Thursday, November 20, 2008

தமிழ்நாட்டில் ரணிலின் காரை கறுப்பு கொடிகளுடன் வழிமறித்து பெரும் ரகளை


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காரை நேற்று வியாழக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் வழிமறித்து ரகளை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

நேற்றுக் காலை சென்னை வந்த ரணில் விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து திருவாரூர் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார்.

பின்னர் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான பொலிஸ் வாகனங்கள் சென்றன.

இந்த வாகன அணிவகுப்பு திருவாரூர் வந்தபோது திருக்கொல்லிக்காடு என்ற இடத்தில் அதை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கறுப்புக் கொடிகளுடன் வழிமறித்தனர்.

இலங்கையில் போர்நிறுத்தம் சாத்தியமில்லை என்று கருத்துத் தெரிவித்த ரணிலுக்கு எதிராக கோஷமிட்ட தொண்டர்கள், அவரது காரை சுற்றி வளைத்தனர்.

அவர்களை பொலிஸாரால் அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து கூடுதல் பொலிஸார் விரைந்து வந்து 30 நிமிடங்கள் போராடி கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களை அப்புறப்படுத்தி ரணில் கார் செல்ல வழி ஏற்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 49 பேரையும் கம்யூனிஸ்ட் கட்சியின் பஞ்சாயத்துத் தலைவர் பாண்டியனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர் ரணில் மதுரை புறப்பட்டுச் சென்றார். மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின் ரணில் பின்னர் கொழும்பு சென்றார். போர்நிறுத்தத்தால் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் வந்து விடாது. அரசியல் தீர்வு ஒன்றே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்று அவர் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் அவரது காரை வழிமறித்தனர்.

No comments:

Post a Comment