Wednesday, October 8, 2008

தற்கொலைக் குண்டுதாரியை கண்டறிவதில் பொலிஸார், புலனாய்வுப்பிரிவினர் தீவிரம்




* கொழும்பில் சனிக்கிழமை ஜானக பெரேராவின் இறுதிக்கிரியை

அநுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்தியவர் யாரெனக் கண்டறிவதில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மற்றும் அவரது மனைவியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான வஜிரா பெரேரா ஆகியோரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை மாலை பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவரது தலை மற்றும் உடல் பாகங்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டு குண்டுதாரியை இனங்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு சுமார் ஒரு கிலோ நிறையுடைய வெடிமருந்தே பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவருவதாக ஆரம்ப விசாரணைகள் கூறுகின்றன.

குண்டுதாரி கறுப்புநிறமுடையவரெனவும் சற்று குள்ளமானவரெனவும் ஒரு காலை நொண்டியவாறே நடந்து வந்து குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும், காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தையடுத்து அநுராதபுரம் நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேடுதல்களை மேற்கொண்டு வரும் படையினரும் பொலிஸாரும் பத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வீதிச் சோதனைகளும் தீவிரமடைந்துள்ளன.

இதேநேரம், ஜெனரல் ஜானக பெரேராவினதும் அவரது மனைவியினதும் பூதவுடல்கள் திங்கட்கிழமை மாலை விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இருவரது பூதவுடல்களும் மீண்டும் இன்று புதன்கிழமை காலை அநுராதபுரம் கொண்டு வரப்பட்டு நாளை வியாழக்கிழமை மாலை ஐந்து மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதன் பின் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு பூர்வாராம வீதியிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர் வரும் சனிக்கிழமை மாலை கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளன.

இதேவேளை இந்தச் சம்பவத்தில் அநுராதபுரம் நகரைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதால் நகர் சோகமயமாகவுள்ளது.

நகரில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment