Wednesday, November 19, 2008

இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.



“இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“பயங்கரவாதம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அதுவும் இராணுவ ரீதியாகவே ஒழிக்கப்பட வேண்டும்” என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக எல்.எம்.டி. சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேவையற்றவையெனக் கூறியிருக்கும் பெரும்பாலானவர்கள், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேசுவது தீர்வைத் தராது எனக் கருதுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பதுடன், தற்பொழுது தேர்தலொன்று நடத்தப்படுமாயின் தாம் ஜனாதிபதிக்கு வாக்களிப்போம் என பலர் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியாகப் பதவியேற்று மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில் முப்படைத் தளபதியாக மஹிந்த ராஜபக்ஷ சிறப்பாகச் செயற்பட்டிருப்பதாக எல்.எம்.டி.சஞ்சிகையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டில் ஊழல் மற்றும் பணவீக்கம் அதிகரித்திருப்பதுடன், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக அந்த சஞ்சிகையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment