Wednesday, November 19, 2008

''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி...




''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?''


''2005 நவம்பர் மாதத்தில் இலங்கையின் ஜனாதி பதியாகப் பொறுப்பேற்றேன். அந்தத் தருணத்தில் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கே, விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஒப்பந்தத்தை மதித்து நடந்து கொள்வதாகக் கூறிய புலிகள், தெற்கில் உள்ள அப்பாவிப் பொதுமக்களையும், வடகிழக்கில் உள்ள தன்னு டைய அரசியல் எதிரிகளையும் தாக்கினார்கள். இப்படி ஒப்பந்தத்தை மீறினார்கள். தமிழரான இலங்கை யின் முன்னாள் வெளிவிவகார அமைச் சர் கௌரவ லட்சுமண் கதிர்காமர், போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதுதான் புலிகளால் கொல்லப்பட்டார்.

போர்நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட இலங்கை கண்காணிப்பு குழு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை 3,850 தடவை புலிகள் மீறி இருக்கிறார்கள் என்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை அரசாங்கப் படைகள் 351 தடவைகள் மாத்திரமே போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளன என்றும் அவர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நான் பதவியேற்ற பின் முதல் 7 மாதத்தில் 280 பேரைப் புலிகள் கொன்றுவிட்டார்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள 50,000 மக்களுக்குக் குடிநீரையும் 30,000 ஏக்கருக்கு தேவையான பாசனத் தண்ணீரையும் வழங்கி வந்த மாவிலாறு அணையை மூடி, மக்களின் அடிப்படை தேவைகளை மறுத்ததனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டேன்!''

''விடுதலைப் புலிகளை ஒடுக்குவதாகக் கூறிக்கொண்டு, அப்பாவித் தமிழ் மக்கள் மீது குண்டுகள் வீசுவது என்ன நியாயம்?''

''எம்முடைய ராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதே அன்றி, தமிழ் மக்களுக்கு எதிரானவை அல்ல. எவ்வாறெனினும், விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாகப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும், பாதுகாப்பான பாதைகளின் ஊடாக ராணுவ நடவடிக்கைகளற்ற தென் பகுதிகளுக்கு செல்வதற்கு இடம் அளிப்பதில்லை என்பதும், சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கிறது.''

''கொழும்பில் விடுதலைப் புலிகள் விமானத் தாக்கு தல்நடத்திய போது, ஏன் நீங்கள் பதுங்கு குழியில் பதுங்கினீர் கள்?''

''இது புலிகளின் பொய்ப் பிரசாரம். தாக்கு தல் நடத்தப்பட்ட பகுதிகளில் வசித்த மக்களிடம் நான் அப்போது விசாரித்துக் கொண்டிருந்தேன். நான் பதுங்கு குழிக்குச் சென்று ஒளிய வேண்டிய அவசிய மில்லை. எனக்குப் போதிய அளவு பாதுகாப்பை வழங்கக்கூடிய ஆற்றல் இலங்கைப் படைக்கு உண்டு!''

''உங்கள் மைத்துனர் திருகுமார் நடேசனும் ஓர் தமிழர்தான். அப்படி இருக்க, தமிழர்கள் மீது இந்தளவு விரோதம் காட்டுகிறீர்களே?''

''அவர் என்னுடைய மைத்துனர் அல்ல. அவர் என்னுடைய மருமகளைத் திருமணம் செய்துள்ளார். என்னுடைய குடும்பத்தில் பல தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபை யில் முதன் முதலாகத் தமிழில் உரையாற்றிய தலைவர் நான்தான். எம்முடைய நாடாளுமன்றத்தில்கூட தமிழில் உரையாற்றினேன். எனக்கு எப்போதும் தமிழர்கள் மீது விரோதமில்லை!''

''இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகிறது. இதில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?''


''இலங்¬கைத் தமிழர்களுக்காக 800 டன் நிவாரணப் பொருட்களை இந்திய அரசு வழங்குவதையும், அதில் தமிழகமும் மனிதாபிமான அடிப்படையில் மேலதிகமாகப் பங்களிப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம்.''

''விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப் பட்ட கருணாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளித்ததோடு, மந்திரி பதவி அளிக்க எண்ணம் கொண்டிருப்பது சரியா?''

''கருணாவும் ஏனைய பல போராளிகளும் ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய ஜனநாயக இலக்கை அடைவதற்கான இந்த உறுதியான நடவடிக்கை, பாராட்டப்பட வேண்டும். இந்தக் கடைசி நேரத்திலாவது, பிரபாகரன் இந்த நல்ல முன்மாதிரியைக் கருத் தில் கொள்வார் என்று நம்புகிறேன்.''

''இலங்கைப் பிரச்னையைத் தீர்ப்பதற் காக, தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இலங்கைக்கு அழைத்தீர்கள். அவர் வந்தால் தீருமா பிரச்னை?''

''முதலமைச்சர் கருணாநிதியை நான் மதிக்கிறேன். தமிழர் உட்பட அனைத்து சமூக மக்களின் அபிலாஷை களையும் கருத்தில்கொண்டு, ஒன்றுபட்ட இலங்கைக்குள், பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சியில் அவருடைய கருத்துகளுக்கும், ஆலோசனை களுக்கும் மதிப்பளிக்கப்படும்.''

''ராடார்களைத் தவிர வேறு எவ்வகையான ராணுவ உதவிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கத்தால் அளிக்கப்பட்டிருக்கின்றன?''

''இவ்விஷயம் தொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அண்மையில் தமிழகத்தில் அளித்த பதில்களை நான் ஆமோதிக்கின்றேன். அதைத் தவிர வேறு எதுவும் இது தொடர்பாக நான் அதிகமாகக் கூறுவதற்கில்லை.''

''இந்திய அரசாங்கத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளை, இலங்கையில் சீனா ராணுவத் தளமொன்றை அமைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரிய ஆபத்தாயிற்றே?''

''சீனாவுக்கு ராணுவ தளம் இலங்கையில் இருக் கிறது என்பதை முழுமையாக மறுக்கிறேன். மற்ற நாடுகளுடனான இலங்கையின் உறவுகளினால், இந்தியா வுடனான தனிச் சிறப்பான உறவுகளுக்கு எந்த ஒரு வகையிலும் பாதிப்பு ஏற்படாது.''

''முப்பது ஆண்டுகளாகப் புலிகளுடன் போர் புரிந்தும் அவர்களை இலங்கை அரசாங்கத்தால் தோற் கடிக்க முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளாரே?''


''தமிழ்நாட்டில் இருக்கிற பலரைப் போன்று ரஜினிகாந்த் அவர்களும், இலங்கைப் பிரச்னை பற்றிய ஒருதலைப்பட்சமான செய்திகளையே அறிந்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பான பிரசாரங்களை வைத்து முடிவெடுக்காமல், இந்தப் பிரச்னை குறித்து ஆழமாக ஆராய்ந்து அறிந்துகொள்ள முனையுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.''

''இலங்கையில் சிங்கள மாணவர்கள் 40 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் அதே வேளை, தமிழ் மாணவர்கள் 80 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தமிழர்களை அடக்குவதற்கான இன்னுமொரு முயற்சிதானா இது?''

''இது முற்றிலும் தவறான, அடிப் படையற்ற யூகக் கருத்து. இனத்தை அடிப்படையாகக் கொண்டு, வெட்டுப் புள்ளியை (மதிப்பெண்) நிர்ணயிக்கும் பாரபட்சமான முறைமை, இலங்கை யில் எந்தவொரு இடத்திலும் இல்லை. தமிழ் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்குமான சித்தியடைவதற்கான தகைமைப் புள்ளிகள் ஒரே சமமாக இருக்கின்றன. பல்கலைக்கழக அனுமதி முற்றுமுழுதாகத் திறமையின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதே வேளை, தமிழர் உட்பட அனைத்து சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள மாணவர்களுக்கும் தடையின்றி இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளுக்கும் இத்தகைய வசதிகள் வழங்கப்பட்டன.''

''இலங்கை ஒரே நாடு என்கிறீர்கள். ஆனால், தமிழர் பகுதிகளில் மட்டும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகமாக இருக்கின்றனவே! அது ஏன்?''

''இலங்கைத் தமிழர்களில் 52 சதவிகிதத்தினர், வட மாகாணத்துக்கு வெளியே சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் வாழ்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வட மாகாணத்தின் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் விலை வித்தியாசம் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். இதற்குக் காரணங்கள்... விடுதலைப் புலிகள் பொருள் விநியோக முறைமையை சீர்குலைப்பது, உணவு உட்பட வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படுகிற அனைத்துப் பொருட்களுக்கும் சட்ட விரோதமாக வரி விதிப்பது, இதனால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு உள்ளூர் மக்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது ஆகியவைதான். குறிப்பாக, விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்குச் செல்வதற்கு, ஒரு லட்ச ரூபாயிலிருந்து மூன்று லட்ச ரூபாய் வரை புலிகள் வரி வசூலிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டும், அதில் கணிசமானவற்றை விடுதலைப் புலிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இதுதான் விலை வித்தியாசத்துக்குக் காரணம்.''

''செர்பிய மக்களுக்கெதிராக இனப் படுகொலை நடத்தியதற்காக, செர்பிய ஜனாதிபதியாக இருந்த 'மிலோசோவிக்'கை, ஐ.நா. கண்டித்ததோடு அதன் க்ரைம் டிரிப்யூனல் மூலம் குற்றவாளியாக அறிவித்ததைப் போல், தங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?''

''இலங்கையில் தற்போது நடைபெற்று வருவது, இனப் படுகொலை என்றே தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். 52 சதவிகித தமிழ் மக்கள் வட மாகாணத்துக்கு வெளியே ஏனைய சமூகத்தவர்கள் மத்தியில் நட்புறவோடு வாழ்கிறார்கள். உண்மையில், விடுதலைப் புலிகள்தான் 1990-ம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் முஸ்லிம்களை வட மாகாணத்திலிருந்து வெளியேற்றி, இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள்தான் அதிகளவு தமிழ்த் தலைவர்களைக் கொன்றிருக்கிறார்கள்.''

''யுத்த நிறுத்தத்துக்குத் தயார் என புலிகள் வெளிப்படையாக அறிவித்தும், நீங்கள் போரில் உறுதியாக இருக்கிறீர்களே?''

''விடுதலைப் புலிகள் பலமிழந்திருக்கும் சந்தர்ப்பங் களில் யுத்த நிறுத்தத்தைக் கோரி, தங்களுக்குத் தேவை யான ஆயுதங்களை சேகரித்து, மீண்டும் பலப்படுத்திக் கொள்வார்கள். யுத்த நிறுத்த காலத்தின்போது சிறுவர் களையும், பொதுமக்களையும் வலுக்கட்டாயமாகத் தம்முடைய படையில் சேர்த்துக் கொள்வார்கள். யுத்த நிறுத்த காலப் பகுதியில், மாற்று அரசியல் கருத்துடை யோரை அழிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். கடந்த காலத் தவறுகளை மீண்டும் இழைப்பதற்கு எம்முடைய அரசாங்கம் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பவேண்டும் என்று மீண்டும் ஒருமுறை உங்கள் மூலமாகவும் வேண்டிக் கொள்கிறேன்.''

''அண்மையில் இலங்கையின் தலைநகரான கொழும்பு நகரின் மின் உற்பத்தி நிலையம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தி சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இது உங்கள் அரசாங்கதுக்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவால்தானே...''

''விடுதலைப் புலிகளின் விமானபலம், தென் ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்குமே ஒரு சவால்தான்!''

விகடன்

No comments:

Post a Comment