Thursday, November 20, 2008

சர்வதேச மன்னிப்பு சபையின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் - வெளிவிவகார செயலாளர் பாலித கோஹன

யுத்த நடவடிக்கைகளால் வன்னியில் மூன்று இலட்சத்துக்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. இவ்வாறான உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கோஹன தெரிவித்தார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குழுவினர் உள்ளிட்ட அனைத்து புலி உறுப்பினர்களும் ஆயுதங்களை கீழே வைத்தால் ஒழிய பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென இந்திய மத்திய அரசும் தமிழகமும் இணைந்து அனுப்பி வைத்துள்ள 1680 மெற்றிக்தொன் நிவாரணப் பொருட்களை குறித்த பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கென ஐ. சி. ஆர். சி. யிடம் இந்திய உயர் ஸ்தானிகர் இன்று கையளித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பாலித்த கோஹன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் வெளிப்பாடுகளே இந்த நிவாரணப் பொருள் உதவிகளாகும். எமது நாட்டின் தேவையறிந்து தக்க தருணத்தில் இந்தியா எமக்கு இந்த நிவாரணப் பொருட்களை வழங்கியிருப்பது குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது. தெற்காசியாவிலேயே இந்தியா ஒரு முன்னுதாரணமான நாடு என்பதை இதன் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் தேவையான சகல உதவிகளையும் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்திய நிவாரணம் தேவைகளை நிறைவு செய்திருக்கின்றது.

முல்லைத்தீவு மற்றும் வன்னி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இரண்டு இலட்சத்து 48 ஆயிரம் மக்களே இருக்கின்றனர். இவர்களில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் யுத்த சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவே அரசாங்கத் தகவல்களின் ஆதாரமாகும். இருப்பினும் வன்னியில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தகவல் வெளியிட்டிருக்கின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறான கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இதனை நாம் நிராகரிக்கின்றோம். இன்றைய சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த மக்கள் யுத்த பிரதேசங்களில் இருந்து வெளியேற முடியாதவர்களாக ஒடுக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அவரது குழுவினர்கள் தங்களது ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காதவரையில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை

No comments:

Post a Comment