Thursday, November 20, 2008

இந்திய நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் சர்ச்சை



பாதிக்கப்பட்டுள்ள வன்னிச் சிவிலியன்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பில் அரசாங்கத்திற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத், களனியில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் களஞ்சிய சாலையில் வைத்து குறித்த நிவாரணப் பொருட்களை கையளித்தார்.

இந்தியாவினால் வழங்கப்பட்ட பொருட்களை யார் விநியோகம் செய்வது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையில் முரண்பட்ட கருத்துகள் நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பிரதேச அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வன்னிச் சிவிலியன்களுக்கான நிவாரணப் பொருட்களை தமது அமைப்பு விநியோகம் செய்ய உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க இலங்கைக் கிளைத்தலைவர் போல் கஸ்ட்டெல்லோ தெரிவித்துள்ளார்.

முதல் தடவையாக இந்திய அரசாங்கம் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறித்த இந்திய அரசாங்கத்தின் நம்பிக்கை மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோதல்களினால் இடம்பெயர்ந்து வாழும் சிவிலியன்களுக்கு தமது அமைப்பு நேரடியாக நிவாரணப்பொருட்களை வழங்க உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களது தேவைகள் குறித்து சுயாதீனமாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நிவாரணப் பொருள் விநியோகம் இடம்பெறும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்தியத் தலைவர் பிரான்கொயிஸ் ஸ்டெம்மன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், நிவாரணப் பொருட்கள் விநியோகம் குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் வினவிய போது, இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே இந்திய நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பொருள் விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட பிராந்திய அரசாங்க அதிபர்களுக்கும் குறித்த பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பின் போது பொருட்கள் விநியோகம் தொடர்பான பாதைகள் மற்றும் விநியோக முறை குறித்து தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்திய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு களஞ்சியசாலையில் அடுக்கப்பட்டிருந்தன:


வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிப்பதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு களஞ்சியசாலையில் அடுக்கப்பட்டிருந்தன.

பொதிகளில் தமிழக மக்களிடமிருந்து, இந்திய மக்களிடமிருந்து எனும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த வாசகங்கள் தெரியாத வகையிலேயே பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. நிவாரணப் பொருட்களில் அரிசி, பருப்பு பொதியிடப்பட்ட என்பன பொதியிடப்பட்ட பைகளில் தமிழக மக்களிடமிருந்து எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் களஞ்சியசாலையில் இந்த பொதிகள் தமிழ் எழுத்துக்கள் தெரியாதவாறு அடுக்கப்பட்டிருந்ததுடன், அவை மறைக்கப்பட்டும் இருந்தன.

இதுகுறித்து விளக்கமளிப்பதற்கு அங்கிருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனைவிட நிவாரணப் பொருட்கள் கையளிக்கும் வைபவம் நடைபெற்ற மேடைக்கருகில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிவாரணப்பொருட்களில் தமிழக மக்களிடமிருந்து எனும் வாசகம் அடங்கிய பொதியொன்று காணப்பட்டது. அதனையும் அங்கிருந்த அதிகாரிகள் அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment