Tuesday, June 8, 2010

குடாநாட்டில் கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம்; ஆயுதக் குழுக்களுக்கு கவசமாக அரசியல் பலம் நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன்







குடாநாட்டில் தொடரும் குற்றச் செயல் களின் பின்னால் சட்ட விரோத ஆயு தக் குழுக்களும் அவர்களுக்கு கவசமாக அரசி யல் பலமும் இருப்பதையே புலபடுத் து கின்றன.
ஜனநாயக நீரோட்டத் தில் தம்மை இணைத் துக்கொண்டு விட்டதா கக் கூறிக் கொள்ளும் முன்னாள் ஆயுதக் குழுக்களே இக்குற் றங் களின் பின்னால் நிற்கின்றன என்ற சந் தேகம் மக்கள் மத்தி யில் மேலோங்கி நிற்கி றது.
மக்கள் தமக்கு இழைக்கப்படும் குற் றங்களை நேரடியாக பொலிஸில் முறை யிட முடியாத அளவுக்கு கண்ணுக்குத் தெரி யாத பயங்கரவாதம் யாழ்.குடாநாட்டில் வளர்ந்து வருவது மேலும் ஆபத்தான தாகும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைச் சேர்ந்த ஈ.சரவணபவன் நாடாளு மன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
குடாநாட்டில் மட்டுமன்றி கிளிநொச்சி முல்லைத்தீவு எல்லைக் கிராமமான விசு வமடு றெட்பானா என்ற குடியேற்றக் கிரா மத்தில் நடைபெற்ற வன்செயல் குறித்தும் சரவணபவன் சபையில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.

அவர் தமது நேற்றைய உரையில் தெரிவித்ததாவது:-
ஜனாதிபதி பயங்கரவாத சூழல் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் நாடு மீண்டும் ஒரு சுதந்திரக் காற்றை அனுபவிப்பதாகவும் அடிக்கடி கூறும் வார்த்தைகளை நான் இங்கு ஒருமுறை நினைவு கூரவேண்டிய அவசியத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். பயங்கரவாதமற்ற ஒரு சுதந்திரமான சூழல் நிலவுமாக இருந்தால் நானும் நாடாளுமன்ற உறுப்பினராக என்னைத் தெரிவுசெய்த மக்களும் நிறைந்த மனதுடனும் ஆழ்ந்த மகிழ்ச்சியுடனும் வரவேற்றிருப்போம்.
ஆனால் யாழ்;.குடாநாட்டில் இதற்கு நேர்மாறாக ஒரு நிலைமை நிலவுவதை நான் ஆழ்ந்த மனவலியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
யாழ்.குடாநாட்டில் பாடசாலை செல்லும் மாணவிகள் சில விஷமிகளால் பாலியல் துஷ்பிரயோகங் களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஏனைய பல குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பயம், வெட்கம் காரணமாகப் பாதிப்படைவோர் முறைப்பாடு செய்வதில்லை எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெமின் பத்மதேவா தெரிவித்துள்ளார்;.இதன்காரணமாக மக்கள் தங்கள் முறைப்பாடுகளை இரகசியமான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு பொலிஸ் முறைப்பாட்டுப்பெட்டிகள் வைக்கப்படவுள்ளன.
அதாவது மக்கள் தமக்கிழைக்கப்படும் குற்றங்களை நேரடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யப் பயப்படும் ஒரு கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் நிலவுவதை பொலிஸ் திணைக்களம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு யாழ்.குடாநாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது என்பது தெளிவாகவே புலனாகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடத்தல், கொலை, கப்பம் கோரல் மாணவ, மாணவிகளைக் கடத்துதல் போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றதை நீங்கள் அறிவீர்கள். அதிலும் சாவகச்சேரியில் கப்பம் கோரி ஒரு மாணவன் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவத்தை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
இச்சம்பவத்தில் இன்று ஜனநாயக வழிக்குத் திருப்பிவிட்டதாகக் கூறிக்கொள்ளும் ஒரு முன்னாள் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டனர். அதில் அக்கட்சியின் வேட்பாளரும் ஒருவர் எனச் செய்திகள் வெளிவந்தன. இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி ஒருவர் மிரட்டப்பட்டதும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்.மாநகர சபை முதல்வர் ஒரு விளம்பரம் மூலம் விமர்சித்தமையும் இவர்கள் தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவையும் நடந்து முடிந்த சம்பவங்கள்.
முடிவுக்கு வந்ததாக ஒரு தோற்றப்பாடு மட்டுமே
இவை காரணமாக ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனக் கருதப்படும் நீதிபரிபாலனம் உரிய நடவடிக்கைகளை இறுக்கமாக மேற்கொண்டதன் காரணத்தால் கடத்தல், கொலை, கப்பம் கோரல் முதலிய குற்றங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றப்பாடு எழுந்தது.
ஆனால் மீண்டும் இத்தகைய குற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும், மக்கள் முறையிட அஞ்சுவதாகவும் பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் முறைப்பாட்டுப்பெட்டி வைக்கப்பட்டமையும் இன்னும் பயங்கரவாதச் சூழல் இல்லாமல் போய்விடவில்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சம்பவங்களும் தற்போது இடம்பெற்று வெளிவராமல் அமுக்கப்படும் சம்பவங்களும் இக்குற்றச் செயல்களின் பின்னால் சட்டவிரோத ஆயுதக் குழுக்களும் அவர்களுக்கு கவசமாக அரசியல் பலமும் இருப்பதையே புலப்படுத்துகின்றன. இவ்வகையில் ஜனநாயக நீரோட்டத்தில் நம்மை இணைத்துக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொள்ளும் முன்னாள் ஆயுதக் குழுக்களே இக்குற்றங்களின் பின்னால் நிற்கின்றன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.
இரு குழந்தைகளின் தாயார் மீது வல்லுறவு
கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான விசுவமடுவில் - றெட்பானா என்ற இடத்தில் கடந்த வாரம் சென்று மீளக்குடியேறிய இரண்டு குழந்தைகளின் தாயார் நான்கு இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸ், இராணுவத்திடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக ஆதாரம் இல்லை.
தமிழ் மக்கள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுகின்றார்கள் என்பதை தயவு செய்து மனிதாபிமான அடிப்படையில் சிந்தியுங்கள்.
இம்மாதம் 5 ஆம் திகதி இரவு கிளிநொச்சி திருநகர் என்ற கிராமத்திலும் இதே போல் ஒரு சம்பவத்துக்கு இராணுவனத்தினர் முயற்சித்தபோது மக்;கள் ஒன்று கூடி தடுத்ததினால் விபரீதம் தடுக்கப்பட்டது.
பயங்கரவாதமற்ற ஒரு சுதந்திரமான தேசம் என்ற ஜனாதிபதியின் உயரிய நோக்கம் சில தீய சக்திகளால் சிதைக்கப்படுவதைத் தாங்களும் இச்சபையும் கருத்தி;ல் எடுக்க வேண்டும் என்பதை மிகுந்த பொறுப்புடனும் உரிமையுடனும் தங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் மீது பிரயோகிக்கப்படும் இத்தகைய வன்முறைகள் அரசாங்க அதிகாரிகள் மீதும் மறைமுகமாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை எமக்கு ஏற்படுத்து கிறது. அப்படியான சந்தேகங்களுக்கு நியாயமான காரணங்களும் உண்டு.
எமது மாவட்டத்திற்கு அமைச்சர்களோ வேறு அபிவிருத்தி தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிதிகளோ விஜயம் செய்து அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்களையோ ஆய்வுகளையோ மேற்கொள்ளும் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை.
இது ஒரு நியாயமற்ற நடைமுறை என்றே நான் கருதுகிறேன். நாம் எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். எமது மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் பெரும் பொறுப்பும் கடமையும் எமக்குண்டு.
இப்படியான ஒரு நிலையில் எமது மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான ஆலோசனை அரங்குகளில் நாம் பங்குபற்றும் சந்தர்ப்பத்தை மறுப்பது எமது கடமையைச் செய்வதைத் தடுப்பதாகும்.
இது, நாடாளுமன்ற உறுப்பினரின் மரபு வழிவந்த உரிமைகளை மறுக்கும் ஒரு நடவடிக்கை.
ஜனநாயக விழுமியங்களைக் கட்டிக்காத்து முன்னெடுத்துச் செல்வதில் இச்சபை ஒரு வலிமை மிக்க நிறுவனமாகத் தொடர்ந்து நிலைத்து நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் - என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

No comments:

Post a Comment