Wednesday, November 19, 2008

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்காவை சிறப்பாக இயக்க 4 மாத கால அவகாசத்துக்கு கோரிக்கை




ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகள் நிறுவனங்கள் இரண்டையும் ஒருசேர முன்னேற்றகரமாக இயங்குவதற்கு 4 மாத கால அவகாசம் தருமாறு சிவில் விமான சேவைகள் மற்றும் துறைமுக அமைச்சர் சமல் ராஜபக்ஷ திங்கட்கிழமை சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மிஹின் லங்கா நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

ரவி கருணாநாயக்க எம்.பி.

முன்னதாக பிரேரணையை விவாதத்துக்கென சபைக்கு சமர்ப்பித்து பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான ரவி கருணாநயக்க தெரிவிக்கையில்;

""ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் மிஹின் லங்கா நிறுவனத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மிஹின் லங்கா விமான சேவைக்கு 40 50 சதவீதமான பயணிகளே இருந்தனர். ஏற்கனவே, நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிலையில் அந்த நிறுவனத்துக்கு இரண்டாவதாகவும் பழைய விமானமொன்று கொள்வனவு செய்யப்பட்டது. அதன் பராமரிப்புக்கே பெருந்தொகை செலவிட வேண்டி ஏற்பட்டது.

மிஹின் லங்கா நிறுவனம் இலங்கை வங்கிக்கு மட்டும் 1,200 மில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் பெருந்தொகையொன்றை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. மிஹின் லங்கா நிறுவனம் பல நிறுவனங்களுக்கும் மொத்தமாக 21 கோடி ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

ஏற்கனவே, ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் விமான சேவை அரசாங்கத்தின் வசமிருக்கும் நிலையில் இன்னுமொரு விமான சேவை அவசியமில்லை. மிஹின் லங்கா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 6 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸுக்கு பயன்படுத்தி பல சலுகைகளை வழங்க முடியும்' என்றார்.

தயாசிறி ஜயசேகர

பிரேரணையை வழிமொழிந்து பேசிய ஐ.தே.க.வின் தயாசிறி ஜயசேகர எம்.பி. கூறுகையில்;

""அரசாங்கம் நிதி இல்லாமல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பிணைமுறியாக கேட்டபோது எவரும் கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் மிஹின் லங்கா நிறுவனத்துக்கென 6,000 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கியிருப்பது தேவையற்ற விடயம்' என்றார்.

பிரதி அமைச்சர் சரத் குணரட்ண

இதேநேரம், சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ண விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில்;

""மிஹின் லங்கா நிறுவனத்துக்கு போயிச் விமானமொன்று ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுவிட்டது. நிறுவனங்கள் நட்டமடைவதுவழக்கம். அது இன்று உலக நாடுகளிலும் இடம்பெறுகிறது. நாம் மிஹின் லங்காவுக்கும் நிதி ஒதுக்கியுள்ளோம். ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸுக்கும் நிதி ஒதுக்கியுள்ளோம்' எனக் கூறினார்.

பிரதி நிதியமைச்சர்

இதன் பின்னர் பேசிய பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய;

""இது ஐ.தே.க. பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் எடுத்துக் கொண்ட விடயம். ஏற்கனவே, இந்த விடயம் பற்றி பலமுறை பேசியாகிவிட்டது. இதிலிருந்து ஐ.தே.க.வின் வங்குரோத்து நிலை தெரிகிறது.

ஜனாதிபதி மிஹின் லங்கா நிறுவனத்தை ஆரம்பித்தபோது இலங்கைக்கு சொந்தமாக எந்த விமான சேவையுமில்லை. இதற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியை இவர்கள் பாரியதொரு தொகையாக பெரிதுபடுத்தி காட்டுகின்றபோதிலும், ஏனையவற்றுடன் பார்க்கும் போது மிகக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று குறைந்த கட்டணத்தை கொண்ட விமான சேவையின் தேவை உலகளாவிய ரீதியில் உணரப்படும் காலமிது. மிஹின் லங்கா சேவையில் இருந்தமையால் 20 கோடி ரூபா இலாபம் பெற முடிகிறது. அதைப்பற்றிப் பேசினால் அது தங்களது பிரசாரத்துக்கு பாதிப்பாக போய்விடுமென்பதால் அதைப்பற்றி பேசமாட்டார்கள்.

உலகில் பல விமான சேவைகள் வீழ்ச்சி கண்ட காலமிது. இந்த நிலையில் எமது இந்த ஒரு நிறுவனத்தை மட்டும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவது முறையல்ல. நாம் நிறுவன நடவடிக்கைகளை முறையாக கொண்டு நடத்த ஆலோசனை குழுவொன்றையும் நியமித்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ

விவாதத்தின் இறுதியில் பதிலளித்து பேசிய சிவில் விமானசேவைகள் மற்றும் துறைமுக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிக்கையில்;

""ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனமானது எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக காலத்தில் சந்தித்ததை விட குறைவான நட்டத்தையே எமது நிர்வாக காலத்தில் சந்தித்துள்ளது. எவ்வாறிருப்பினும் ஒக்டோபர் மாதத்திலிருந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நான்கு மாத கால அவகாசம் தாருங்கள். மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் இரு நிறுவனங்களையும் முறையாக செய்து காண்பிக்கிறோம்' என்றார்.

No comments:

Post a Comment