Wednesday, October 15, 2008

எந்த நாட்டின் அளுத்தங்களுக்கும் உட்படாமல் யுத்தத்தை தொடரவேண்டும் - விமல்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கு இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவினதோ, வோஷிங்டனினதோ அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை யுத்தத்தை நிறுத்த அரசாங்கம் முயலக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு யுத்தம் செய்யவே மக்கள் ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும் அவர் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவதுகடந்த காலங்களைப் போன்று இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கருணாநிதி உட்பட விடுதலைப்புலிகள் சார்பான அரசியல் கட்சிகள் சிறி லங்காவின் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென போராட்டங்களை நடத்தி மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்தியாவிலுள்ள சிறி லங்காத் தூதுவரை பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆலோசகர் கே. ஏ.நாராயணன் அழைத்து யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை முன்வைக்குமாறும், தமிழ் சிவிலியன்களை பாதுகாக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இந்தியா அல்ல எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் யுத்தத்தை ஜனாதிபதியால் நிறுத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை வழங்கினர். இதனை மீறுவது மக்களின் சுயாதிபத்தியத்தை மீறும் செயலாகும். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சிகள், பணம் வழங்கி இந்தியாவே போஷித்தது. இறுதியில் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்தனர்.

எனவே இந்தியா விடுதலைப்புலிகளை பாதுகாக்க முனைவதென்பது மீண்டும் வரலாற்றுத் தவறுகளையே புரிவதாக அமையும். முன்னோக்கிச் செல்லும் யுத்தத்தை பின்னோக்கி முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளல் ஆகாது. இந்திய அரசாங்கம் இங்கு யுத்தத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும். விடுதலைப் புலிப்பயங்கரவாதத்தை அழித்த பின்னரே அனைத்து தரப்பினரதும் கருத்துகளை செவிமடுத்து தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும். அதை விடுத்து இப்போதே தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென்பதெல்லாம் சாத்தியப்படாத விடயங்களாகும்.

இந்தியாவை சந்தோஷப்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அரசியல் தீர்வுத்திட்டம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கலாம். ஆனால், அதிகாரப் பரவலாக்கலை எல்லாம் முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். யுத்தமும் அரசியல் தீர்வின் ஓர் அங்கமே ஆகும். எனவே வெற்றியுடன் அது நிறைவு பெற வேண்டும். 1987 இல் ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருந்தார்.

ஆனால், மக்கள் ஆணையைப் பெற்றிருக்கவில்லை. எனவே அன்று இந்தியாவின் நிபந்தனைக்கு அடிபணிந்து யுத்தம் நிறுத்தப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இன்று அந்த நிலைமையில்லை. பயங்கரவாதத்தை அழிக்கும் யுத்தத்தை முன்னெடுக்கவே மக்கள் ஜனாதிபதிக்கு ஆணை வழங்கினார்கள். எனவே அதனை மீற முடியாது.

யுத்தம் நிறுத்தப்படுமானால் மக்கள் போராட்டம் வெடிக்கும். தொலைக்காட்சி நாடகத்தொடரைப் போன்று யுத்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி மக்களை ஏமாற்ற அரசு முனைந்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அச்சல ஜாகொட, ஜயந்த சமரசிங்க, மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய அமைப்பாளர் சமல் தேசப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment