Thursday, November 20, 2008

U.N மற்றும் ICRC தவிர்ந்த ஏனைய தொண்டு நிறுவனங்கள் இலங்கைக்கு பிரவேசிப்பது தடை செய்யப்படவேண்டும் - கோத்தபாய

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தவிர ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு வருவது தடைசெய்யப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பல வருடங்களாக வடக்கில் பணியாற்றிய அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்;ந்த சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்கள் வடக்கில் எந்த அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள்ளவில்லை, எனினும் இவர்கள் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புரை செய்துள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் பாலங்களோ,கால்வாய்களோ அமைக்கப்படவில்லை எனவும் ஏ 9 வீதி முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்கள் பாரியளவான நிதியினை விடுதலைப்புலிகளுடன் பாரிமாறிக்கொண்டுள்ளதை காணமுடிகிறது எனவும் தனக்கு முடிந்தால் இலங்கைக்கு வரும் அனைத்து சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களையும் தடைசெய்வதாகவும் அதேபோல் அவர்களை நாட்டில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அரசசார்பற்ற நிறுவனங்கள் வடக்கில் உள்ள மக்களுக்கு செய்த சேவைகளை காணமுடியவில்லை .1959 ஆம் ஆண்டில் காணப்பட்ட அரச கட்டிடங்களே இன்னும் அங்கு உள்ளன. அந்த பிரதேசங்களில் பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment