| * தபாலகங்களில் நீண்ட வரிசை இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகளை அனுப்புமாறு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி மக்களுக்கு விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து நேற்று திங்கட்கிழமை மட்டும் தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தந்திகள் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டுமெனக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்திகளை அனுப்புமாறு முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளுக்கு தமிழகத்தின் பல கட்சிகளும் தமது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் பிரதமருக்கு தந்திகளை அனுப்புமாறு தமது கட்சித் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவிக்கையில்; முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது. அவரின் வேண்டுகோளையேற்று ஞாயிற்றுக்கிழமையே நான் பிரதமருக்கு தந்தி அனுப்பிவிட்டேன். என்னை பின்பற்றி பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளேன். அவர்களும் பெருமளவில் தந்திகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர் என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவிக்கையில்; கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்புவது இன்றியமையாததாகும். கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்பதுடன் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதும் தந்திகள் அனுப்பப்படும் என்றார். இதேவேளை, நேற்று திங்கட்கிழமை தமிழகத்திலுள்ள சகல தபால் அலுவலகங்களுக்கும் முன்னால் பெருமளவிலான மக்கள் தந்தி அனுப்புவதில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், உட்பட பல கட்சிகளின் தொண்டர்களும் தபாலகங்களுக்கு முன்பாக குவிந்திருந்தனர். விழுப்புரத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் இளைஞர்கள் பிரதமருக்கு தந்திகளை அனுப்பினர். இதேபோல் கடலூரிலும் பெருமளவான இளைஞர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் தபால் அலுவலகங்களின் முன் குவிந்திருந்தனர். நேற்று மட்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பல்லாயிரக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்கு தந்தி அனுப்பும் நடவடிக்கை தொடருமென அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. |
Tuesday, October 7, 2008
தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்கு பல்லாயிரக்கணக்கில் தந்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment