Tuesday, June 8, 2010

நித்தியானந்தா மீதான வழக்கு விசாரிக்க இடைக்கால தடை

நித்தியானந்தா மீது வக்கீல் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த வக்கீல் செல்வமணி என்பவர், ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா மீது வழக்கு தொடர்ந்தார்.

அதில், சுவாமி நித்யானந்தா தவறான முறையில் செயல்பட்டு இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக, அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு விசாரித்து கடந்த ஏப்ரல் மாதம் நேரில் ஆஜராக நித்தியானந்தாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் நித்தியானந்தா ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதை தொடர்ந்து 9-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராகும் உத்தரவுக்கு தடை கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி சி.பி. செல்வம் விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் நித்தியானந்தா நேரில் ஆஜராவதற்கும், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கும் 3 வார கால இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வக்கீல் செல்வமணிக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment