Wednesday, November 19, 2008

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30% வீட்டுக் கடனாக வட்டியின்றி பெற முடியும்




ஊழியர் சேமலாப நிதியத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி நிதியத்தின் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு அவரவரது வைப்பிலிருந்து 30 சதவீதத் தொகையை வட்டியின்றி வீட்டு கடனாகவோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சைக்கான கடனாகவோ பெற்று கொள்ள முடியுமென தொழில் உறவுகள், மனித வலு அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தில் தொழில் உறவுகள் மனிதவலு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

எமது அரசாங்கத்தின் ஆட்சியிலேயே அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 80 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 6 ஆயிரம் ரூபாவாக இருந்த அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 11,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

இதேபோல் தனியார் துறையைப் பொறுத்த வரையில் 2006 ஆம் ஆண்டு பொதுவாக ஆயிரம் ரூபாவிலான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதுடன், 2007 ஆம் ஆண்டில் தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 5 ஆயிரம் ரூபாவென நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு முன்னர் இந்த நாட்டில் தனியார் துறை ஊழியர்களுக்கென அடிப்படை சம்பளமொன்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கவில்லை.

தனியார் துறை சம்பள உயர்வு பற்றி பல தரப்புகளில் இருந்தும் குரல் எழுப்பப்படுகிறது. அரச துறையை பொறுத்த வரையில் அரசாங்கம் மட்டுமே சம்பளம் தொடர்பான முடிவுகளை எடுக்கிறது. எனினும், தனியார் துறையை பொறுத்தவரையில் பல மட்டங்களிலான இலட்சக்கணக்கிலான தொழில் தருணர்கள் இருக்கின்றனர். அவரவர் இலாபங்களுக்கும் திறன்களுக்கும் ஏற்ப ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்கின்றனர். எனவே, தனியார் துறையைப் பொறுத்த வரையில் பொதுவான சம்பள அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது.

தனியார் துறையினருக்கு சம்பள நிர்ணய சபையின் மூலமும் தொழிற்சங்கங்களுக்கும் நிறுவன முதலாளிமார்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தங்கள் மூலமும் சம்பளத்தை அதிகரிக்கலாம்.

இதையடுத்து 2008 ஆம் ஆண்டில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வருமானங்களுக்கு அமைய தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம் 15 சதவீதம் தொடக்கம் 43 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. அதாவது, 5,750 ரூபா தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. வருடாந்த சம்பளப் படி உயர்வும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு தான் தொழிற்சங்கங்களிலுள்ள அரசியல் வாதிகள் வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு இல்லையென்கின்றனர். அரசியல் இலாபம் பெறும் பொருட்டு இவர்கள் இப்படி பேசுகின்றனர்.

இதேநேரம், தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் 170 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது பற்றி மேலும் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேநேரம், ஊழியர் சேமலாப நிதியத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி நிதியத்தின் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு அவரது வைப்பிலிருந்து 30 சதவீதத் தொகையை வட்டியின்றி வீட்டு கடனாகவோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சை கடனாகவோ பெற்று கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பல சாசனங்களை இலங்கை ஏற்று கொண்டுள்ளது. உலகிலேயே தொழிலாளர் உரிமைகளை அதிகம் பாதுகாக்கும் நாடு இலங்கை என்றார்.

No comments:

Post a Comment