Sunday, November 30, 2008

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகல்: புதிய உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்


இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார். மும்பாயில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பிரதமர் அவரைப் பதவி விலகுமாறு பணித்துள்ளார். இதற்கு அமைவாகவே உள்துறை அமைச்சரின் பதவி விலகல் இடம்பெற்றது.

நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவியேற்றுள்ளார். ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உளவுத்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவராஜ் பாட்டீல் மும்பாய்த் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.

நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர்.

அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல். அதில் மும்பை தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் இப்போது ஜகார்தாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்டது. அவர் பாட்டீலின் ராஜினாமாவை உடனே ஏற்றுக் கொண்டுவிட்டார்.

அதே போல ப.சிதம்பரத்தை உள்துறை அமைச்சராக நியமித்து பிரதமர் வெளியிட்ட உத்தரவுக்கும் ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதையடுத்து சிதம்பரம் உடனடியாக உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

No comments:

Post a Comment