Thursday, November 13, 2008

கூடாரங்கள் அமைக்க தேவையான பொருட்களை வன்னி கொண்டுசெல்ல சிறிலங்கா படைத்தரப்பு தடை



வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கப்படுகின்ற பிளாஸ்ரிக் மற்றும் றபர் தன்மை கொண்ட விரிப்புகள் ஆகியனவற்றை கொண்டு செல்வதற்கு சிறிலங்கா படைத்தரப்பு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொருட்களுக்கு பதிலாக கிடுகுகள் மற்றும் மெல்லிய பலகை பொருட்களையே எதிர்காலத்தில் வன்னிக்கு அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் அத்தியாவசிய சேவைகள் ஆணையார் அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை, தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்கு கிடுகுகள், மெல்லிய பலகைப் பொருட்களை மாத்திரமே வன்னிக்கு கொண்டு செல்லுமாறு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணைய அதிகாரிகளுக்கு படைத்தரப்பு அறிவித்திருப்பதாக கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது.

பிளாஸ்ரிக் மற்றும் றபர் தன்மை கொண்ட விரிப்புகள் ஆகியனவற்றை கொண்டு தற்காலிக கூடாரங்களை அமைத்தால் மக்கள் மேலும் இடம்பெயரும் நிலை ஏற்படும்போது அந்த கூடாரங்களை எடுத்துச் சென்று வேறு இடங்களில் மீண்டும் தற்காலிக கூடாரங்களை அமைக்க முடியும்.

அத்துடன், அவ்வாறான கூடாரங்களை அமைப்பது அனைத்துலக விதிகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் கிடுகுகள், மெல்லிய பலகைகளினால் கூடாரங்களை அமைத்தால் அதனை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது என உரிய அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாகவும் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிடுகுகள் மெல்லிய பலகைகளினால் அமைக்கப்படும் கூடாரங்கள் நீண்ட காலம் பாவிக்கக்கூடியவை அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, பிளாஸ்ரிக் விரிப்புகளைக்கொண்ட தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்குரிய பொருட்களை கொண்டு செல்வது குறித்து சிறிலங்காவின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையக அதிகாரிகள் பேச்சு நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment