Wednesday, November 19, 2008

விடுதலைப் புலிகளுக்கு கருணா குழுவினர் திரும்புவதாக தகவல்



இலங்கை அரசிடமிருந்து போதிய அளவில் பணம் வராததால், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் திரும்பக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கொழும்பிலிருந்து வெளியாகும் சன்டே லீடர் இதழில் செய்தி வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா வெளியேறியபோது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கணிசமான விடுதலைப் புலிகளும், கருணாவுடன் சென்றனர். இந்த அமைப்புக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என பெயரிடப்பட்டது.

அதன் பின்னர் அவர்கள் முழுக்க முழுக்க இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டனர். இலங்கை அரசுதான் தற்போது கருணா குழுவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இலங்கை அரசுதான் அவர்களுக்கு நிதியுதவியும் அளித்து வருகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக அரசிடமிருந்து பணம் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் கருணா குழுவினர் திணறுகின்றனராம்.

மாதாந்திர உதவித் தொகை வராததால், கருணா குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் இடையிலான பனிப்போரும் தீவிரமடைந்து வருவதால் அவர்கள் இலக்கின்றி செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் திரும்பும் உத்தேசத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முதல் கட்டமாக, விடுதலைப் புலிகளுக்காக பணியாற்ற தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

போர் நீடித்தால் மற்றும் கருணா குழுவினருக்கு அரசு தொடர்ந்து உதவித் தொகை வழங்காவிட்டால், கருணா குழுவைச் சேர்ந்த கணிசமான தொண்டர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு திரும்பக் கூடும் என்றும், அப்படி நடந்தால் அது கிழக்கு மாகாணத்தில் அரசுப் படையினருக்கு பெரும் சவாலாக மாறி விடும் எனவும் செய்திகள் கூறுகின்றன.

No comments:

Post a Comment