Sunday, November 23, 2008

கிழக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லை: கருணா முடிந்தால் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும் - பிள்ளையான்



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என அந்தக் கட்சியின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்த முன்வந்தபோது கட்சி ஒன்றை பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இருந்தது. அப்போது கருணா வெளிநாட்டில் இருந்தார்.

இந்தநிலையில் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ததாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.இந்த பெயரில் மாற்றங்கள் அவசியம் என தாம் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருணாவுக்கு கட்சியில் எவ்வித அதிகாரங்களும் இல்லை. இந்தநிலையில் அவர் கட்சியின் அதிகாரங்களை பெறுவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக பிள்ளையான் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணா கிழக்கு மாகாண முதலமைச்சராக தற்போதைய மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதாவை போட்டியிடவைக்க விரும்பியதாக வெளியான கருத்துக் குறித்து செய்தித்தாள் பிள்ளையானிடம் வினவியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிள்ளையான் முதலமைச்சர் பதவி என்பது மிகவும் அழுத்தம் நிறைந்தது என்பதன் காரணமாக அந்த பதவிக்கு தாம் போட்டியிட முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையில் எவ்வித அதிகாரங்களும் இல்லை. வெளிப்படையாக சொல்வதென்றால் தாம் பதவியேற்றதன் பின்னர் இதுவரை ஒருவரையாவது பதவிக்காக சேர்க்கவில்லை.13 வது திருத்தச்சட்டத்தை அமுல்செய்ய முடியவில்லை.

இந்தநிலையில் அரசாங்கத்துடன் இருக்கும் கருணா தற்போது தமக்கு அதிகாரங்களை கொடுக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக பிள்ளையான் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணசபையினால் எவ்வித அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கமுடியவில்லை. மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களே நேரடியாக திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதனை விட கிழக்கிலோ அல்லது வெளியிலோ தமக்கு சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை என பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார். தமது பிரத்தியேக செயலர் ரகு கொல்லப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமல்ல என தாம் மீண்டும் வலியுறுத்துவதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

அத்துருகிரியவில் தாமும் ரகுவும் தங்கியிருந்தமையை வெளியார் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடி முஸ்லிம்களுடன் தமது உறுப்பினர்களுக்கு முறுகல் நிலை ஏற்பட்டிருந்த போதும் அது தற்போது சுமுகமாகியுள்ளதாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

கருணாவைப்பற்றி கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு தெரியும். அவருடைய ஒழுக்கங்கள் அவர் வாழ்ந்த வெளிநாட்டு வாழ்க்கை. சமூகத்தை அவர் காட்டிக்கொடுத்தமை எல்லாமே கிழக்கு மாகாண மக்களுக்கு தெரியும். இந்தநிலையில் முடியுமானால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கிழக்கில் வெற்றிபெற முடியுமா என தாம் கருணாவுக்கு சவால் விடுவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment