Thursday, November 27, 2008

குடாநாட்டை காவு கொண்டது இயற்கை அனர்த்தம் மழை, வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

சுழல் காற்றும் கோரதாண்டவம்; பெருமளவு சொத்துகள் நாசம்

தொடர்ந்து இரு தினங்களாக கொட்டிய அடைமழையாலும் சுழல் காற்றாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பேரழிவு ஏற்பட்டிருப்பதுடன், பல்லாயிரக்கணக்கான கரையோரப் பகுதி மக்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.

வெள்ளத்தால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் நாசமடைந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்வு முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

வட பிராந்திய கரையோரம் மையம் கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கைக்கப்பால் நகர்ந்து சென்று விடுமென வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது. இலங்கைக்கு சமீபமாக மையம் கொண்டிருந்த தாழமுக்கமே சிறிய புயலாக உருவெடுத்ததாகத் திணைக்களம் கூறியது. ஆயினும் இந்தக் காலநிலை மாற்றத்தால் வடபகுதி தொடர்ந்து பாதிக்கப்படும் நிலைமை இருப்பதாகவும் திணைக்கள அறிக்கைகள் தெரிவித்தன.

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்கள் தொடர்ச்சியாக பெய்ந்த பெருமழை, சுழல் காற்று காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள், சொத்துகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பாரிய மரங்கள் வீழ்ந்தும் அழிந்துள்ளன. சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சுழல் காற்றினால் முறித்து வீசப்பட்டும் வேரோடு சாய்ந்துமுள்ளன.

குடாநாட்டின் எந்தப் பகுதியும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சகல பெருந் தெருக்களிலும் பாரிய மரங்கள் வீழ்ந்து குடாநாட்டுக்கான தரைப்பாதைகள் வாகனங்கள் செல்ல முடியாதளவுக்கு போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.

நாவாந்துறை, பண்ணை, குருநகர், பாசையூர், கொழும்புத்துறை, பருத்தித்துறை, கச்சாய், மாதகல் பகுதிகளில், கடல் அலைகள் வீறு கொண்டு கரையோரப்பகுதிகள் எங்கும் கடல் நீர் புகுந்துள்ளது.

கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின் யாழ். குடா நாட்டின் வரலாற்றில் இரண்டு நாள் மழையினாலும் கோர சுழல் காற்றினாலும் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நான்கு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டதால் ஹட்டன் நஷனல் வங்கிக் கிளை, யாழ்ப்பாணம் பஸ் நிலைய கடைகள் ஆகியவற்றுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி உட்பட தாழ் நிலங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளது. நகரின் பாரிய வடிகால்களை மேவி நீர் பாய்ந்தமையால் வடிகாலை அண்டிய பகுதி வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணம் கற்குளம் கிராமத்தில் ஆறு அடி உயரத்துக்கு வெள்ளம் நிற்பதாகக் காண முடிகின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் ஞஸ்மானியாகக் கல்லூரி, புதுப்பள்ளிவாசல், கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம், லைடன்கட்டிடம், கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கம், நாவாந்துறை சென்.ஜேம்ஸ் ஆலயம் உட்பட அனைத்துப் பாடசாலைகள், பொது மண்டபங்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இரு நாள் மழை வெள்ளம் இப்படியான அனர்த்தத்தை ஏற்படுத்துமென எவரும் அறிந்திராத நிலையில் இரவோடிரவாக உடுத்த உடுப்புடன் உயிர்ப் பாதுகாப்புத் தேடி ஓடினர்.

யாழ்ப்பாணம் பழைய கோட்டைக்கு அருகில் அமைந்த இராணுவ முகாமுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் இரவோடிரவாக அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

திருநெல்வேலி வானிலை ஆய்வு மையம் தகவல் தருகையில்;

இரு நாட்களாக 320 மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாகவும் இன்று காலநிலை சீராகும் எனவும் கூறினர். வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமே குடாநாட்டில் அதிக மழை விழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினர். நேற்று மாலை குடாநாட்டில் காற்றின் வேகம் தணிந்ததுடன் மழையும் ஓய்ந்திருந்தது.

நேற்று குடாநாட்டில் எந்தவொரு வர்த்தக நிறுவனமும் திறக்கப்படவில்லை. சந்தைகள் கூடவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை, அலுவலகங்களில் எந்த அதிகாரியோ, ஊழியர்களோ வேலைக்கு வராமையால் செயற்பாடு இழந்து காணப்பட்டது. வங்கிகள் எதுவும் திறக்கப்படவில்லை. உணவுச்சாலைகள் திறக்கப்படாமையால் பேக்கறிகள் முன் நீண்ட கியூவரிசையில் பாண்வாங்குவதற்காக முண்டியடித்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில் இருந்த போதும் மக்கள் குறைவாகவே சிகிச்சை பெறவந்தனர். யாழ். மாவட்டத்திலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதால் வீடுகள், ஒழுங்கைகள், பிரதான வீதிகள் எல்லாம் இரண்டடி வெள்ளம் தேங்கியுள்ளது.

சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் அகதிகளுக்கு மூன்று நாளைக்கு சமைத்த உணவை வழங்குமாறு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்க அதிபரை வேண்டியுள்ளார். மேலும் சொத்து சேத விபரங்களை உடனடியாக மதிப்பீடு செய்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டியுள்ளார்.

குடாநாட்டில் ஐயாயிரம் ஹெக்டர் நெல் வயல்களில் வெள்ளம் மூடியுள்ளது. பயிர் அழுகி அழியும் அபாயம் உருவாகியுள்ளது. வெங்காயம், புகையிலை, மரக்கறி செய்கையும் சகல பகுதிகளிலும் நாசமாகியுள்ளன. வாழைத்தோட்டங்கள் எண்பது சதவிகிதமாகவும் வீடுகளில் குலைதள்ளிய பல்லாயிரம் வாழை மரங்களும் நாசமாகியுள்ளன. கடற்றொழிலாளர்களின் வள்ளங்கள் கடல் நீரால் அடித்துத் தள்ளப்பட்டுள்ளன. நேற்றுக் காலை கடற்றொழிலாளர் கொட்டும் மழையிலும் இவ்வள்ளங்களை மீண்டும் கரைக்கு கொண்டு வந்தனர்.

மழை, சுழல் காற்று அனர்த்தங்களால் மின்கம்பிகள் உடைந்தாலும் மின்கம்பங்கள் எல்லா வீதிகளிலும் அறுந்து தொங்குவதால் சேதமடைந்த மின்கம்பிகளுக்கு மாற்றீடு செய்வதிலும் சில தினங்கள் எடுக்குமென்பதால் குடாநாட்டுக் கான் மின் விநியோகம் சீர்குலைந்துள்ளது.

குடாநாட்டுக்கான சி.டி.எம்.ஏ. தொலைபேசி முற்றாக செயலிழந்த நிலையில் கேபிள் தொலைபேசிகளும் மழை சுழற் காற்று அனர்த்தங்களால் பரவலாக செயலிழந்துள்ளன.

இயற்கை அனர்த்தங்களினால் குடாநாடு முழுவதும் சோபையிழந்துள்ளதுடன், வாழ்க்கையும் சீர்குலைந்து குடாநாட்டில் நேரம் தவறாது நடைபெறும் ஆலயங்களில் நித்திய பூஜைகள் நேற்று நடைபெறவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அன்றாடம் பொருட்களை வாங்கி உணவு தயாரிக்கும் குடும்பங்கள் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினியாக நேற்றுக் காலம் கடத்தியமை வேதனையைத் தருவதாக அமைந்திருந்தது.

வட பிராந்திய போக்குவரத்துச் சபை பஸ்கள் காலையில் ஒருசில சேவைகளை நடத்திய போதும் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில பெருவெள்ளம் நிற்பதால் பஸ்களைத் தரித்து நிறுத்த முடியாமையாலும் வீதிகளில் மரங்கள் வீழ்ந்து வீதித் தடை இருப்பதாலும் சேவையை நடத்த முடியாதென நிறுத்தினர்.துரதிர்ஷ்டவசமாக கிராமப் புறங்களில் இருந்து நகரப்பாடசாலைகளுக்கு வந்த மாணவர்கள் பஸ் சேவை இன்மையால் எட்டு மைல் தூரத்தை நடந்தே சென்றனர். செய்தி கிடைத்த நேரத்தில் குடாநாட்டில் மழை ஓய்ந்து சில இடங்களில் வெள்ளம் வடிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment