Sunday, June 6, 2010

ஜனாதிபதி மஹிந்தவை ஈ.பி.டி.பி.யும் சந்திக்கிறது







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்னு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. குழுவி னர் சந்தித்து பேசவுள்ளனர். இது குறித்து ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர். இன்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது. இந்தக் கூட்டுப் பிரகடனத்தில் யாழ். குடாநாட்டின் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், யாழ். நகர கலாசார கேந்திர மற்றும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை தொடர்பிலான மேம்பாட்டு விடயங்களும் உள்ளடக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment