Tuesday, June 8, 2010

அநாமதேய தொலைபேசி அழைப்புகளின் தகவல்களை வழங்குமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவு



யாழ்ப்பாணத்தில் எடிசலாட் மற்றும் டயலொக் கையடக்க தொலைபேசிகளின் மூலம் குற்றங்கள் நடைபெறுவதற்கான அழைப்புகளை மேற்கொண்டதாக கூறப்படும் இரண்டு வழக்குகள் இன்று யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன்போது, தொலைபேசி அழைப்புகளின் தகவல்களை வழங்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனிவாசகம் வீதி, கொட்டடி என்ற இடத்தில் உள்ள லொட்ஜ் ஒன்றுக்கு அழைப்பை ஏற்படுத்தி வரும் ஒருவர் அடிக்கடி தாம் சிங்களப் பெண்களை கொண்டு விபசாரம் செய்வதற்கு அனுமதி தரமுடியுமா? என லொட்ஜ் முகாமையாளரிடம் வினவி வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ்ப்பாண பொலிஸ் இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நீதிவான் ஆனந்தராஜா, குறித்த தொலைபேசி அழைப்பு தொடர்பான தகவல்களை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நிறுவனத்தின் முகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று யாழ்ப்பாணம் நீராவியடி என்ற இடத்தில் உள்ள ஒருவரிடம் 10 லட்சம் ரூபா கப்பம் கோரி டயலொக் கையடக்க தொலைபேசியின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வழக்கு தொடர்பில் நீதிவான் குறித்த நிறுவன முகாமையாளர் சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பு தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment