Thursday, November 27, 2008

மும்பை ஹோட்டலில் மேலும் 4 பயங்கரவாதிகள்!








மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில் ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளுடன் காவல் துறையினரும், தேச பாதுகாப்புப் படையினரும் நடத்திவரும் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், இன்னமும் 4 அல்லது 5 பயங்கரவாதிகள் விடுதிக்குள் மறைந்திருக்கக்கூடும் என்று ராணுவ மேஜர் ஆர்.கே. ஹூடா தெரிவித்துள்ளார்.

தாஜில் தங்கியிருந்த பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டப் பின்னரும், இன்னமும் 40 முதல் 50 விருந்தினர்கள் இருக்கலாம் என்றும், அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அடங்குவர்.

இதற்கிடையே நண்பகல்வாக்கில் விடுதிக்குள் இருந்து 2 உடல்கள் வெளியே கொண்டுவரப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் சுமார் 10 முதல் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்களில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எஞ்சிய பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் பயங்கரவாதிகள் கொல்லப்படுவார்கள் என்றும் பாட்டீல் கூறினார்.

ஒபராய் பகுதியை கடற்படையினரும், ராணுவத்தினரும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாஜ் விடுதிக்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment