Thursday, November 13, 2008

சிறிலங்காவின் பொய் வரலாற்றுப் பரப்புரைக்கு தமிழ் வரலாற்றாசிரியர்கள் தக்க பதிலளிக்க வேண்டும்: வெ.இளங்குமரன்



தமிழனுக்கு தனது நிலத்தில் உரிமை இல்லை என்று தெரிவிக்கும் சிறிலங்காவின் பொய் வரலாற்றுப் பரப்புரைக்கு தமிழ் வரலாற்றாசிரியர்கள் தக்க பதிலைக்கொடுக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத்தீவு சிங்களவர்களுக்கு உரியது. தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ உரித்தானதோ அல்ல. அந்த உரிமையை அவர்கள் கேட்க முடியாது என்று பௌத்த பிக்குகள், சிறிலங்கா படைத்தளபதி, அரசியல்வாதிகள், சிங்கள வரலாற்றாசிரியர்கள் பெரும் பரப்புரையை தமிழ் மக்களின் உரிமை தொடர்பான போராட்டத்தினை மறுக்க மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் வரலாற்றாசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தமிழர் இலங்கைக்குரிய தொன்மைக்குடிகள் என்ற உண்மையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். வாய்மூடி அமைதியாக இருப்பதன் மூலம் சிங்களப் பேரினவாத பரப்புரைக்கு சரி என்று ஒப்புக்கொள்வதாகி விடும்.

சிங்களப் புத்திஜீவிகளின் இந்தப் பொய்யுரைகளை தமிழ் அறிஞர்கள் மறுக்க வேண்டும். உண்மைகளை வெளியிட வேண்டும். குறிப்பாக தமிழர் இலங்கையின் தொன்மைக்குடிகள் என்பதை தமிழ் வரலாற்றாசிரியர்கள் தமது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை அவர்கள் இப்போது வெளிப்படையாக உரத்துச்சொல்லவேண்டும் என்றார் அவர்.

பேராசிரியர் கா.இந்திரபாலா, கலாநிதி முருகர் குணசிங்கம், பேராசிரியர் பொ.இரகுபதி ஆகிய முதன்மை வரலாற்றாசிரியர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் இந்த உண்மைகளை வெளியிடலாம்.

யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், கலாநிதி ப.புஸ்பரட்ணம், பேராசிரியர் ச.சத்தியசீலன், கலாநிதி செ.கிருஸ்ணராசா ஆகியோரும் கொழும்பில் உள்ள தமிழ் வரலாற்றாசிரியர்களும் சிங்களத்தின் பொய்ப்பரப்புரையை அம்பலப்படுத்த வேண்டும் என்பது தமிழரின் வரலாற்றுத் தேவையாகும்.

No comments:

Post a Comment