Wednesday, June 2, 2010

போரினால் சேதமடைந்த வீடுகளை உரிமையாளர்களே புனரமைக்கவேண்டும்: பசில்


வடக்கில் போரினால் சுமார் ஒன்றரை லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் தமது சேதமடைந்த வீடுகளை திருத்தியமைப்பதில் அதன் உரிமையாளர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் அங்கு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

நெடுங்கேணியில் பிரதேச செயலகத்திற்கான அடிக்கல்லை அவர் நாட்டி வைத்தார். அத்துடன் ஒட்டுச்சுட்டானில் விவசாயிகளுக்கான நீர்பம்பிகளையும் அவர் வழங்கினார்.

இதன் போது உரையாற்றிய அவர், வடக்கில் இன்று விவசாயம் மற்றும் ஏனைய தொழில்துறைகளில் மக்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இதில் வரும் வருமானத்தை கொண்டு சேதடைந்த வீடுகளை அதன் உரிமையாளர்கள் புனரமைக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கு இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கு வட்டியை செலுத்தவேண்டியுள்ளதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

இதேவேளை அமைச்சர் பசில் ராஜபக்ச, மீள்குடியமர்ந்த மக்களை சந்தித்த வேளையிலும், அரசாங்கம் சேதமடைந்த வீடுகளை புனரமைத்து தராது என குறிப்பிட்டதாக முல்லைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தண்ணீரூற்று பகுதியில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும், முல்லைத்தீவு நகரில் முஸ்லிம் மக்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவும், இன்று முல்லைத்தீவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment