Sunday, November 2, 2008

தடுக்க முடியாது போகும் புலிகளின் விமானத் தாக்குதல



விதுரன்
கிளிநொச்சி மற்றும் பூநகரிக்கான இறுதிப் போரைத் தொடங்கப் போவதாக படைத்தரப்பு கூறுகின்றது. இந்தப் பகுதிகளுக்கான படை நகர்வைத் தடுப்பதற்காக புலிகளால் இதுவரை போடப்பட்டிருந்த தடைகளெல்லாம் தகர்த்தெறியப்பட்டுவிட்டதால�
�� இவ்விரு பகுதிகளையும் நோக்கிய படைநகர்வுகளைப் புலிகளால் தடுத்துவிட முடியாதெனப் படைத் தரப்பு நம்புகிறது. இதனால், பூநகரி நோக்கிய நகர்வுக்குச் சமாந்தரமாக கிளிநொச்சி நோக்கிய நகர்வையும் ஆரம்பிக்க படையினர் முயல்கின்றனர்.

மன்னார் - பூநகரி வீதியில் (ஏ-32) நாச்சிக் குடாவுக்கு கிழக்கே வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன்குளம் ஊடாக, யாழ். - கண்டி வீதியில் தெருமுறிகண்டி வரை விடுதலைப் புலிகள் அமைந்திருந்த பாரிய மண் அணை, பூநகரி மற்றும் கிளிநொச்சி நோக்கிய படை நகர்வுகளுக்கு பெரும் தடையாக இருந்தன.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்த மண் அணையைத் தகர்த்து முன்னேற படையினர் பலத்த பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நாச்சிக்குடா முதல் அக்கராயன்குளம் வரையான பகுதிகளை ஊடறுத்து மேலும் வடக்கு நோக்கி படையினர் முன்னேறி விட்டதால் பூநகரி நோக்கியும் அதேநேரம் கிளிநொச்சி நோக்கியும் படைநகர்வுகளை மேற்கொள்வது இலகுவானதென படைத் தரப்பு கருதுகிறது.

பூநகரி மற்றும் கிளிநொச்சியை நோக்கிய படை நகர்வுகளை பாரிய மண் அணைகள் மூலம் இதுவரை தடுத்து நிறுத்திய புலிகள் தற்போது, படையினரின் அடுத்த கட்ட நகர்வையும் தடுக்க ஆயத்தமாகி விட்டனர். தரை வழியாக கடும் தாக்குதலை நடத்தி வரும் புலிகள் தங்கள் வான் வழித் தாக்குதல் மூலமும் அரசுக்கும் படைத்தரப்புக்கும் பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனை எதிர்பார்க் காத படையினர், தரைவழியாக புலிகளின் பதில் தாக்குதலுக்கு முகம் கொடுத்தாலும் அவர்களது வான்வழித் தாக்குதலை முறியடிக்க முடியாது திணறுகின்றனர். இது, மன்னார் தள்ளாடியிலும் கொழும்பு களனிதிஸ்ஸவிலும் வான்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மூலம் தெளி வாகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு புலிகளின் விமானங்கள், வழமைக்கு மாறாக இருவேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒரு விமா னம் மன்னாரில் தாக்குதல் நடத்த மற் றொரு விமானம் கொழும்பில் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரு விமானம் வன்னியின் எல்லையில் தாக்குதலை நடத்தியபோது மற்றைய விமானம் அந்த எல்லையைத் தாண்டி வந்து தாக்குதலை நடத்தி யுள்ளது. வன்னி எல்லையில் தள்ளாடி முகாம் மீது தாக்குதல் நடத்திய விமானம் உடனடியாகத் தளம் திரும்பி விட்டாலும் படையினரது கவனம் முழுவதும் தள்ளாடிக்கு வந்த விமானம் மீதேயிருந்தது.

அதேநேரம் தள்ளாடிக்கு வந்த புலிகளின் விமானத்தை படையினராலோ அல்லது வவுனியாவிலும் கொழும்பிலும் பொருத்தப்பட்டிருக்கும் ராடர்களாலோ கண்டு பிடிக்க முடியவில்லை. தள்ளாடி முகாம் மீதான தாக்குதல் நடத்தப் பட்ட தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து கொழும்பிலிருந்து யுத்த விமானங்களும், இடை மறிப்புத் தாக்குதல் விமானங்களும் மன்னார் நோக்கியும் வன்னியை நோக்கியும் விரைந்தன.

விமானப் படை விமானங்கள் இங்கு விரைந்த அதேநேரம் மன்னார் கரையோரத்தினூடாக புலிகளின் மற்றொரு விமானம் கொழும்பை நோக்கிய பயணத்தை மேற்கொண்டது. ஆனாலும், தள்ளாடிக்கு வந்த விமானத்தைப் போன்றே கொழும்பு நோக்கி வந்த புலிகளின் விமானத்தையும் படையினரால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வவுனியாவில் பொருத்தப்பட்டிருக்கும் இந்தியத் தயாரிப்பு 2 ஈ ராடராலும் கொழும்பின் புறநகர் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் 3 ஈ ராடராலும் புலிகளின் விமானங்களை உடனடியாகக் கண்ட றிய முடியவில்லை. வழமையாக இவ்வாறான வான் தாக்குதல்களுக்கு புலிகள் ஒரே நேரத்தில் இரு விமானங்களைப் பயன்படுத்துவர்.

இம்முறையும் இரு விமானங்கள் வன்னியிலிருந்து அடுத்தடுத்து புறப்பட்ட போதும் அவை ஒவ்வொன்றினதும் தாக்குதல் இலக்குகள் வேறு வேறாயிருந்தன. முதலில் புறப்பட்ட விமானம் தள்ளாடியில் தாக்குதலை நடத்தி படையினரின் கவனத்தை திசை திருப்பும் அதேநேரம் படையினரின் கவனம் முழுவதும் தள்ளாடிப் பகுதியிலும் அங்கு தாக்குதலை நடத்திய விமானம் வன்னியில் தரையிறங்குவதைத் தடுப்பதுமாகவேயிருந்தது.

இதனால் மேற்குக் கரையோரத்தால் கொழும்பு நோக்கி வந்த விமானம் மீது படையினர் கவனம் செலுத்தாததுடன் எவரதும் கண்களி லும் படாமலும் ராடர்களின் திரைகளில் சிக் காமலும் அந்த விமானம் கொழும்புக்குள் நுழைந்துள்ளது.

வன்னியில் படை நடவடிக்கை ஆரம்பமான போது வான்புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதல்களுக்கெல்லாம் அந்த விமானங்கள் மன்னார் காட்டினூடாக மேற்குக் கரையோரத்திற்கு வந்தே கொழும்பிற்குள் நுழைந்தன. ஆனால் தற்போது வன்னிக் களமுனையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் படையினர் வசமாகியுள்ள தால் மன்னார் வான்பரப்பினூடாக வான் புலிகள் வருவது சாத்தியமற்றதென படைத்தரப்பு கருதி வந்தது. மன்னார் - பூநகரி வீதியில் கரையோரமாக இன்று படையினர் நாச்சிக்குடா வரை நிலை கொண்டுள்ளதால் புலிகளின் விமானங்கள் இரணைமடு அல்லது முல்லைதீவிலிருந்து புறப்பட்டு ஏ-9 வீதியை கடந்து மன்னார் வான் பரப்பூடாக மேற்குக் கரையோரத்திற்கு செல்வதை ராடர்கள் மூலம் தான் கண்டுபிடிக்க வேண்டுமென்றில்லை. மன்னார் களமுனையில் நிலைகொண்டுள்ள படையினரே தங்கள் தலைக்கு மேலால் செல்லும் புலிகளின் விமானங்களைக் கண்டுபிடித்து வவுனியாவிலும் கொழும்பிலும் படையினரை உஷார்படுத்திவிட முடியும். தற்போது, வவுனியா - யாழ்.வீதியின் (ஏ 9) கிழக்குப் பக்கமாக புலிகளும் மேற்குப் பக்கமாக படையினரும் நிலைகொண்டுள்ளதால் இரணைமடு பகுதியிலிருந்து அல்லது முல்லைத் தீவின் ஏதாவதொரு பகுதியிலிருந்து புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் மன்னார் மற்றும் கிளிநொச்சி களமுனையில் நிற்கும் படையினரால் அவற்றை மிகச் சுலபமாக அவதானித்து தாக்குதலை நடத்த முடியும்.

ஏனைய பகுதிகளைப் போலன்றி இந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினர் 24 மணிநேரமும் முழுத் தயார் நிலையிருப்பதாலும் தங்கள் விமானங்கள் புறப்படும் போது படையினரின் ராடர்களில் சிக்கி விடக்கூடாதென்பதற்காக புலிகளின் விமானங்கள் மிகவும் தாழ்வாகவே பறக்குமென்பதாலும் மன்னார் மற்றும் கிளிநொச்சிக் களமுனையில் நிலைகொண்டுள்ள படையினரின் தாக்குதல் களுக்கிலக்காகும் வாய்ப்புகள் அதிகமென படைத்தரப்பு நம்பியது.

அத்துடன் புலிகளின் விமானங்கள் மன்னாரிலும் கிளிநொச்சியிலும் நிலைகொண்டுள்ள படையினரின் பார்வையில் சிக்காது கிளிநொச்சிக் கும் முகமாலைக்குமிடையிலான பகுதியூடாக மேலெழுந்து மேற்குக் கரையோரமாக செல்வதென்றாலும் குடாநாட்டுப் படையினரின் கண்களில் அல்லது மண்டைதீவு மற்றும் நெடுந்தீவு கடற்படை முகாம்களில் பொருத்தப்பட்டுள்ள ராடர்களிலும் இந்த விமானங்கள் சிக்கிவிடும்.

அதை விட மன்னார் கடற்பரப்பில் தற்போது 24 மணிநேரமும் கடற்படைப் படகுகள் தீவிர ரோந்தில் ஈடுபடுவதால் அவற்றின் பார்வையிலும் அகப்பட்டுவிடக் கூடும். ஆனாலும் தள்ளாடி முகாம் மீது குண்டுகள் வீழும் வரை புலிகளின் விமானம் வருவது குறித்து படையினருக்கு எதுவும் தெரியாது. புலிகளின் விமானம் புறப்பட்டதை தாங்கள் ராடர்கள் மூலம் அவதானித்ததாக படைத்தரப்பு கூறினாலும் தள்ளாடி முகாம் மிக அருகில் இருந்தததால் அங்கு உடனடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது. தள்ளாடி மீது இரவு 10.35மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ?மிக் மற்றும் கிபிர் விமானங்களும் எவ் 7 இடைமறிப்பு விமானங்களும் எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களும் மன்னார் மற்றும் வன்னியை நோக்கி விரைந்துள்ளன. அதேநேரம் தள்ளாடியில் தாக்குதல் நடைபெற்ற ஒரு சில நிமிடங்களில் புலிகளின் மற்றொரு விமானம் வன்னியிலிருந்து புறப்பட்டு மன்னார் மற்றும் மேற்குக் கரையோரத்தால் கொழும்பை நோக்கி வந்துள்ளது.

தள்ளாடித் தாக்குதலையடுத்து வவுனியா மற்றும் கொழும்பில் ராடர்களில் விமானப்படை விமானங்களின் பறப்புகள் தெரிந்த அந்த நேரத்தில் புலிக ளின் 2 ஆவது விமானம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 அடி உயரத்தில் மிகத் தாழ்வாகப் பறந்து வந்ததை இந்த ராடர்களால் அவதானிக்க முடியவில்லை.

தள்ளாடியில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையா கவே கொழும்பில் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதே தவிர கொழும்பு நோக்கி புலிகளின் விமானம் வருவதை அறிந்து கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.

புலிகளின் ஒரு விமானமே இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தியதாக படைத்தரப்புக் கூறியது. இதுவரை காலமும் புலிகளின் விமானத் தாக்குதல்கள் நடைபெற்ற போது இரு விமானங்களே வந்ததாகக் கூறிவந்த படைத்தரப்பு, இம் முறை இரு விமானங்கள் வந்தபோதும் ஒரு விமானமே வந்ததாகக் கூறுவதன் மூலம், கடந்த முறை வவுனியாவில் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்ற புலிகளின் விமானங்களில் ஒன்றைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக கூறியதை உறுதிப்படுத்த முயல்கின்றது.

இம்முறையும் இரு விமானங்கள் வந்ததாகக் கூறினால் கடந்த முறை தாக்குதலின் போது புலிகளின் விமானங்களில் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவது பொய்யாகிவிடுமென்ற சங்கடத்திலேயே படைத்தரப்பு இவ்வாறு கூறியுள்ளது.

மேற்கு கரையோரமாக வந்த விமானத்தை ராடர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானம் கடல் வழியாக வந்து கொழும்புத் துறைமுகத்தினூடாக நகருக்குள் நுழைந்துள்ளது. துறைமுகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அதிசக்திவாய்ந்த வீடியோ கமராக்கள் புலிகளின் விமானப் பறப்பை படம்பிடித்துள்ளதாக படைத் தரப்பு தெரிவிக்கிறது.

அதேநேரம் புலிகளின் விமானம் நகருக்குள் நுழைந்து விட்டதை அறிந்த படையினர் அதற்கு முன்னரே வான் பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்தியிருந்தனர். மிகவும் தாழ்வாக பறந்துவரும் விமானத்தை எப்படி ராடர்களால் கண்டுபிடிக்க முடியாதோ அவ்வாறே மிகத் தாழ்வாகப் பறக்கும் விமானத்தை விமான எதிர்ப்பு பீரங்கிகளாலும் இலக்குவைக்க முடியாது போயுள்ளது. உயரத்தில் பறக்கும் விமானங்களைத் தாக்கக்கூடிய விதத்திலேயே இந்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருப்பதால் தாழ்வாகப் பறக்கும் விமானத்தை தாக்கக்கூடிய வகையில் இதனை மாற்றியமைப்பது கடினமானதெனவும் படைத்தரப்பில் கூறப்படுகிறது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மீது இந்த விமானம் அடுத்தடுத்து இரு குண்டுகளை வீசியுள்ளது.

குண்டுகள் வீழ்ந்த இடத்தை அறிந்ததும் நகரின் சகல பகுதிகளிலிருந்தும் அந்தப் பகுதியில் வானத்தை நோக்கி கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அதற்கிடையில் புலிகளின் விமானம் கொழும்பு நகரைத் தாண்டிச் சென்றுவிட்டது. இந்தநேரத்தில், தள்ளாடி முகாம் மீது தாக்குதலை நடத்திய புலிகளின் விமானத்தை தேடிக்கொண்டிருந்த விமானப் படையினருக்கு கொழும்பில் நடைபெற்ற தாக்குதல் குறித்து அறிவிக்கப்படவே அவை கொழும்பு நோக்கியும் வன்னி நோக்கியும் மாறிப் பறந்து புலிகளின் 2ஆவது விமானத்தை தேடின. முதல் விமானம் தாக்குதலை நடத்திவிட்டு வன்னித் தளத்திற்கு திரும்பிச் சென்ற பின்னரே விமானப் படை விமானங்கள் அந்த விமானத்தை தேடிச் சென்ற நிலையில், கொழும்புத் தாக்குதலையடுத்து 2ஆவது விமானத்தை அவை தேடத்தொடங்கின. 3000 அடி உயரத்தில் பறக்கும் சுப்ப சொனிக் தாக்குதல் விமானங்களால் 300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த புலிகளின் விமானத்தை எப்படித் தேடமுடியும்? விமானப் படையினரது எவ்-7 இடைமறிப்பு விமானத்தால் கூட புலிகளின் விமானத்தை இலக்கு வைக்க முடியவில்லை.
வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான தாக்குதலின் போது புலிகளின் விமானமொன்றை முல்லைத்தீவு வான் பரப்பில் எவ்-7 இடைமறிப்பு விமானமே தாக்கியழித்ததாக படைத்தரப்பில் கூறப்பட்டது. வன்னியிலிருந்து வவுனியாவுக்கு சில நிமிட நேரத்தினுள் வந்து தாக்குதலை நடத்திவிட்டு உடனடியாகத் திரும்பிச் சென்ற புலிகளின் விமானத்தை முல்லைத்தீவு வான்பரப்பில் வைத்து எவ்-7 விமானம் தாக்கியழித்ததாக படைத்தரப்பு அப்போது கூறியிருந்தபோதும் கொழும்பு வந்து திரும்பிய புலிகளின் விமானத்தை விமானப் படையினரால் ஏன் தாக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. புலிகளின் விமானத்தை எவ்-7 விமானம் கண்டுபிடித்து அதனை, வானிலிருந்து வானுக்குச் செல்லும் ஏவுகணை மூலம் தாக்கியழிக்க விமானி முற்பட்டதாகவும் ஆனால் புலிகளின் முன்னெச்சரிக்கையால் அது முடியாது போய்விட்டதாகவும் படைத்தரப்பில் கூறப்படுகிறது.

எவ்-7 இல் உள்ள விமானங்கள் ஏவுகணை வெப்பத்தை தேடிச்சென்று (heat seeking missile) தாக்கும் வல்லமை கொண்டது. இதன்படி இந்த விமானத்திலிருந்து ஏவுகணையைச் செலுத்தினால் அந்த ஏவுகணை எதிரி விமானத்தின் இயந்திரத்தை தேடிச் சென்று தாக்கி அதனை அழித்துவிடும். அந்த நோக்கிலேயே இம்முறையும் எவ்-7 விமானி புலிகளின் விமானத்தை நோக்கி ஏவுகணையை செலுத்த முற்பட்டதாகவும் எனினும் புலிகள் தங்கள் விமானத்தின் இயந்திரத்தை நன்கு மூடி கவசத் தகடுகளை (armour plates) பொருத்தியிருந்ததால் எவ்-7 விமானத்தின், வெப்பத்தை நாடிச் சென்றுதாக்கும் ஏவுகணைப்பொறிமுறை (heat seeking missile system) செயற்படாது போகவே ஏவுகணையை புலிகளின் விமானம் மீது செலுத்த முடியாது போய்விட்டதாகவும் இதனால் புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்த முடியவில்லையென்றும் படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

எனினும், புலிகளின் விமானத்தை எந்தப் பிரதேசத்தில் எவ்-7 விமானி அவதானித்து அதன் மீது ஏவுகணையைச் செலுத்தி அழிக்க முற்பட்டார் என்பது குறித்து படைத்தரப்பு எதுவும் கூறவில்லை.

அதேநேரம் புலிகளின் இந்த விமானத்தை எவ்-7 விமானி அவதானித்திருந்தால் அதனை ஏவுகணையால் தாக்கி அழிக்க முடியாது போயிருந்தாலும் அதனைப் பின்தொடர்ந்து சென்றிருந்தால் அந்த விமானம் தரையிறங்கும் இடத்தை அவதானித்து அதன் மீது குண்டு வீச்சை நடத்தி அதனை அழித்திருக்க முடியும். புலிகளின் இந்த விமானம் வன்னியிலிருந்து சுமார் 250 மைல் தூரத்திற்கு ஒரு மணிநேரம் பறந்து வந்து தாக்குதலை நடத்திவிட்டு மீண்டும் ஒரு மணிநேரம் 250 மைல் தூரத்திற்கு பறந்து சென்றே தரையிறங்கியுள்ளது. இடையில் தங்கள் விமானத்தை விமானப்படை விமானங்கள் அவதானித்துவிட்டதாக போக்குக் காட்டி திசை திரும்பிச் செல்லவும் முடியாது.

அதன் எரிபொருள் கொள்ளளவு குறைவென்பதால் எவ்-7 இன் பார்வையிலிருந்து தப்பியிருக்க முடியாது. அவ்வாறானதொரு நிலையில் அந்த விமானம் தரையிறங்கியபோது விமானப்படை விமானங்களால் அதனை அழித்திருக்க முடியும். ஏன் அதனை அழிக்க முடியாது போனதென்ற கேள்வியும் எழுகிறது. புலிகளின் விமானங்கள் புறப்பட்டபோது கண்டுபிடிக்க முடியவில்லை.

அவை தள்ளாடியிலும் கொழும்பிலும் தாக்குதலை நடத்தியபோது அழிக்க முடியவில்லை. தள்ளாடிதான் மிக அருகிலென்றால் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டுப்போக அந்த விமானம் இரு மணிநேரங்களுக்கு மேல் பறந்தபோதும் அதனை அழிக்க முடியவில்லை. கடைசியில் அந்த விமானம் வன்னியில் தரையிறங்கியபோது விமானப்படையின் அனைத்து தாக்குதல் விமானங்களும் வன்னியில் நின்றும் அப்போது கூட அந்த விமானத்தை ஏன் தாக்கியழிக்க முடியவில்லையென்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் புலிகளின் விமானங்கள் புறப்பட்டு தரையிறங்கும் வரை எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினரால் அவற்றை தாக்கியழிக்க முடியாதென்றதொரு நிலையேற்பட்டுள்ளது.

புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் ஏதாவதொரு கட்டத்திலாவது அவற்றைத் தாக்கியழிப்பதற்கான திட்டங்கள் போட்டப்பட்டிருந்தபோதும் அதில் எந்தவொரு கட்டத்திலும் வெற்றிபெற முடியவில்லையென்ற ஏமாற்றம் படையினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் விமானப் படை விமானங்களாலும், கொழும்பு மற்றும் பகுதிகளிலுள்ள வான் பாதுகாப்பு பொறிமுறைகளாலும் தங்கள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தில்லை என்பதை தள்ளாடி மற்றும் களனிதிஸ்ஸ தாக்குதல்கள் மூலம் புலிகள் உணர்ந்துள்ளனர். மிகத் தாழ்வாகப் பறந்து தாக்குதலை நடத்தும் புலிகளின் விமானங்களைச் சமாளிக்கக்கூடிய வான் பாதுகாப்புப் பொறிமுறையைப் படையினர் பெறுவதற்குள் புலிகளின் விமானங்கள் கொழும்பில் மேலும் தாக்குதல்களை நடத்தலாமென்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் புலிகளின் விமானங்கள் கொழும்புக்கு வருவதைத் தடுப்பதற்காக வவுனியா, அநுராதபுரம் பகுதிகளில் விமானப்படையினரின் பலத்தை நன்கு அதிகரிக்கவும் மேற்கு கரையோரத்தில் கடற்படையினரின் பலத்தை அதிகரித்து விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகளை கடற்படை படகுகளில் பொருத்தவும் அரசு ஆலோசித்து வருகிறது.

இம்முறை கொழும்பு வந்த புலிகளின் விமானத்தின் மேற்பூச்சால் ராடர்களால் விமானத்தை கண்டறிய முடியாது போய்விட்டதாக படைத்தரப்பில் கூறப்படுகிறது. வானில் தென்படும் எந்தப் பொருளிலும் பட்டுத் தெறிக்கும் கதிர்கள் ராடர் திரைகளில் விழும்போது அவை என்ன பொருட்களென்பதை ராடர் கண்டறியும். அதேநேரம் ஒரு பொருளில் ஒளிபட்டுத் தெறிக்காதவாறு அந்த ஒளிக்கதிர்களை உறிஞ்சி அதனை தெறிப்படையச் செய்யாத இரசாயனப் பூச்சுக்களை தங்கள் விமானத்தில் புலிகள் பூசியுள்ளதன் மூலம் புலிகளின் விமானங்கள் பறக்கும்போது அவை ராடர் திரையில் சிக்க முடியாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே புலிகளின் விமானங்கள் இம்முறை தள்ளாடிக்கும் கொழும்புக்கும் வந்து தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கருதும் படைத்தரப்பு புலிகள் இம்முறை இருபொறிமுறைகளைக் கடைப்பிடித்து தங்கள் விமானங்களை பாதுகாத்துள்ளதாக கருதுகின்றனர்.

தங்கள் விமானங்கள் ராடர்களில் சிக்குவதைத் தவிர்த்த அதேநேரம் தங்கள் விமானங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடைபெறுவதையும் தவிர்த்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் புதிய ஆபத்துகள் ஏற்படலாமென படைத்தரப்பில் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் புலிகளின் சிறிய ரக விமானங்கள் தொடர்ந்தும் படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாயுள்ளது. களனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மீதான தாக்குதலானது புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லையென படைத்தரப்பு கூறினாலும் அது, அங்கு ஆறுமாத மின் உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலைமை மேலும் தொடருமானால் தெற்கில் இராணுவ நிலைகள் மட்டுமல்லாது பொருளாதார நிலைகளுக்கும் பேரழிவுகள் ஏற்படலாமென்ற அச்சம் அரசுக்கேற்பட்டுள்ளது

தினக்குரல்


No comments:

Post a Comment