Monday, June 7, 2010

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பில் சாதகமான தீர்மானங்கள்







தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடைந்நதாகவும் மீண்டும் ஒரு தடவை இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சற்று முன் வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

மீள்குடியேற்றம், உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி மக்களை மீள் குடியமர்த்துதல், புனர்வாழ்வு, தமிழ்க் கைதிகளின் விடுதலை, வடகிழக்கு மக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகிய விடயங்கள் இன்றைய பேச்சு வார்த்தையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் கட்சிகளும், சர்வதேசமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பானது இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அரசாங்க சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களான ஜி.எல் பீரிஸ், நிமால் சிறிபாலடி சில்வா, டலஸ் அழகபெரும, மைத்திரிபால சிறிசேன, பசில் ராஜபக்ஷஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் தவிர கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

மீள்குடியேற்றம்

தனியார் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிப்பதாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் செரிந்து வாழும் இடங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வாறான இடங்களில் இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும்.

புனர்வாழ்வு

இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். நீதிமன்ற அனுமதியுடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும், அவசரகால சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளோரும் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் .

வாழ்வாதாரம்

மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் செய்து கொடுக்கப்படல் அவசியமாகும். குறிப்பாக சிறுவர்கள் பசி,பட்டனி இன்றி சிறந்த போசாக்கு உடையவர்களாக மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கான கல்வி வசதிகள் உட்பட ஏனைய வசதிகள் செய்துக் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனாதிராஜா தெரிவித்தார்.

'தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் நாம் எடுத்துக் கூறிய விடயங்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைத்தது. அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தனியான குழு ஒன்று அமைப்பதற்கு தீர்மாணித்தோம்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் மீண்டும் ஒரு தடவை சந்தித்து இவ்விடயங்கள் தொடர்பாக ஆராய தீர்மாணித்துள்ளோம்." என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment