Wednesday, June 9, 2010

அரசாங்கம் தனது கடமையிலிருந்து விலகக் கூடாது: இரா. சம்பந்தன் திட்டவட்டமாக அறிவிப்புதமிழ் மக்களுக்கான தேவையை அறிந்து தனது நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றிக்கொள்ளுமாயின் சர்வதேசத்திடம் இலங்கைக்கு உதவிகோர தயாராகவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் கடமையிலிருந்து அரசாங்கம் விலகக் கூடாது என திட்டவட்டமாகக் கூறியது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இக்கருத்தை வலியுறுத்தினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டு அங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தோம். குறிப்பாக மீள் குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தற்காலிக முகாம்களில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எமது கரிசணையை செலுத்தியிருந்தோம்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது அரசாங்கம் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு மக்களின் குடியிருப்புகளை தகர்த்தியது. அதனால் அப்பாவி மக்கள் உணவு, உறை, உடையுள் எதுவுமின்றி பெரும் துன்பங்களை எதிர்நோக்கினார்கள். வீடுகளை உடைத்த அரசாங்கம் அவற்றை மீளக் கட்டிக்கொடுப்பதில் பின் நிற்கிறது. குறிப்பாகச் சொல்வதானால் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நோக்கமே அவர்களிடம் இல்லை.

மீள்குடியேற்றப்பட்டவர்களில் சிலருக்கு நிவாரணத் தொகை கிடைத்துள்ளது. பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.

அரசாங்கம் சில அபிவிருத்திகளைச் செய்திருக்கிறது. நாங்கள் இல்லை எனக் கூறவில்லை. ஆனால் மக்களின் தேவை கருதிய பெரும்பாலான விடயங்கள் செய்துகொடுக்கப்படவில்லை. அவ்வாறு அவற்றைச் செய்துகொடுக்க அரசாங்கம் முன்வருமானால் அதற்கு உதவுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

கேள்வி: அரசாங்கத்துடன் நீங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறதே?

பதில்: அதுபற்றி பேச விரும்பவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி என்பதை விட மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளோம் என்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.

கேள்வி: அந்த பேச்சுவார்த்தையில் நீங்கள் முன்வைத்த விடயங்களை விளக்கிக் கூறுங்கள்?

பதில்: வடக்கில் நாங்கள் விஜயம் செய்து அறிந்துகொண்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஜனாதிபதிக்கும் அமைச்சர்கள் குழுவினருக்கும் எடுத்துக் கூறினோம். ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

கேள்வி: ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அரசாங்கத்துக்கு ஆதரவு தரவள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி?

பதில்: எமது மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுமேயானால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தாயாராக இருக்கிறோம். ஆனால் நாம் குறிப்பிட்ட சில விடயங்களில் அரசாங்கம் பின் நிற்குமேயானால் அதனை சுட்டிக்காட்டவும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன எனக் கூறும் நீங்கள் சர்வதேசத்திடம் உதவி கோரலாமே?

பதில்: நிச்சயமாக. யுத்தத்தின் பின்னர் மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் காணவில்லை என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். மனைவிமார் விதவைகளாக செய்வதறியாமல் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் ஊனமுற்றிருக்கிறார்கள். மீள்குடியேற்றம் முழுமைப் படுத்தப்படவில்லை. மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க முடியாது என அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாயின் எமது மக்களுக்காக சர்வதேசத்திடம் உதவி கோர தயாராக உள்ளோம்.

கேள்வி: தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு அரசில் தீர்வு காண்பது குறித்து வடக்கு கிழக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதான கட்சி என்ற வகையில் அரசாங்கத்துக்கு யோசனைகளை முன்வைக்க தாயாராக இருக்கிறீர்களா?

பதில்: அரசாங்கத்தினால் அவ்வாறு கோரப்படுமாயின் அதற்கு பதில் தருவோம். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தரும் தீர்வு என தட்டிக்கழிக்க முற்படாத வகையில் நிலைப்பாடு மாற வேண்டும்.

கேள்வி: நிறைவேற்று அதிகார முறைமையை நீடிப்பது பற்றி விமல் வீரவன்ச கருத்து தெரிவித்திருந்தார். அதுபற்றி கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில்: விமல் வீரவன்சவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை __

No comments:

Post a Comment