Wednesday, October 15, 2008

நாட்டை சீரழிக்கும் யுத்தத்தை நிறுத்தி அரசியல்த்தீர்வை முன்வையுங்கள் - மங்கள சமரவீர



தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற மூவினங்களுக்கும் பொதுவான இந்நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றிக் கொண்டிருக்காது உடனடியாக யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சிமக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச ஆதரவினைப் பெற்றுக் கொள்ளவே சர்வகட்சிக் குழு கூட்டப்படுகின்றது. உண்மையில் இதன் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகள் எட்டப்படப் போவதில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சிக் குழு கூடியது.

இதில் ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என பிரதான எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்னவெனில், 13 ஆவது திருத்தச் சட்டம் என்பதும் அதனை அமுல்படுத்துவதற்கான சர்வகட்சிக் குழுவின் யோசனைகள் என்பதும் கண்துடைப்பு நடவடிக்கைகள் என்பதே ஆகும். மேலும் சர்வ கட்சிக் குழு நடவடிக்கைகள் ஒரு மாயை என்றே அந்தக் கட்சி ஆரம்பத்திலிருந்து நிராகரித்தும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றது.

இன்றைய நிலையில் சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க தருணத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடிய சர்வகட்சிக் குழு மாநாட்டில் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரியான பாதையாக அமையாது என்றும் அரசியல் தீர்வுகளிலேயே தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

இராணுவத் தீர்வில் நம்பிக்கையில்லை எனக் கூறுகின்ற ஜனாதிபதி இதுவரையில் யுத்தப் போக்கை கைவிட்டதாகக் தெரியவில்லை. அரசியல் தீர்வு என்ற பெயரில் கூட்டப்படுகின்ற சர்வகட்சிக் குழுவின் நடவடிக்கைகளில் அர்த்தமில்லை என்பது தெளிவு. சிறி லங்காவில் இன்றைய யுத்த நிலைவரம் தொடர்பில் தமிழ்நாட்டில் எழுச்சிப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உத்வேகமடைந்திருக்கின்றன.

இதனுடைய வெளிப்பாடு பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய அரசாங்கத்தை சிறி லங்காப் பிரச்சினையில் தலையிட வைப்பதற்கான அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் ஓர் உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் தீர்வு என்றும் இராணுவத் தீர்வு என்றும் இரண்டும் கெட்ட நிலையில் சிந்திப்பதை தவிர்த்து மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற நாட்டை மேலும் மேலும் இரத்தக் களமாக மாற்றாது தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வே முன்வைக்கப்பட வேண்டும்.

சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைந்த ஏற்றுக்கொள்ள முடியாத யோசனைகளை தவிர்த்துக் கொண்டு உடனடியாக யுத்தத்தையும் நிறுத்த வேண்டும் என்பதுடன் அரசியல் தீர்வினை முன்வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் இன்னும் கடந்து விடவில்லை என்பதையும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு வலியுறுத்தி நிற்கிறது.

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கூட்டப்பட்டு வருகின்ற சர்வகட்சிக் குழுவில் ஆக்கபூர்வமான அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்மானங்கள் எதுவுமே எட்டப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment