Sunday, November 2, 2008

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் யேர்மனியில் விவாத அரங்கு



"உல்லாசப்பயணிகளின் சொர்க்கமாக விளங்கிவரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் விவாத அரங்கொன்று கடந்த புதன்கிழமை (29.10.08) மாலை நடைபெற்றுள்ளது.

ஜேர்மனியின் பிரபல அரசியல் கட்சியான சமூக ஜனநாயக கட்சியின் (SPD) பல்கலைக்கழக மாணவர்களுக்கான இளையோர் அமைப்பு (JUSOS) இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

Hohenheim பல்கலைக்கழக JUSOS சார்பில் செல்வி துஷ்யந்தி மனோகரன் ஒழுங்கு செய்திருந்த இந்த அரங்கினை திருமதி டொக்டர் டக்மா கெல்மன் இராஜநாயகம் நெறிப்படுத்தினார்.



சிறப்பு பேச்சாளர்களாக பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தைச் சேர்ந்த கிருபாகரன், உப்சலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீற்றர் சால்க் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நாங்கள் ஏன் நடத்துகிறோம் என்ற விளக்கத்துடன் டொக்டர் இராஜநாயகம் நிகழ்வை தொடக்கி இலங்கையில் தமிழர்-சிங்களவர் பிரச்சினையின் பின்னணியை சுருக்கமாகக் கூறி கிருபாகரனை உரையாற்ற அழைத்தார்.

இலங்கை உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இதில் சந்தேகமில்லை எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய கிருபாகரன், இலங்கையின் எல்லாப்பகுதிகளும் சொர்க்கமாக இல்லை. பத்திரிகைகள் அங்கு நடைபெறும் வன்முறைகள் பற்றிப் பெரிதாக எதுவும் குறிப்பிடப்படாத போதும் ஐ.நா. சபையின் பதிவுகள் அவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.

மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில்,

சிறிலங்கா அரசு பற்றிய விமர்சனம் எதையும் வைக்காமலே இந்த வன்முறை நிகழ்வதற்கான சாட்சியங்களை நான் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இடம்பெயர்ந்த வன்னி மக்களின் அவலநிலை, கடந்த சில வாரங்களாக மக்கள் குடியிருப்புக்களின் மீது குண்டு வீச்சுக்கள், இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 250,000 தாண்டியுள்ளது. இவர்களுக்கான உணவு வழங்கல் இல்லை. தற்போது மழைக்காலம், ஒதுங்க இடம் இல்லை. ஒரேயொரு நிறுவனம் மட்டுமே இவர்களுக்கான உதவ அங்குள்ளது.

ஒருபுறம் மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை, மறுபுறம் பொருளாதார மையங்கள் அழிக்கப்படுகின்றன. 80,000 பேர் கொல்லப்பட்டும் 20,000 பேர் காணாமல் போயும் உள்ள நிலையில் இந்தக் குற்றவாளிகளை சட்டமா அதிபர் சட்டத்திற்கு முன் நிறுத்த முயன்றும் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படுவதில்லை.

இலங்கையில் 2,000 வருடகால வரலாறுடைய தமிழர்கள் குறிவைத்து அழிக்கப்படுவது இன அழிப்பே. இராணுவ நடவடிக்கையில் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

இது கிட்டத்தட்ட 17,000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. யானையொன்று விபத்துக்குள்ளாகியபோது பொதுமக்கள் கூடி அதனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். தமிழர் விடயத்தில் இந்த விலங்குகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் கூடக் கிடைப்பதில்லை என்றார் கிருபாகரன்.



இவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் பீற்றர் சால்க்,

பெண்கள் மீதான பாலியல் வன்முறை பற்றிக் குறிப்பிட்டார். இதில் பாதிப்புக்குள்ளான பெண்களின் தொகை 17,000 என்று அவர் குறிப்பிட்டார். அது 10 ஆக இருந்தாலும் கூட அது மிகவும் கொடுமை என்றும் கண்டனம் தெரிவித்தார்.

இதில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் குறிப்பு ஒன்றையும் வாசித்துக்காட்டினார்.

தொடர்ந்து அவர் குறிப்பிட்டதாவது,

இதில் குற்றமிழைப்பவர் ஆண்களாகவும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவும் இருக்கிறார்கள். அனைத்துலக சட்டப்படி பாலியல் வன்முறை என்பது சித்திரவதை. ஆனால் இலங்கையில் இக்குற்றவாளிகள் ஒருபோதும் சட்டத்தின்முன் நிறுத்தப்படவில்லை என்றார்.

இதையடுத்து நிகழ்ந்த விவாதத்தில் 80-களில் அனைத்துலக ஊடகங்களில் இலங்கைச் செய்திகள் முக்கிய இடத்தைப் பெற்றன. தற்போது ஏன் அது அதிகம் கண்டு கொள்ளப்படவில்லை என்ற கேள்விக்கு சால்க் பதிலளிக்கையில்,

அதற்கான காரணம் அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற நிலைப்பாடுதான் என்று பதில் கொடுத்தார்.



சிறிலங்கா அரசின் பரப்புரை சாதனம் மில்லியன் பொருட்செலவில் நடைபெறுகிறது. பலர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளதால்.
இலங்கைக்கு GSB சலுகை மீண்டும் வழங்கப்படப் போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. கொசோவோ தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டது போல் ஏன் தமிழீழம் அங்கீகரிக்கப்பட முடியாது? சிறிலங்கா அரசு ஏன் தனது அரச பயங்கரவாதத்திற்காக தண்டிக்கப்படவில்லை? அமெரிக்காவின் அரச தலைவர் தேர்தல் இலங்கை தொடர்பான அனைத்துலக நிலைப்பாட்டை மாற்றுமா? இலங்கையிலுள்ள ஏனைய நாட்டுத் தூதரகங்கள் என்ன செய்கின்றன? அவை ஏன் உண்மை நிலையை வெளிக்கொண்டுவரவில்லை? இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு எதுவாக இருக்கமுடியும் போன்ற கேள்விகள் அங்கு விவாதிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் டென்மார்க், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து ஊடகவியலாளர்களும் அரசியல் ஈடுபாடுடையவர்களும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பகுதியினர் ஜேர்மனிய இளந்தலைமுறையினர் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து ஒழுங்கமைப்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

மிகுந்த உற்சாகத்தோடு கேள்விகளைக் கேட்டு விவாதத்தில் கலந்து கொண்ட இந்த இளைய தலைமுறையினர் நாளைய ஜேர்மனியின் அரசியல் முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளுக்கு வரக்கூடும். ஜேர்மன் அரசியலில் முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் உள்ளவர்களுடன் இவர்கள் பேசச் செல்லும்போது தமிழர் பிரச்சனை பற்றி ஆழமாக அறிந்திராதவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த வகை கருத்தரங்குகள் உதவியாக அமையும்.

ஜேர்மனியில் ஒவ்வொரு மாநிலத்திலும், நகரங்களிலும் இதுபோன்ற விவாத அரங்குகள், கலந்துரையாடல்கள் இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெறவேண்டும். எமது பரப்புரை நன்றாகவே நடைபெறுகின்றது என்ற மெத்தனப்போக்கு ஆபத்தானது.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு செய்யப்பட்ட முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இவர்கள் தமிழ் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களின் போது புலம்பெயர் மக்கள் என்ன விதத்தில் பரப்புரையை செய்யவேண்டும் என பாடம் நடத்துகிறார்களே தவிர அந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தர முன்வருவதில்லை என தனது கவலையை வெளிப்படுத்தினார்.

No comments:

Post a Comment