Sunday, November 2, 2008

மகிந்தவோடு சேர்ந்து கொண்டு இந்திய அரசு செய்து வரும் துரோகத்தை மறைக்க தமிழக முதல்வர் முயற்சி: வைகோ



சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசோடு சேர்ந்து கொண்டு இந்திய அரசு செய்து வரும் துரோகத்தை மறைக்க தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மேற்கொள்ளும் தந்திர நடவடிக்கையாகும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முயலோடும் ஓடுவது, வேட்டை நாயுடனும் சேர்ந்தும் விரட்டுவது “Running with the Hare, Hunting with the Hound” என்ற ஆங்கிலச் சொற்றொடருக்கு முழு முதல் விளக்கம்தான் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் நடத்தும் கபட நாடகம் ஆகும்.

கடந்த நான்கு ஆண்டுக் காலமாக இலங்கையில் சிங்கள இனவாத அரசான ராஜபக்ச அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்துகின்ற கொடூரமான இராணுவத் தாக்குதலுக்கும் இனப் படுகொலைக்கும் மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரடியாகவும் இராணுவத் தளவாடங்கள் வழங்கியும்

குறிப்பாக வான் படைக்கு உதவும் ராடார்களைக் கொடுத்தும் வேறு நாடுகளில் இலங்கை ஆயுதங்கள் வாங்குவதற்கு வாய்ப்பாக இதுவரை ரூ. 2,000 கோடி வட்டியில்லாக் கடனாகத் தந்தும், இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கியும்

பலாலி விமானத் தளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்துக் கொடுத்தும், இராணுவத் தாக்குதலுக்கு உதவ இந்திய இராணுவப் பொறியாளர்களையும், தொழில்நுட்பப் பிரிவினரையும் அங்கு அனுப்பி வைத்தும்

இந்திய - இலங்கை கடற்படைத் தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம் செய்தும் பலமுறை இந்தியத் தளபதிகளை இலங்கைக்கு அனுப்பி ஆலோசனைகள் வழங்கியும்

மொத்தத்தில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்தும் யுத்தத்திற்குப் பெரும் துணையாக இயங்கி வருகிற துரோகத்தை இந்திய அரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்து வந்துள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங் அரசின் மன்னிக்க முடியாத இந்தத் துரோகத்திற்கு அந்த அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது மைனாரிட்டி அரசு நடத்தும் கட்சியும், முதலமைச்சரும் பொறுப்பாளிகள் ஆவார்கள் என்பதால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் ஆளாக நேரிடும், அதனால் அரசியல் ரீதியாகப் பாதகம் ஏற்படும் என்பதனை உணர்ந்து தமிழக மக்களை ஏமாற்றவும் குற்றச்சாட்டுகளிலிருந்து திசை திருப்பவும் ஒரு திட்டமிட்ட கண்துடைப்பு வேலையை - பித்தலாட்ட நாடகத்தை முதலமைச்சர் நடத்தி விட்டார்.

அதுதான் ஒக்டோபர் 14 ஆம் நாள் அவர் நடத்திய பல்வேறு கட்சிகளின் கூட்டத்தில் அரங்கேற்றிய இராஜினாமா அறிவிப்பாகும். அக்கூட்டத்தில் முதல்வர் அறிவித்தது என்ன?

1. இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதி திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கையை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து நிறைவேற்றிட வேண்டும்.

2. இலங்கையில் இரண்டு வாரக் காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்.

3. இலங்கை அரசுக்கு, இந்திய அரசு ஆயுத உதவியை உடனடியாக நிறுத்திட வேண்டும்.

4. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்டோருக்கு நேரிடையாகச் சென்றடைய சர்வதேச அமைப்புக்களை மத்திய அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சரின் அறிவிப்பு அனைத்து ஏடுகளிலும் பரபரப்பான தீர்மானம் என்றும், இலங்கைக்கு ஆயுத உதவி நிறுத்தாவிடில் இரண்டு வாரத்தில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு முன்வராவிடில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா என்று எட்டுக்காலச் செய்தியாக வெளியாயிற்று.

மோசடி நாடகத்தின் அடுத்த காட்சிதான் முதல்வரின் புதல்வி மறுநாளே மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி இராஜினாமா செய்த கடிதத்தைத் தன் தந்தையிடமே சமர்ப்பித்த சித்து வேலையாகும். இந்தச் செய்தியும் ஏடுகளில் தலைப்பாயிற்று. பின்னர் வரிசையாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்பட இராஜினாமா கடிதங்களை முதல்வரிடமே வழங்கினர்.

ஏக காலத்தில் நாடாளுமன்ற சபாநாயகராகவும், மாநிலங்கள் அவை அவைத்தலைவராகவும் தற்காலிக அவதாரமே எடுத்துவிட்டார் முதல்வர். தமிழர் உள்ளத்தில் வேல் பாய்ச்சுவதுபோல் இலங்கை அதிபரின் ஆலோசகரும் புதுடில்லி வரை வந்து போர் தொடருமென்று கொக்கரித்த பாசில் இராஜபக்சவும் போரை நிறுத்துமாறு இந்திய அரசு எங்களிடம் சொல்லவேயில்லை.

இந்தியப் பிரதமர் அதுபற்றி பேசவேயில்லை என்று கூறி உண்மை நிலையை அம்பலப்படுத்தி விட்டார்கள். வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி டில்லியில் இதுபற்றி கூறுகையில் இலங்கையில் போரை நிறுத்தச் சொல்ல முடியாது, போர் நிறுத்தம் கேட்கவும் முடியாது என்று தெரிவித்தார்.

இந்திய அரசின் இராஜாங்க இராணுவ அமைச்சர் பல்லம் ராஜூ இன்னும் ஒரு படி மேலே சென்று இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி தொடர்ந்து செய்யும் என்று ஒக்டோபர் 16 ஆம் நாள் சொன்னார். முதலமைச்சர் தனது நாடகத்தின் மூன்றாவது கட்டமாகப் பிரதமரும், ஐக்கிய முற்போக்கு அணித் தலைவரும் முதல்வரோடு தொலைபேசியில் உரையாட பிரணாப் முகர்ஜி சென்னைக்கே வந்து முதல்வரைச் சந்தித்த பின் அவர் ஆணவத்தோடு செய்தியாளர்களிடம் சொன்னதுதான் தமிழக மக்களை எந்த அளவிற்குக் கிள்ளுக்கீரையாக இந்திய அரசு நினைக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

பிரணாப் முகர்ஜி கூறும்போது, "ராடார்கள் இலங்கைக்குக் கொடுத்துள்ளோம். அது இந்தியாவின் பாதுகாப்பிற்காக," என்றார். எந்த மடையனும் இதை நம்ப மாட்டான்.

இந்தியாவின் தென்முனையில் பாதுகாப்பு அரணே ஈழத் தமிழர்கள்தான் என்று தொலைநோக்கோடு அறிந்தவர் இந்திரா காந்தி அம்மையார்தான். ஆனால் இன்றோ இந்திய ராடார்களைக் கொடுத்தது சிங்கள விமானப் படையின் தாக்குதலுக்கு உதவத்தான் என்பது ஊர் அறிந்த உண்மையாகும். இலங்கைக்கு ஆயுத உதவி செய்துள்ளோம் என்று இந்தியப் பிரதமர் ஒக்டோபர் 2 ஆம் நாள் எனக்கு எழுதிய கடிதத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதனால் பிரணாப் முகர்ஜி கூறும்போது பெரும் அழிவு செய்யும் ஆயுதங்களை நாங்கள் தரவில்லை; சாதாரண ஆயுதங்கள்தான் தந்துள்ளோம் என்றார். இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதை ஒப்புக்கொண்ட பிரணாப் முகர்ஜி இப்படிப் பல நாடுகளுக்கும் பயிற்சி கொடுப்து வழக்கம்தான் என்று நியாயப்படுத்தவும் முயன்றார். அப்படிப் பயிற்சி பெறும் வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினரோ இந்திய மண்ணில் கொப்பூள் கொடி உறவினர்களோ அந்நாடுகளில் கொல்லப்படுகின்றனரா என்ற கேள்வி சவுக்கடி வீசுவதுபோல் கேட்கிறதே, இதற்கு மத்திய அரசின் பதிலென்ன? முதல்வரின் விளக்கம் என்ன?

தமிழர் மனதில் விஸ்வரூபம் எடுத்துள்ள கீழ்காணும் கேள்விகள் மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டுகள் ஆகும்.

1. 2004 இல் மத்தியில் மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்றவுடன் இந்திய இலங்கை இராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தபோது அப்போது அக்கூட்டணியில் இருந்த மறுமலர்ச்சி தி.மு.க. அதனைக் கடுமையாக எதிர்த்தது. ஒப்பந்தம் போடப்படாமலேயே, ஒப்பந்தத்தின் நோக்கத்தையும், திட்டத்தையும் இலங்கை விரும்பியவாறே இந்தியா நிறைவேற்றி வந்துள்ளது. அதனை வெளிப்படையாகவே 2005 ஜூன் 10 ஆம் நாள் அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் அறிக்கவே செய்தார். இந்தத் துரோகத்திற்கா தமிழக மக்கள் 2004 தேர்தலில் வாக்களித்தார்கள்?

2. 90-களில் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படவும் 5 இலட்சம் தமிழர்கள் வீடு வாசலை விட்டு துயர வெள்ளத்தில் சிக்கி புலம்பெயரவும் காரணமான குண்டு வீச்சுக்கள் நடத்திய இலங்கை விமானப் படைக்குத் தளமாகப் பயன்பட்ட பலாலி விமானத் தளத்தை இந்தியா பழுது பார்த்துத் தரக்கூடாது என்று பிரதமரையும் அப்போதைய இராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் நேரில் சந்தித்து கேட்டபோது அதனைச் செய்யமாட்டோம் என்று உறுதியளித்தனர். ஆனால், 2005 டிசம்பர் 9 ஆம் நாள் இலங்கை விமானத் தளபதி வைஸ் மார்ஷல் டொனால்டு பெரெரா கூறுகையில், பலாலி விமானத் தளத்தை இந்திய விமானப் படையினர் ஆறு மாத காலமாக அவர்கள் செலவிலேயே பழுது பார்த்துக் கொடுத்தனர் என்று தெரிவித்தார். ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இந்தியா திட்டமிட்டு செய்த உதவிதானே இது. தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த உண்மை தெரியப்போவதில்லை என்று இந்திய அரசு துணிந்து செய்த துரோகம் தானே இது. இவற்றையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்திற்கு - நாட்டு மக்களுக்குத் தெரிவித்ததா இந்திய அரசு என்பது கேள்வியாக எழும் அடுத்த குற்றச்சாட்டு.

3. 2006 ஜூலையில் இந்திய அரசு இலங்கை விமானப் படைக்கு ராடார்கள் வழங்கிய பின்னரே தமிழர்கள் பகுதிகளில் இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுகள் தொடர்ந்து நடைபெற்று ஏராளமான தமிழர்கள் உடமைகளை இழந்தனர்; உயிர்களை இழந்தனர். சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்த செஞ்சோலை குண்டு வீச்சு 2006 ஓகஸ்ட் 14 ஆம் நாள் நடைபெற்றது. இலங்கை இராணுவத் தாக்குதலில் பலியான தாய் தந்தையரை இழந்த அனாதைப் பெண் குழந்தைகள், சிறுமிகள் 61 பேரைத் துடிக்கத் துடிக்க குண்டு வீசிக்கொன்ற இலங்கை அரசின் விமானத் தாக்குதலுக்கு இந்தியா ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

4. அதுபோல் தமிழர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இலங்கை இராணுவத்தால் பட்டப்பகலில் நடுவீதியில் ஏன் தேவாலயத்திற்குள்ளேயே ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒருவர் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை மன்மோகன் சிங் அரசு ஏன் கண்டிக்கவில்லை?

இலங்கையில் சிங்கள அரசு நடத்தும் இராணுவத் தாக்குதலுக்கு உதவி செய்ய இந்திய அரசு இராணுவப் பொறியாளர்களையும், தொழில்நுட்பப் பிரிவினரையும் அனுப்பி வைத்த துரோகம் கடந்த செப்ரெம்பர் 9 ஆம் நாள் இரவில் வன்னியில் நடைபெற்ற சண்டையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. இந்தியப் பொறியாளர்கள் ஏ.கே. தாகூர், சிந்தாமணி ரவுத் காயமடைந்தனர். மறுநாள் இந்தியத் தூதரக அதிகாரி இன்னும் திமிரோடு சொன்னார். இந்தியாவில் இருந்து 265 பேர் இலங்கை இராணுவத்திற்கு வேலை செய்கின்றனர் என்று. அப்படியானால் இந்திய அரசு சிங்கள அரசுக்குக் கூலிப்படையாக இந்திய இராணுவத்தினரை அனுப்பியது மன்னிக்க முடியாத குற்றம் என்ற குற்றச்சாட்டிற்கு மத்திய அரசின் பதில் என்ன? தமிழக முதல்வரின் விளக்கம் என்ன?

5. தமிழக மீனவர்களை 900 தடவைகளுக்கு மேல் இலங்கைக் கடற்படை தாக்கியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், படகுகளை நாசம் செய்தும், மீனவர்களைக் கைது செய்து மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தும் தொடர்ந்துள்ள அக்கிரமும் அநீதிகளும் நான்காண்டுகளாக நிறுத்தப்படவே இல்லையே. இந்திய அரசும் இந்தியக் கடற்படையும் இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல; இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை உதவியாக கங்காணி வேலைதான் செய்தது. இலங்கையில் நடக்கும் யுத்தத்திற்கு இந்தியக் கடற்படையின் உதவியைப்
பெற்றுக் கொள்ளவே இரு நாட்டுக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2006 இல் போடப்பட்டது. இந்தத் துரோகத்தைச் செய்த இந்திய அரசு இந்தச் செய்தியை நாடாளுமன்றத்திற்கு ஏன் அறிவிக்கவில்லை?

இதைவிடக் கொடுமை யாதெனில் இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் நம் கடல் எல்லையிலே சர்வதேசக் கடலில் இலங்கை கடற்படையினர் கண்ணிவெடிகளை (Sea Mines) அமைத்தது மட்டுமின்றி குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்ததாம் என்பதற்கு ஒப்ப தமிழக மீனவர் எல்லை தாண்டி வந்தால் கண்ணி வெடிகளுக்குப் பலியாவார்கள் என்று இலங்கைக் கடற்படை மட்டுமல்ல; இந்தியக் கடற்படையும் அறிவித்தது. இருநாட்டுக் கடற்படையின் கூட்டு ரோந்து என்ற துரோகத்திற்குத் தொடக்கத்தில் பச்சைக் கொடி காட்டிய தமிழக
முதல்வர் ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு அதனைப் பின்வாங்கினர்.

ஆனால் அண்மையில் அதே திட்டத்தை வேறு வார்த்தைகளில் கூட்டு நடவடிக்கை என்று இந்திய - இலங்கை வெளிநாட்டு அமைச்சர்கள் அறிவித்தனர். பகிரங்கமாகவே இலங்கை அதிபரும், இலங்கை அமைச்சர்களும் மமதையோடு சொல்வதெல்லாம் இந்தியா எங்களுக்கு எல்லாவிதத்திலும் இராணுவ உதவி செய்கிறது என்பதுதான். இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்குண்டு கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறிய குற்றம் இந்திய அரசின் குற்றம்தானே. என் கேள்விக்கு மத்திய அரசின் பதில் என்ன? தமிழக
முதல்வரின் விளக்கம் என்ன?

தமிழக முதல்வர் நடத்திவரும் கபட நாடகத்தின் உச்சகட்ட காட்சி தமிழ்நாட்டில் நிவாரண பொருள்களும், நிதியும் திரட்டும் நடவடிக்கையாகும். இந்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக ராஜபக்ச அரசுக்கு தந்துள்ளது. அந்த இனவெறி அரசின் பொருளாதார பலத்தை வளர்க்கவே பல வர்த்தக ஒப்பந்தங்களை இந்திய அரசு செய்துள்ளது. போரை நிறுத்தச் சொல்ல முடியாது என்று கூறுகிற பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் ஒரு கேள்வி. போரை நிறுத்துகிறாயா இல்லையா, நிறுத்தாவிட்டால் வர்த்தக ஒப்பந்தம் இரத்தாகும். வாங்கிய கடனை திரும்பக்கொடு! இனி எந்த நிதியும் உதவியும் கிடையாது.

இதற்கும் நீ மசியாவிட்டால் பொருளாதாரத் தடையை விதிப்போம் என எச்சரித்தால் போதும். சுண்டைக்காடீநு இலங்கை அரசு தானாக வழிக்கு வரும். பாகிஸ்தான் என்ன சீனா என்ன அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நம் எல்லை ஒட்டிய இந்து மாக்கடல் பிரதேசத்தில் கால்வைக்க விடமாட்டேன் என்று எச்சரித்த இந்திரா காந்தி அம்மையாரின் தொலைநோக்குப் பார்வை இந்த அரசுக்கு இல்லை.

எந்தக் காலத்திலும் சிங்கள அரசு சோதனை ஏற்படும் வேளையில் இந்தியாவுடன் நட்பு பாராட்டாது. சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போர் மூண்டபோது சிங்கள அரசு இந்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டது.

தமிழ்நாட்டு மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்று கருதி இராணுவத் தீர்வு கூடாது என்று இலங்கை அரசுக்கு நாங்கள் உபதேசம் செய்திருக்கிறோம் என்று கூறுகிற இந்தியப் பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ் மக்கள் விடுக்கும் கேள்வி ஒன்றேதான். இராணுவத் தீர்வு கூடாது என்று சொன்ன நீங்கள் ராடார்களும், இராணுவ உதவியும் செய்தது ஏன்? செய்து வருவதும் ஏன்? இலங்கையில் சிங்கள அரசுக்கு பெருமளவு பொருளாதார உதவியைச் செய்து வரும் மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டே தமிழக முதல்வர்
தமிழ்நாட்டு மக்களிடம் நிதியும் நிவாரணமும் திரட்டுவது கடைந்தெடுத்த நயவஞ்சகம் ஆகும்.

ஏனெனில் இந்த நிதியும் நிவாரணப் பொருட்களும் பெயர் அளவில் ஒப்புக்காக தமிழர்களுக்குக் கொடுப்பதாக சிங்கள அரசு சில மாய்மாலக் காட்சிகளைக் காட்டிவிட்டு அனைத்தையும் சிங்களர்களுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளும், இதுதானே சுனாமி நிவாரணத்தில் நடந்தது. ஆழிப்பேரலை அழிவில் கொடுந்துயருக்கு ஆளானவர்கள் ஈழத்தமிழர்கள் தாம். சர்வதேச நாடுகளும் இந்தியாவும் செய்த நிவாரண உதவி தமிழர்களுக்கு கிடைக்கவேயில்லை. 2006 ஓகஸ்ட் 8 ஆம் நாள் தமிழர் பகுதியில் அமைக்கப்பட்ட பிரெஞ்சு தேச சுனாமி நிவாரண முகாமில் பணியாற்றிய 11 தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் கொடூரமாக சுட்டுக்கொன்றது.

நிவாரணப் பொருட்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என்று கூறுவதே ஒரு ஏமாற்று வேலை. ஏனெனில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியில் சர்வதேச தொண்டு நிறுவனங்களை எல்லாம் சிங்கள அரசு அச்சுறுத்தி வெளியேற்றி விட்டது; செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி விட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தைக்கூட கொழும்பில் திறப்பதற்கு ஐ.நா. மன்றம் எவ்வளவோ முயன்றும் இன்றுவரை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை.

இலங்கையில் அரசு நடவடிக்கையால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பது குறித்து ஐ.நா. மன்றத்தில் விவாதிக்க சுவிற்சர்லாந்து நாடும் நியூசிலாந்து நாடும் முயற்சித்தபோது இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு இந்திய அரசு அந்த விவாதத்தை நடக்க விடாமலேயே தடுக்கவும் செய்தது. இலங்கை தீவில் ஈழத்தமிழர்கள் மீது இராணுவ தாக்குதலை நிறுத்தாமல்
குண்டு வீச்சை நிறுத்தாமல் போர் நிறுத்தம் செய்யாமல், நிவாரணப் பொருட்கள், நிவாரணம் வழங்குவோம் என்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை.

ராஜபக்ச அரசோடு சேர்ந்துகொண்டு இந்திய அரசு செய்து வரும் துரோகத்தை மறைக்க தமிழக முதல்வர் மேற்கொள்ளும் தந்திர நடவடிக்கையாகும். 2001 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய போர் நிறுத்தத்தை அறிவித்து செயல்படுத்தியவர்களே விடுதலைப் புலிகள்தான். இரண்டு மாத காலத்திற்குப்பின் வேறு வழியின்றி உலக நாடுகளின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்தது.

அடிப்படை உண்மை தெரியாமல் தமிழக முதல்வர் கூறுவதுபோல் நோர்வே அரசு முயற்சியில் ஏற்பட்ட போர் நிறுத்தம் அல்ல. போர் நிறுத்தத்திற்கு பின்னர் சமாதான பேசுவார்த்தைக்கு நோர்வே அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் சமீபத்தில் நோர்வே தூதராலயத்தை சிங்களவர்கள் தாக்கியதோடு நோர்வே நாட்டு தலைவர்கள் உருவ பொம்மைகளை எரிப்பதற்கும் சிங்கள காவல்துறை உதவிற்று. மொத்தத்தில் ஈழ தமிழர்களுக்கு இந்திய அரசு செய்துவந்த துரோகத்தை மூடிமறைப்பதற்கும் பழியிலிருந்து தப்பித்து கொள்வதற்கும் 83-க்குப் பிறகு தமிழகத்தில் இயல்பாக பொங்கி எழுந்த ஈழத்தமிழர்கள் ஆதரவை, உணர்வை தணித்து பிரச்சினையை திசை திருப்பவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா என்றும் தற்போது நிவாரணத்திற்கு நிதி திரட்டுகிறேன் என்றும் முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் திட்டமிட்ட மோசடியாகும் இந்த உண்மைகளை மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் கண்ணப்பன் அவர்களும் நானும் உரக்கச் சொல்வதால் அந்த உண்மை சுடுவதால் எங்களை சிறையில் அடைத்தார் முதல்வர்.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் குறித்து ஆதரவாக கருத்துச் சொல்ல உரிமையுண்டு என்று உச்ச நீதிமன்றத்தில் நான் தொடுத்துள்ள ரிட் மனு மீதான வழக்கில் அதனை ஏற்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எங்கள் இயக்கத்தினர் நடத்தும் உண்ணாவிரதத்திற்கும் அனுமதி இல்லை, பொதுக்கூட்டத்திற்கும் அனுமதியில்லையென்று காவல்துறையின் காட்டாட்சி தர்பாரை கட்டவிழ்த்துவிட்டார் தமிழக முதல்வர். ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்க அதிகாரத்தை ஏவும் சர்க்காருக்குச் சொல்வோம், எங்கள் உரிமைக்குரலை ஒடுக்க முடியாது. பன்மடங்கு வேகத்துடன் எட்டுத்திக்கிலும் அக்குரல் ஓங்கி ஒலிக்கும். நாடெங்கும் நகரங்கள் தோறும், ஊர்கள் தோறும், தெருக்கள் தோறும் எங்கள் குற்றச்சாட்டின் குரல் விஸ்வரூபமெடுக்கும்.

இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை, புழல் சிறையில் இன்று (01.11.2008) நேர்காணலின் போது என்னிடம் வாய்மொழியாகத் தெரிவித்தது அறிக்கையாகத் தரப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment