Monday, June 14, 2010

டக்ளஸ் மீதான வழக்கு;மத்திய,மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய, மாநில அரசுக்கள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீடிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கடந்த வாரம் இந்தியா பயணமாகியிருந்த அமைச்சரை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி சென்னையில் தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் 4பேரை காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சில மாதங்கள் கடந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10வயது சிறுவனொறுவனைக் கடத்திச் சென்று, 7 இலட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ட டக்ளஸ் தேவான்ந்தா, அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பினார். இந்நிலையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த வாரம் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூருத்த சட்டத்தரணி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது இன்றைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டுநாடு திரும்பினார். குறித்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொன்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவித்தன.

No comments:

Post a Comment