Wednesday, November 19, 2008

புலிகளின் விமானங்களை தப்பவிட்டதால் விமானப்படை இரு உத்தியோகத்தர்கள் வெளியேற்றம்




அண்மையில் புலிகள் இயக்கத்தின் விமானப்பிரிவினர் இறுதியாக களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது மேற்கொண்ட விமானத் தாக்குதல்களின் போது புலிகளின் விமானத்தைத் தாக்கி அழிப்பதற்கான ஏற்ற விமான எதிர்ப்பு நடவடிக்கையை விமானப்படையினர் எடுக்காததையிட்டு விமானப்படையின் செயற்பாடுகள் பலதரப்பிலிருந்தும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு புலிகளின் விமானத்தாக்குதல்களுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத ஒரு இயலாமை நிலை விமானப்படையில் ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் மேற்படி காரணங்களின் அடிப்படையில் விமானப்படையின் பொறியியல் பிரிவின் விமானக்கண்காணிப்பு மற்றும் விமானத்தாக்குதல்கள் சம்பந்தப்பட்ட பிரதான பொறியியல் செயற்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு உயர்மட்ட விமானப்படை உத்தியோகத்தர்களைப் பாதுகாப்பு அமைச்சு பொறியியல் பிரிவிலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு முக்கியத்துவமற்ற பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

புலிகள் இயக்கத்தினர் விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட சம்பவங்களின்போது விமானப்படையினர் சம்பந்தப்பட்ட விமானக் கண்காணிப்பு மற்றும் விமான எதிர்ப்புச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானதானது எனக் கருதப்பட்ட விமானப்படையின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் பிரிவில் பணியாற்றும் உயர்மட்ட விமானப்படை உத்தியோகத்தர்களால் புலிகளின் விமானங்களைத்தாக்கி அழிப்பதற்கோ அல்லது வேறு விமான எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வதற்கோ முடியாமல் போனதையிட்டு தெரிவிக்கப்பட்ட விமர்சனங்கள் முறைப்பாடுகளைத் தொடர்ந்தே விமானப்படை தலைமைப்பீடமும் பாதுகாப்பு அமைச்சும் அதுபற்றி விசாரணைகளை மேற்கொண்டன. இவ்வாறு புலிகள் ஆரம்பகட்டத்திலிருந்து இதுவரை எட்டு தடவைகள் அவர்களின் சிறியரக சிலின் விமானங்கள் மூலமோ அல்லது கிருமி நாசினி தெளிக்கும் விமானங்கள் எனக் கருதப்படும் விமானங்களின் மூலமே கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களிலும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த படைமுகாம்கள் மீதும் பொருளாதார நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆயினும் எட்டுத்தடவைகள் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்களின்போதும் தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் இயக்க விமான மோட்டார்கள் தமது விமானங்களுடன் தப்பிச்சென்றுள்ளன.

அண்மையில் எட்டாவது, தடவை களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தைக் குறிவைத்துப் புலிகள் இயக்கத்தின் விமானம் விமானக்குண்டுகளை வீசிய இறுதிச் சம்பவத்தின்போதும் இவ்வாறே விமானப்படையின் ஏற்ற, விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே ஏழு தடவைகள் புலிகளின் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியிருந்த போதும் அண்மையில் அவர்கள் மேற்கொண்ட இந்த இறுதித் தாக்குதலுக்குப் பின்னரே விமானப்படையின் செயற்பாடுகள் மற்றும் இயலாமை நிலைபற்றிய விமர்சனங்களும் கண்டனங்களும் பரவலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு ஒரு தீர்க்கமான பாதுகாப்புத் தீர்வை ஏற்படுத்தி விமானப்படையின் தாக்குதல் பலத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தையும் தேவைகளையும், தற்போது பாதுகாப்பு அமைச்சும் விமானப்படையின் தலைமைப்பீடமும் நன்குணர்ந்து செயற்பட ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு நடவடிக்கையாகவே புலிகளின் விமானத்தாக்குதல் சம்பவங்களின் போது குறிப்பாக எட்டாவது விமானத் தாக்குதலின் போது விமானப்படையின் பொறியியல் பிரிவு செயற்பட்ட விதம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு ஏற்றமுறையில் பொறியியல் பிரிவு புலிகளின் விமானங்களை எதிர்த்துத் தாக்குதல் நடத்தக்கூடிய முறையில் செயற்படவில்லை எனக் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் பின்னரே அண்மையில் மேற்படி பொறியியல் பிரிவின் முக்கிய பொறுப்புகளில் செயற்பட்டு வந்த இரண்டு உயர்மட்ட விமானப்படை உத்தியோகத்தர்களையும் பொறியியல் பிரிவிலிருந்து வெளியேற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இனிமேலும் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய விமானத் தாக்குதல்களைத் தடுக்கவோ, விமான எதிர்ப்பு ஏவுகணைத்தாக்குதல்களை நடத்தி எதிரியின் விமானங்களை அழிக்கவோ ஏற்ற புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் விமானப்படைத்தலைமையும் எடுத்துவருகிறது.

திவயின: 16/11/2008

No comments:

Post a Comment