Sunday, November 2, 2008

ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள்: நடிகர் சத்யராஜ்



ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள் ஆவர் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று சனிக்கிழமை நடிகர்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்று நடிகர் சத்தியராஜ் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் யாரும் குண்டுவீசி கொல்லப்படவில்லை. எல்லோரும் சர்க்கரை நோய் போன்ற உடல்நலம் இல்லாமல்தான் இறந்து போயிருக்கிறார்கள். செஞ்சோலை என்கிற இடத்தில் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுவீசியபோது கூட போராளிகள் பதுங்கியிருந்ததால் குண்டு வீசினோம் என்று சிங்கள அரசு தெரிவித்தது. அதைக் கேட்டு இளிச்சவாயங்க நாமும் நம்புறோம்.

ஊட்டியில் படப்பிடிப்பு நடந்த இடத்தில் இப்போது படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. அங்கிருக்கும் ஒரு குரங்குக் கூட்டம் அங்கிருந்து வேறு இடத்திற்கு போகுமாம். அங்கு சூட்டிங் நடத்தினால் அந்த குரங்குகளுக்கு மூட் அவுட்டாகி அவை இனவிருத்தி செய்ய முடியாமல் போகும் என்று கூறி படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிப்பதில்லை.

குரங்கைவிட கேவலமாக தமிழனை மதிப்பதால்தான் அவன் செத்தாலும் பரவாயில்லை என்று சகலவிதமான அட்டூழியங்கையும், அநியாயங்களையும் உலகத்தில் உள்ள எல்லா ஏகாதிபத்திய நாடுகளும் திட்டம் போட்டு செய்து கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு, இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்வதில்லை என்று கூறியுள்ளது. அப்படி உதவி செய்யாமல் இருந்தால் நன்றி. இனிமேலும் உதவி செய்யாமல் இருக்க வேண்டும். இராணுவ உதவி செய்தால் அதில் தமிழனின் பணமும் அதில் சேர்ந்திருக்கிறது.

அதாவது இந்தியா, இராணுவத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், இந்தியாவில் இருக்கின்ற வருமான வரி கட்டுபவர்களின் பணத்தில் இருந்துதான் அந்தப் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதைக் கொண்டுதான் ஆயுதங்கள் வாங்குகிறீர்கள். அதில் தமிழனின் வரிப் பணமும் இருக்கிறது.

அவ்வாறு வாங்கப்படும் ஆயுதங்களை இலங்கைக்கு அனுப்பினால் அதை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் ஈழத் தமிழர்களை அடித்து கொலை செய்வதற்கு பயன்படுத்தப்படும். அப்படியென்றால் தமிழனை அழிப்பதற்கு தமிழனின் வரிப் பணம் பயன்படுத்தப்படுகிறது என்று ஆகும். இது உண்மையா? இல்லையா? எங்களுடைய வரிப்பணத்தைக் கொண்டு எங்களது தமிழர்களை அழிப்பது என்ன நியாயம்?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது இலங்கை தமிழர்களை இங்கு அழைத்து வந்து மதுரை, சேலத்துக்கு பக்கத்தில் இடம் கொடுத்து தங்க வைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். தமிழன் இலங்கைக்கு பிழைக்கப் போய் அங்கு பிரச்சினை செய்வதாக யாரும் கருதக்கூடாது என்று தொல்.திருமாவளவன் தெளிவாகக் கூறினார். தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

ஒரிசா பகுதியில் இருந்து இலங்கைக்குப் போய் குடியேறிவர்கள்தான் சிங்களவர்கள். அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதாலே சிங்கள நாடு என்று கூறுகிறார்கள். இலங்கையில் வந்தேறியவர்களைத் துரத்த வேண்டும் என்றால், நியாயமாகப் பார்த்தால் அங்கிருந்து சிங்களவர்களைத்தான் துரத்த வேண்டும். அவர்களுக்குத்தான் சேலம், மதுரை பக்கத்திலே இடம் கொடுக்க வேண்டும். இலங்கையில் கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை இல்லை. யாரும் சும்மா சண்டை போடுவதில்லை. உயிரைப் பணயம் வைத்து சண்டை போடமாட்டார்கள். சிங்கள தீவிரவாதத்தால்தான் தமிழன் ஆயுதம் ஏந்தினான்.

இனப் படுகொலை நடைபெறும் இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். பிறகு அமைதிப் பேச்சு நடத்தி ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதில் தமிழனுக்கு எத்தகைய உரிமை வழங்கப்பட்டு உள்ளது என்பது கடைசி தமிழன் வரை படித்துக் காட்டப்பட வேண்டும்.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஈழத் தமிழர்களால் உங்களுக்கு ஏற்பட்ட வலிகள், ரணங்களை உங்களது சந்ததிகளுக்கு சொல்லி தமிழ் உணர்வு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் உணர்வால் பேசுபவர்கள் மீது சட்டம் பாயக்கூடாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அனைவரும் ஈனத்தனமானவர்கள் ஆவர் என்றார் சத்யராஜ்.

இந்நிகழ்வில் நடிகர் சரத்குமார் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்திற்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளித்தோம். இந்தப் போராட்டத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளீர்கள் என்று சிலர் ஆதங்கப்பட்டார்கள். அடக்கிவிட்டீர்கள் என்று கூட சொன்னார்கள். தனிப்பட்ட முறையிலே பேசி விளைவை சந்தித்து இருக்கலாம். ஒரு அமைப்பு என்று வரும்போது நியாயமான தீர்க்கமான நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே நடிகர் சங்கம் இருந்து வந்துள்ளது.

சீனா, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் காலங்களிலும் நடிகர் சங்கம் தனது உணர்வுகளை சிறப்பாக பதிவு செய்து வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் சினிமா கலைஞர்களின் முதல்கட்ட போராட்டம் இராமேஸ்வரத்தில் நடந்தது.

இரண்டாம் கட்ட போராட்டம் மனித சங்கிலி. இது மூன்றாவது கட்ட போராட்டம் ஆகும். ஆகவே, எங்களுக்குள் எந்தப் பிரிவும் கிடையாது. எங்களை யாரும் பிரித்துப் பார்க்கவும் முடியாது. உணர்ச்சிகரமாகப் பேசினால் அதனை மறப்போம் மன்னிப்போம் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் கலைக் குடும்பமாக ஒன்றாக இருந்து செயற்பட வேண்டும். உணர்ச்சிகரமாகப் பேசி சிறை செல்ல நாங்கள் தயாராக இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். சட்டம் ஒன்று இருக்கிறது. அதன்படி பேச வேண்டும் என்பதால்தான் அறவழியில் உண்ணாநிலைப் போராட்டடம் நடத்துகிறோம்.

சினிமா அனைவரையும் மகிழ்விக்கும் இடம். மக்களுக்காக போராட எப்போதும் காத்து இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். கலைக்குடும்பம் என்றும் தனது உணர்வை வெளிப்படுத்தும் என்பது உண்மை. அமைதியான ஆறு ஆழமாகப் பாயும் என்பார்கள். அதுபோல நடிகர் சங்கமும் அமைதியான ஆறு போன்றது. அது எப்போதும் தனது உணர்வை ஆழமாகப் பதிவு செய்யும்.

இலங்கையில் 60 ஆண்டுகளாக அமைதி ஏற்படவில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அங்கு உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழினம் அழிக்கப்படுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற அறவழிப் போராட்டம் தேவை என்றார் அவர்.

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

மண் தோன்றிய காலத்தில் இருந்தே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிழைப்புக்காக அவர்கள் அங்கு போகவில்லை. பிழைப்புக்காக போனதாக யாராவது கூறினால் அது வரலாற்றுப் பிழையாகும்.

சிங்கள அரசுக்கும் தமிழ் இனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடே இப்போதைய பிரச்சினைக்கு காரணம். இலங்கையில் நடப்பது வன்முறை வெறியாட்டம் அல்ல. அது ஒரு விடுதலைப் போராட்டம் ஆகும்.

இலங்கைக்கு உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். போர் நிறுத்தத்திற்காக இந்தியா தலையிட வேண்டும். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசிவிட்டு சென்ற பிறகு பிரச்சினையின் தீவிரம் குறைந்திருக்க வேண்டும். இந்தியா நினைத்தால் 24 மணி நேரத்தில் அங்கு போர் நிறுத்தம் கொண்டு வர முடியும்.

நிவாரண உதவிகள் செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவனம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும். இலங்கை நிவாரண நிதிக்கு நான் ரூ.50 ஆயிரம் தருகிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment