Wednesday, November 19, 2008

ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளத்திற்கு முன்நகர்வு

வவுனியா, ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் (ஐ.சி.ஆர்.சி.) நேற்று செவ்வாய்க் கிழமை காலை செல்லாததால் வன்னிக்கான தரைவழிப்பாதை

("ஏ9' வீதி) மூடப்பட்டிருந்தது.

ஓமந்தையில் நிலை கொண்டிருந்த படையினர் "ஏ9' வீதியூடாக புளியங்குளம் சென்றுள்ளதாகக் கூறப்படுவதையடுத்தே ஐ.சி.ஆர்.சி.யினர் நேற்று சோதனை நிலையப் பணிக்குச் செல்லவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

புளியங்குளத்திலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதால் எதுவித மோதலுமின்றி ஓமந்தையிலிருந்து படையினர் புளியங்குளம் சந்திக்கு சென்றுள்ளதாகவும் இதனால் இராணுவ சோதனை நிலையம் அமைக்கப்படும் வரை ஐ.சி.ஆர்.சி.யினர் எங்கிருந்து பணியாற்றுவதென்ற கேள்வியும் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இராணுவ சோதனை நிலையத்தில் பணியாற்றும் ஐ.சி.ஆர்.சி.யினரின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட இரு தரப்பும் உறுதிப்படுத்த வேண்டுமென இருதரப்பிடமும் ஐ.சி.ஆர்.சி. மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த வாரமும் இதே போன்றதொரு கோரிக்கையை ஐ.சி.ஆர்.சி. முன்வைத்து ஓமந்தை சோதனை நிலையத்திற்கு பணிக்கு செல்லாததால் வன்னிக்கான பாதை இரு நாட்கள் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று ஓமந்தை சோதனை நிலையம் மூடப்பட்டிருந்ததால் வன்னிக்கான உணவு வாகனத் தொடரணியும் செல்லவில்லை.

வாரத்தில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வன்னிக்கு உணவு லொறிகள் செல்லும் தினங்களென்பதால் நேற்றும் அங்கு உணவுப் பொருட்களுடன் செல்ல வாகனத்தொடரணி தயாராயிருந்த போதும் பாதை மூடப்பட்டிருந்ததால் அவை செல்லவில்லை.

இன்று அவை செல்லுமா எனத் தெரியவில்லை.





No comments:

Post a Comment