Thursday, November 13, 2008

பேய்முனை, வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு



பூநகரி நோக்கி முன்னேறி வரும் படையினர் நேற்று வியாழக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "தினக்குரல்" நாளேடு வெளியிட்டுள்ள செய்தி:

மன்னார் - பூநகரி வீதிக்கு மேற்கே உள்ள பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதிக்குள் நேற்று காலை நுழைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

பேய்முனையைக் கைப்பற்றியதன் மூலம் மேற்கு கரையோரத்திலிருந்த கடற்புலிகளின் கடைசித்தளமும் படையினர் வசமாகியுள்ளதாகவும் இந்த இரு பகுதிகளையும் கைப்பற்றியதன் மூலம் இவற்றோடு இணைந்த நிலப்பகுதிகளும் தங்கள் வசமாகியுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மன்னார் - பூநகரி வீதியில் தற்போது புலிகள் பூநகரிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர்.

மன்னார் - பூநகரி வீதியின் (ஏ-32) மேற்குப் பகுதியில் கிராஞ்சி மற்றும் பாலாவி பகுதிகளை கைப்பற்றியதனைத் தொடர்ந்து அதனோடு இணைந்திருந்த பேய்முனை மற்றும் வலைப்பாடு பகுதியும் தற்போது படையினர் வசமாகியுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

பேய்முனையை கைப்பற்றியதன் மூலம் மேற்கு கடல் வழியாக தமிழ்நாட்டுடன் புலிகள் கொண்டிருந்த கடல்வழித் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment