Sunday, June 6, 2010

ஜனாதிபதி மஹிந்த - கூட்டமைப்பினர் சந்திப்பு தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு இன்றய பேச்சு வழிவகுக்க வேண்டும் அரசியல் கட்சிகள் பலவும் கருத்து






ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான இன்றைய பேச்சு, தமிழ்மக்கள் நிம்மதியான வாழ்வை மேற்கொள்வதற்கு உந்துசக்தியாக இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் பலவும் விருப்பம் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்புக்குமிடையிலான பேச்சுகள் இன்று மாலை 5 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளன.
பேச்சுகள் தமிழ்மக்களின் நலன் சார்ந் தவையாக இருக்கவேண்டும் என ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது. இனப் பிரச்சினைக் கான தீர்வாக அனைத்து அதிகாரங்களை யும் கொண்ட மாகாணசபைகளை வழங்கலாம் என்கிறது இ.தொ.கா.
இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து நாடா ளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ்க் கட்சிகளையும் அழைத்து ஜனாதிபதி பேச்சு நடத்தவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டுள்ளது.
பேச்சுகள் அர்த்தமுள்ளவையாக அமைய வேண்டும் என ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
பேச்சுகளை வரவேற்றுள்ள ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும்போது முஸ்லிம்களும், மலையக மக்களும் அதில் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளது.
ஐ.தே.கட்சி கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க பேச்சு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
"அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுகள் அர்த்தமுள்ளவையாக அமையவேண்டும். இரு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாகப் பேசி பரஸ்பரம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.' என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும்போது வடக்கு, கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவே அது அமையும். இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். இப்பேச்சுகளை அவர் வரவேற்றுள்ளார்.
யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பியும், குழுக்களின் பிரதித் தலைவருமான பி.சந்திரகுமார் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுகள் தமிழ்மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லாமல் தமிழ்மக்களின் நலன் சார்ந்தவையாக இருக்கவேண்டும்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தாம் இழந்த சகலவற்றையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் ஆக்கபூர்வமானவையாக இப்பேச்சுகள் இருக்கவேண்டும்.
நடைமுறைச் சாத்தியமற்ற தமிழ்த் தேசியக் கோட்பாடுகள் சார்ந்ததாக இப்பேச்சுகள் இருக்கக்கூடாது. கடந்தகால நிகழ்வுகளைப் பாடமாகக் கொண்டு காத்திரமான வகையில் பேச்சு அமையவேண்டும்.' என்றார்.
இ.தொ.கா. பிரதித் தலைவரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
"சகல உரிமைகளையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் தீர்வைப் பெறக்கூடியதாக பேச்சுகள் அமையவேண்டும். மாகாண சபை முறையின் கீழ் தீர்வு அமைவதென்றால் மாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஜனாதிபதி துணைபோகமாட்டார் எனத் திடமாக நம்பலாம்.' என்றார்.
பேச்சுகள் தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கருத்துத் தெரிவிக்கையில்,
"நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்துப் பேசவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
உயிரிழப்புகள், சொத்து இழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எவரும் தலையிடாத வகையில் இருக்கவேண்டும்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஷ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக இருக்கும் என வற்புறுத்தி வந்தமை இரகசியமான விடயமல்ல. சமஷ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாகக் கூறி வந்துள்ளோம்.'
இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment