Wednesday, November 19, 2008

முன்னாள் உறுப்பினர்களை விடுதலைப் புலிகள் இணைத்துக்கொள்ள முயற்சி: துணை இராணுவக் குழுவின் தலைவர்



சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் பலரை உள்வாங்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக துணை இராணுவக் குழுவின் தலைவர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் கடந்த வாரம் பிள்ளையான குழுவின் முக்கிய உறுப்பிரான ரகு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் தமது பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிள்ளையான் சந்தித்த போதே இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு எமது குழுவின் பல உறுப்பினர்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பு கொண்டதாக பல உறுப்பினர்கள் முறையிட்டுள்ளனர்.

எமது உறுப்பினர்களுக்கு ஆபத்துக்கள் அதிகம் உள்ளதனால் எமது முக்கிய உறுப்பினர்களுக்கான பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும். எமக்கு பல குழுக்களிடம் இருந்து ஆபத்துக்கள் தோன்றியுள்ளன.

ரகுவின் கொலை தொடர்பாக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விடுதலைப் புலிகள் கிழக்கில் ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். அவர்கள் துணை இராணுவக் குழுவினரையும் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். இதன் பின்னணியிலேயே எமது முகாம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

இதனிடையே, கடந்த சில மாதங்களில் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவிலிருந்து தப்பியோடிய 70-க்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக சிபி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இவர்களில் சிலர் தப்பிச்செல்வதற்கு முன்னர் தமது சகாக்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு சென்றிருப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment