Tuesday, October 7, 2008

சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதி ஜானக பெரெரா உட்பட 28 பேர் குண்டுத்தாக்குதலில் பலி



சிறிலங்காவின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 85 பேர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் இன்று திங்கட்கிழமை காலை 8:45 நிமிடமளவில் இக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாகவும் இருந்தவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவும் அவரது மனைவியும் மற்றும் அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான டொக்டர். ஜோன்புள்ளேயும் அவரது மனைவியும் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 85 பேர் காயமடைந்தனர்.



கொல்லப்பட்டவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த புஞ்சிகேவா, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிரச ஊடகத்தின் அனுராதபுர செய்தியாளர் மொகமட் நஸ்மியும் அடங்குவர்.

காயமடைந்த அனைவரும் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனினும் இது தற்கொலைத் தாக்குதல் பாணியில் நடத்தப்படவில்லை என அனுராதபுர செய்தியாளர்கள் தெரிவித்ததாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தொரிவிக்கின்றன.

தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரப்போரில் முதன்மைப் பங்கை வழங்கிய அதேவேளை பெருமளவில் தமிழின அழிப்புக்கும் காரணமாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா.

யாழ். செம்மணி படுகொலைகளின் சூத்திரதாரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment