![]() |
வவுனியா மாரம்பகுளம் பகுதியை சேர்ந்த லூக்காஸ் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் மண்டபத்திற்கு சென்றிருந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி அருகே கீழவேலாயுதபுரம் என்ற இடத்தில் தனியார் நிறுவனம் அமைத்து வரும் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் இவர் ஈடுபட்டு வந்தார்.
இதன்போது இவரது குடிசை அருகே ஓரிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கூர்த்தியை சேர்ந்த கணைமண்டல் என்பவர் மனைவி குருதேசி மண்டலுடன் குடிசை அமைத்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
கடந்த 24.10.2008 அன்று தீபாவளி விடுமுறைக்காக தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் லூக்காஸ் அருகில் இருந்த கணைமண்டல் குடிசைக்குள் சென்று அங்கிருந்த இரும்பு பெட்டியை உடைத்து அதிலிருந்த 3 பவுண் நகை மற்றும் 9 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த குருதேசி மண்டல் லூக்காஸ் வீட்டிற்கு சென்று திருடிய பொருட்களை தருமாறு தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த லூகாஸ், குருதேசியை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது சேலையால் தூக்கில் தொங்கவிட்டு தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்த புதியம்புத்தூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து லூக்காசை தேடி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே திருட்டு வழக்கில் லூக்காஸ் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து புதியம்புத்தூர் பொலிஸார் அங்கு சென்று அவரை கைது செய்து தூத்துக்குடி விரைவு கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி மேரிஅன்சலம் லூக்காசுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment