Wednesday, April 28, 2010

ஐநா துணைச் செயலர் அடுத்த மாதம் இலங்கை வருகை




ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் லின் பஸ்கோ இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் இங்கு வருவதற்கு ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலேசிப்பது பஸ்கோவின் விஜயத்திற்கான முன்னைய நோக்கமாக இருந்தது. ஆனால், தற்போதும் அத்தகைய ஆலோசனைகள் நிகழ்ச்சிநிரலில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.

ஐக்கியநாடுகள் ஸ்தாபன நிபுணர்கள் குழு நியமனம் குறித்து அண்மைக் காலத்தில் பேச்சு எதுவும் அடிபடவில்லை என்றும் தொடர்ந்தும் நிபுணர்கள் குழு அமைப்பது பற்றிய யோசனை இருப்பதாக தெரியவில்லை என்றும் நியூயோர்க்கில் ஐக்கியநாடுகள் உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் அடுத்த மாதம் பஸ்கோ இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளதை இவ்வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மே மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய பஸ்கோ அனுமதி கோரியுள்ளார். ஆனால் அனுமதி அளிப்பது பற்றி எதுவும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில் செயலாளர் நாயகம் பான் கீ மூனைs சந்தித்து நீண்டநேரம் பேசியுள்ளார். இந்த பேச்சவார்த்தையின் போது இருவரும் நிபுணர்கள் குழு நியமனம் பற்றியும் பேசியுள்ளார்கள் என்று தெரியவருகிறது.

செயலாளர் நாயகமும் சட்டமா அதிபரும் சந்தித்துb பேசியதை பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி உறுதிப்படுத்திய போதிலும் பேச்சின் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில்,இம்மாதம் 20ஆம் திகதி இஸ்ரேல் அளித்த ஐக்கியநாடுகள் விருந்து வைபவம் ஒன்றில் இலங்கையின் ஐக்கியநாடுகள் தூதுவர் கலாநிதி பாலித கொஹணவிடம் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், "நான் உங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்லன்" என்று தெரிவித்ததாக அவர்கள் இருவருக்கும் அருகிலிருந்த ஒருரை மேற்கோள் காட்டி 'இன்னர் சிற்றி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு எதுவும் நியமிக்கப்பட மாட்டாது என்று எதிர்வு கூறிய கலாநிதி கொஹண, பதிலாக சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வத்திக்கான் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பட்டதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்தது.

இதற்கிடையில், இலங்கை மீது யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக குழு ஒன்றை நியமிப்பது என்று 6 வாரங்களுக்கு முன்னர் செயலாளர் நாயகம் உறுதியளித்தது சம்பந்தமாக எதையும் எதிர்பர்க்க வேண்டாமென சிரேஷ்ட ஐக்கியநாடுகள் அதிகாரி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்கு தெரிவத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment