Wednesday, October 15, 2008

ஐ.நா.வின் இரண்டாவது உணவுப்பொருள் வாகனத் தொடரணி இன்று வன்னி செல்கிறது



ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப் பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை வன்னியிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது. அரசாங்கம் தெரிவித்துள்ள புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா.வின் குழுவொன்று நேற்று ஆராய்ந்ததாக ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் அடங்கிய ஐ.நா.வின் முதலாவது வாகனத் தொடரணி கடந்த 2ஆம் திகதி வன்னிக்கு அனுப்பப்பட்டது. இந்த வாகனத் தொடரணி ஓமந்தை புளியங்குளம் மாங்குளத்தினூடாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஐ.நா.வின் இரண்டாவது வாகனத் தொடரணி 7ஆம் திகதி செல்லும் என அறிவிக்கப்பட்டபோதும் அது நேற்று வரை வன்னிக்கு செல்லவில்லை. முன்னர் சென்ற பாதையை தவிர்த்து ஓமந்தை புளியங்குளம், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக செல்லுமாறு அரசாங்கம் பணித்ததையடுத்தே ஐ.நா.வின் இரண்டாவது வாகனத் தொடரணி வன்னிக்கு செல்வதில் இழுபறி நிலை ஏற்பட்டது.

புதிய விநியோகப் பாதையின் பாதுகாப்பு குறித்துதமது குழு பரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே இரண்டாவது வாகனத் தொடரணியின் பயணம் சாத்தியமாகுமென ஐ.நா. அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஐ.நா.வின் வன்னிக்கான உணவு விநியோகம் தற்போது என்ன நிலையில் உள்ளது என கேட்டதற்கு பதிலளித்த ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ்,ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் உணவுப்பொருட்கள் அடங்கிய 50 லொறிகள் இன்று காலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு செல்லவுள்ளன.

இன்று செல்லவுள்ள இரண்டாவது வாகன தொடரணியின் மூலம் 650 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.புதிய விநியோப் பாதையின் பாதுகாப்பு குறித்து எமது குழு நேற்று நேரில் சென்று ஆராய்ந்தது. எனவே இன்று இரண்டாவது உணவு வாகனத் தொடரணி வன்னிக்கு செல்லும் என எதிர்பார்க்கின்றோம்

No comments:

Post a Comment