Wednesday, November 19, 2008

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியும்

ஆயுதங்களைக் களைந்து, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான பிள்ளையானுக்கும், கருணாவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கரம் நீட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மக்கள் பிரபாகரனைத் தெரிவு செய்தால் அதனை அரசாங்கம் ஒருபோதும் நிராகரிக்காதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரன் ஆயுதங்களை களைந்து, தேர்தல்களில் போட்டியிட்டால் அது மிகவும் வரவேற்கத் தக்க ஓர் விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், பிரபாகரன் சரணடைந்தால் சட்ட சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என அமைச்சர் பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் பிரபாகரனுக்கு 200 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய அரசாங்கம் மரண தண்டனை வித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், ஆயுதங்களை களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டால் அனைத்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்க முடியும் எனவும், மன்னிப்பு வழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பூநகரி கைப்பற்றப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத கடத்தல்களை வெகுவாக வரையறுக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தோல்வியை ஒப்புக் கொண்டு ஆயுதங்களை களைந்து பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டுமொரு தடவை பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் படுகொலை வழக்கு தொடர்பாக பிரபாகரனுக்கு இந்திய வழங்கியுள்ள தீர்ப்பிற்கு மன்னிப்பு வழங்கப்படும் என்ற ரோஹித்தவின் கூற்றின் மூலம் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் காணப்படும் இரகசிய புரிந்துணர்வு வெளிப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment