலும் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் தயாராக இருக்கின்றது. சந்திகளில், பாடசாலை விடும் நேரங்களில் கூடி நின்று மாணவியரைத் துன்புறுத்தும் சம்பவங்கள் இடம்பெறின் அவற்றை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். சட்டம் தெரியாது என்று கூறி குற்றத்தைப் புரிந்துவிட்டு நீதிமன்றத்திலிருந்து எவரும் தப்பிச் செல்ல முடியாது.
நீதிபதியின் கடமை, நீதிமன்றத்திலிருந்து கொண்டு நீதியைச் செலுத்துவது மாத்திரமல்ல, நீதிமன்றத்திற்கு வெளியிலும் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதியை வழங்குபவராகவும் நீதிபதி இருக்கவேண்டும்? என்று மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு அதிபர் அருட் சகோதரி எம்.பவளராணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.
உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் இணைந்து நடத்தின. நிகழ்வுக்கு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் கே.எஸ்.கஜேந்திரன் தலைமை வகித்தார்.
No comments:
Post a Comment