Thursday, June 10, 2010

போஷாக்கிற்காக 500 மில். ரூபா செலவிடாத அரசு ஐஃபா விழாவுக்கு 800 மில்லியன் ரூபா செலவிட்டது: சஜித் கண்டனம்



இலங்கையை அச்சுறுத்தியுள்ள போஷாக்கின்மை குறைபாட்டை நிவர்த்திக்க 500 மில்லியன் ரூபாவை செலவிட தயாரில்லாத அரசு இந்திய நடிகர்களை அழைத்து நடத்திய களியாட்டத்துக்கு 800 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஐ.தே.க.வின் பா.உ. .சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது;

இலங்கையில் நீண்டகால போஷாக்கின்மையால் 4 இலட்சம் சிறுவர்களும் வயதுக்கு ஏற்ற நிறையின்றி 5 இலட்சம் சிறுவரும் வயதுக்கு ஏற்ற உயரமின்றி 2 இலட்சம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் சனத் தொகையில் 30 வீதமானோர் பெண்கள் இவர்களில் 15 இலட்சம் பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 க்கு 20 வீதமான பெண்கள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விற்றமின் ஏ குறைபாட்டால் 5 வயதுக்கு குறைந்த 25 வீதமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரையில் திரிபோஷ திட்டம் செயலிழந்து போயுள்ளது. அத்திட்டத்தை முன்னெடுக்க தற்போதைய அரசிடம் எந்தத் திறமையும் இல்லை.

இலங்கையில் 100 க்கு 20 வீதமானோர் செல்வந்தர்களாகவுள்ளனர். அதேபோல் 100 க்கு 20 வீதமானோர் மிகவும் வறுமைக்குட்பட்டவர்களாவுள்ளனர்.

எனவே இவ்வாறு வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்கு வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினையால் கல்வி மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஷாக்கின்மை பிரச்சினையை தனியாக சுகாதார அமைச்சினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது.

தேசிய போஷாக்கு உபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினையை தீர்க்க 500 மில்லியன் ரூபா போதுமானது. ஆனால் இதனை செலவிடத் தயாரில்லாத அரசு இந்திய நடிகர்களை அழைத்து 800 மில்லியன் ரூபாவை செலவிட்டு களியாட்ட விழா நடத்துகின்றது.

No comments:

Post a Comment