Sunday, April 25, 2010

நான் ஜெயிலுக்குப்போறேன் ஜெயிலுக்குப்போறேன் ஜெயிலுக்குப்போறேன்-நித்தி

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காதாமே... அதே கதைதான்!

அங்கே இங்கே என்று போக்குக் காட்டி,இமாசல பிரதேசத்தில் அந்தர்தியானம்


ஆகியிருந்த நித்தியானந் தாவை, அவருடைய செல்போன் பேச்சுகளை வைத்தே 'டிராக்' பண்ணி அமுக்கியது போலீஸ். அப்போதும் 'கெத்'து குறையாமல் அவர் பண்ணிய அலம்பலில் ஒரு சாம்பிள்தான் அட்டைப்பட சிச்சுவேஷன்!

சண்டிகரிலிருந்து இமாசலப் பிரதேசத்தின் தலை நகரான குளுகுளு சிம்லாவுக்கு போகும் வழியில் சோலன் மாவட்டம் உள்ளது. அங்கிருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள குனியால் - ஷிவ்சங்கர்கர் பகுதியில் மொத்தமே 200 குடும்பங்கள்தான். இங்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள மூன்று அறைகள் கொண்ட பங்களாவில்தான் நித்தி யானந்தா தனது ஐந்து சகாக்களுடன் மார்ச் 27-ம் தேதியி லிருந்து பத்திரமாகத் தங்கி இருந்திருக்கிறார். அங்கே அவரை வளைத்துப் பிடிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் - இமாசல பிரதேச போலீஸின் உளவு மற்றும் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஐ.ஜி-யான வேணுகோபால். அவரிடம் நாம் பேசினோம்.

''தான் பதுங்கியிருந்த இடத்தில் நடமாடும் கம்ப்யூட்டர் அலுவலகத்தையே நடத்தி வந்திருக்கிறார் நித்தியானந்தா. ஆர்பிட் ஷிங்கால் என்கிறவன் ஐ.டி. ஸ்பெஷலிஸ்ட். அவன்தான் அவரது கம்ப்யூட்டர் மூளை. நாங்கள் நெருங்குவதற்குக் கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும், வெளிநாட்டுக்குத் தப்பியிருப்பார் நித்தியானந்தா. அவரை பத்திரமாக விமானம் ஏற்றிவிட வேண்டும் என்றே ஷைலேஸ் திவாரி என்ற உள்ளூர்க்காரன் ரகசிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.

கைது செய்யப்போன போலீஸாரிடம் அந்த சாமியார், 'எனக்கு அவரைத் தெரியும்... இவரைத் தெரியும்...' என்று பெரிய பெரிய ஆட்களின் பேராகச் சொல்லியிருக்கிறார். இதனால் போலீஸார் சற்றுத் தயங்கி நிற்க... சாமியாரின் வெட்டி பந்தாவை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நான் பொறுமை இழந்துவிட்டேன். எத்தனையோ வி.வி.ஐ.பி-கள் இவரது காலடியில் ஆசி வாங்கின புகைப்படங்களை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் ஏமாற்றும் வகையில், செக்ஸ் குற்றச்சாட்டில் ஆதாரத்துடன் சிக்கிய இந்த ஆளை, மற்ற குற்றவாளிகளைப் போலத்தான் நடத்தவேண்டுமென்ற முடிவோடு நெருங்கினேன். என்னிடமும் அவர், 'பார்த்துக்கிட்டே இருங்க... உங்களுக்கு அவரிடமிருந்து போன் வரும்' என்று மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவரின் பெயரைச் சொன்னார். 'மிஸ்டர்! நீ ஒரு குற்றவாளி. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அப்புறம் நாம் பேச லாமா?' என்று சொல்லி இறுக்கமாக அவர் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தேன்...'' என்றார். அவரிடம் நாம் மேலும் கேள்விகளைஅடுக்கினோம்.

''நித்தியானந்தா மறைவிடமாக உங்கள் மாநிலத் தைத் தேர்ந்தெடுக்க ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா?''

''இமாசல பிரதேசத்தில் சாமியாருக்கு ஆதரவான பெரிய நெட்வொர்க் இருக்கிறது. இனிமேல்தான் இது பற்றி விசாரிக்கப் போகிறோம். டெல்லியிலுள்ள விவேக், சத்தியேந்திரநாத் என்கிற இரண்டு பிசினஸ் பிரமுகர்களின் வீடு குனியால் என்ற பகுதியில் உள்ளது. இந்த சாமியார் விவேக்கிடம், 'உனக்கு இரண்டு கோடி ரூபாய் தருகிறேன். பள்ளிக்கூடம் கட்டி பிழைத்துக்கொள்' என்று சொல்லிவிட்டுத்தான் அவரது வீட்டில் பதுங்க இடம் பிடித்ததாகத் தெரிகிறது. தற்போது, அந்த இருவரையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறோம். நித்தியானந்தாவுடன் இப்போதும் பல மாநிலத்தவர், பல வெளிநாட்டவர் தொடர்பில் இருக்கிறார்கள். தினம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கி றார். நல்ல ராஜபோக வாழ்க்கை. இடம் மாறி மாறித் தங்கியதோடு காரையும்கூட அடிக்கடி மாற்றியிருக்கிறார்.''

''இந்த இடத்தில்தான் இருக்கிறார் என்று எப்படி லொக்கேட் செய்தீர்கள்?''

ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு போன நித்தியானந்தா, அங்கிருந்து எங்கே போனார் தெரியவில்லையென்று கர்நாடகா போலீஸ் வலை வீசி தேடிக்கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பு, எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. நித்தியானந்தா எங்கள் மாநிலத்தில்தான் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்று. உடனே உஷாரானோம். தேட ஆரம்பித்தோம். அவரைக் காட்டிக் கொடுத்தது செல்போன். உள்ளூர் முகவரியில் ஒரு சிம் கார்டு வாங்கி அதைப் பயன்படுத்தும்போது, எங்கள் வலையில் சிக்கி னார். அதுவுமில்லாமல், ஏ.டி.எம். சென்டரில் தினமும் ஏராளமான பணத்தை எடுத்து வந்தார். கிரெடிட் கார்டு களையும் பயன்படுத்தினார். அமெரிக்காவுக்கு ஒரு சின்ன ஊரிலிருந்து அடிக்கடி போன்கால் போனதையும் நாங் கள் கவனித்தோம். இதுமாதிரி வேறு சில க்ளூக்களை வைத்து நித்தியானந்தா பதுங்கியிருப்பது குனியால் என்கிற ஊரில்தான் என்று முடிவு செய்தோம். ஒரு வாரமாக, அவரது வாகனத்தை பயன்படுத்தாமல் ஒரே வீட்டில் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்தோம். அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோதனையிடுவது சாத்தியமில்லை. இதுமாதிரி சாமியார்களைச் சுற்றி வெறி பிடித்த பக்தர்கள் இருப்பார்கள். அவர்கள் சண்டை போட்டு, கலாட்டா பண்ணுவார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்து கடந்த 21-ம் தேதியன்று நூற்றுக்கும் மேற்பட்ட காமாண்டோ படையினருடன் அந்த ஊரை முற்றுகையிட்டேன். அன்று காலைகூட, 'யூ டியூப்'பில் ஆன்லைன் வாயிலாக ஆன்மிக போதனை செய்துகொண்டிருந்தார் நித்தியானந்தா. போலீஸார் திபுதிபுவென்று நுழைவதைப் பார்த்து ஆறு சகாக்கள் புடைசூழ வீட்டின் உள்ளே உட்கார்ந்திருந்த அவர் திடுக்கிட்டார். அவரே இதை எதிர்பார்க்கவில்லை. ஷைலேஷ் திவாரி என்பவன் மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மற்றவர்களை நாங்கள் பிடித்தோம். முதலில் கொஞ்சம் எதிர்ப்பு காட்டினார். நான் உள்ளே போனதும், குனிந்து வணக்கம் தெரிவித்தார். அவரை நான் பிடித்து வாசலுக்கு இழுத்து வந்தபோது,எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், ரொம்ப புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைத்து உரத்த குரலில், 'யாரும் பதற்றப்பட வேண்டாம். பொறுமையாக அமைதி காக்கவேண்டும்' என்றார். அதாவது, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர் கைது சம்ப வத்தைப் பார்த்து டென்ஷனாகி... போலீஸாரை எதிர்த்து கலாட்டா செய்யத் தூண்டும் விதத்தில் அப்படி பேசினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவர் பேசியதை ஏளனமாகத்தான் பார்த்தார்கள். ரியாக்ட் செய்யவில்லை.''

''ஏதாவது ரகசிய சி.டி-களை பறிமுதல் செய்தீர்களா?''

''அகில இந்திய அளவில் தேடப்படும் குற்றவாளி யான நித்தியானந்தா, இதில் ரொம்பவே எச்சரிக்கை யான ஆள். அதனால், அவர் தங்கியிருந்த இடத்தில் சி.டி.கள் ஏதும் சிக்கவில்லை. 300 கிலோ லக்கேஜ்கள் இருந்தன. ஒரு வீட்டை காலி செய்து போகிற மாதிரிதான் அவற்றையெல்லாம் அள்ளி வந்தோம். எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் 150 கிலோ இருக்கும். 3 லேப்டேப்புகள், 10 செல்போன்கள், 15 சிம் கார்டுகள். கேமரா, மோடம், போர்ட்டபிள் பவர் கனெக்ஷன், இன்டர்நெட் தகவல் தொடர்பு சாதனங்கள்... இப்படி ஏராளமானவை இருந்தன. உலர்ந்த பழங்கள் கொண்ட மூட்டையும் இருந்தது. பெரிய பெரிய சூட்கேஸ்கள் 12 இருந்தன. பணம் மட்டும் சில லட்ச ரூபாய். அமெரிக்க டாலர் கத்தையாக இருந்தன. ஆன் லைனில் வெளிநாடுகளில் இருந்து பணம் இவருக்கு கொட்டிக்கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.''

''உங்கள் விசாரணையில் ஏதாவது தகவல் கிடைத்ததா?''

''நித்தியானந்தாவை சி.பி.சி.ஐ.டி. ஆபீஸ§க்கு அழைத்து வந்தோம். முதலில் போலீஸ் வாகனத்தைவிட்டு இறங்க மறுத்து முரண்டு பிடித்தார். ஒருவழியாக, 'சும்மா ஒரு சாதாரண விசாரணைக்குத்தான்' என்று சொல்லி இறக்கினோம். உள்ளே வந்தவரை நேராக லாக்-அப் அறைக்கு அழைத்துச் செல்ல... முதன்முதலாக அவர் முகத்தில் பயம் கவ்வியது தெரிந்தது. பொதுவாக, அவர் சேரில் உட்கார மாட்டாராம். சோஃபாவில்தான் உட்காருவாராம். லாக்-அப் அறையை தவிர்த்து விசாரணை அறையில் சாதாரணமாக உட்கார வைத்தோம். முதலில், 'இன்று மௌனவிரதம். பேச மாட்டேன்' என்றார் சைகையில்! நான் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'நான் பேசமாட்டேன். எனது ஸ்போக்ஸ் பெர்சன் இவர். உங்களுடன் இவர்தான் பேசுவார்' என்றும் சைகை காட்டினார். 'குற்றவாளியாகக் கருதப்படும் நீங்கள்தான் பேச வேண்டும்' என நான் கண்டிப்பான குரலில் சொன்னேன். உடனே, 'நான் பக்தர் களுக்காக சேவை செய்தேன். எமக்குத் தப்பான வழி தெரியாது. நல்லதுதான் செய்தேன்' என்று பேச ஆரம்பித்தார். அவரோடு வந்த மற்ற ஐந்து சகாக்களை பிரித்து தனித்தனி அறையில் வைத்து ஸ்பெஷலாக விசாரித்தோம். அவர்களும் பல விஷயங்களைக் கக்கி இருக்கிறார்கள்!''

''நித்தியானந்தா இரவில் என்ன சாப்பிட்டார்?''

''சப்பாத்தி, சாதம் கொடுத்தோம். அதை சாப்பிட மறுத்தார்.பழங்கள், பிஸ்தா, பாதாம், பால்... இவற்றைத்தான் சாப்பிடுவேன்என்று சொன்னார். பழங்களில் ஆப்பிளும் பப்பாளியும்தான் வேண்டும் என்றார். 'போனால் போகிறது' என்று சொல்லி, அவர் கேட்ட அயிட்டங்களை வரவழைத்தோம். மிக்ஸ்டு காய்கறிகளையும், உலர்ந்த திராட்சைகளையும் வரவழைத்துக் கொடுத்தோம். அவற்றை விரும்பிச் சாப்பிட்டார். விடிய விடிய விசாரணை நடந்தது. அவர் தூங்கப்போகும்போது எங்கள் போலீஸாரை அவரது அறையிலேயே தங்கச் சொன்னேன். அப்போது ஒரு போலீஸ்காரர் தயக்கத்துடன் பின்வாங்கினார். என்னவென்று கேட்டபோது, 'இந்த சாமியார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டும் ஐ.பி.சி. 377 என்கிற பிரிவிலும் வழக்கு பதிவு ஆகியிருப்பதை சுட்டிக் காட்டினார். அதாவது, இயற்கைக்கு மாறாக சிறுவர்கள் மற்றும் ஆணுடன் உடலுறவு கொண்ட குற்றத்துக்கு ஆளானவர்கள் மீதான செக்ஷன் அது. அதனால் போலீஸாரை அறைக்கதவு அருகே காவல் காக்கும்படி சொன்னேன். அவரும் அப்படியே காவல் நின்றார். தூங்கி எழுந்து மறுநாள் காலையில் குளித்து முடித்தார். அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்து தனது வழக்கமான ஸ்டைலில் கையைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணத் துவங்கினார். எங்கள் டி.எஸ்.பி. ஒருவர், ''யோவ், நீ யாரு எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ண..? உனக்கு நாங்கள்ல ஆசீர்வாதம் பண்ணணும்!'' என்று குரலை உயர்த்த, அப்படியே அமைதியாகிவிட்டார். பரோட் டோவும் தயிரையும் டிபனாக கொடுத்தோம். மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தார். பிறகுதான், சண்டிகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றோம். அங்கிருந்து, பெங்களூருவுக்கு போலீஸார் அழைத்துப் போனார்கள்.''

''நித்தியானந்தாவை தவிர மற்ற சகாக்கள் ஏதாவது சொன் னார்களா?''

''எங்கள் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். என்ன பெயரில் யார் ஆசிரமத்துக்கு வந்தாலும், உடனே வேறு புதுப் பெயர் வைத்துவிடுவது நித்யானந்தாவின் வழக்கமாம். உதாரணத்துக்கு, அருண்ராஜ் என்பவர் வேலூர்க்காரர். அவருக்கு சாமியார் வைத்த பெயர் நித்யராஜ் மகானந்தா. ஆந்திராவை சேர்ந்த கோபால் ஷீலம் ரெட்டி என்பவரை, நித்யபக்தானந்தா என்று மாற்றியிருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏதோ ஒரு பெண் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவராம் இவர். உடுப்பி பக்கத்தில் இருக்கும் ஒரு நடிகை பற்றி பேசினார் ஒரு சகா. 'சாமியாருக்கு செய்யும் சேவையானது கடவுளுக்கே செய்வது போன்றது' என்று அடிக்கடி இவர்களிடம் சொல்வாராம். இன்னொரு நடிகையோ, 'நான் செய்த பாவத்துக்கு விமோசனத்துக்காக நித்தியானந்தரை தேடிவந்தேன்' என்று சொன்னாராம். சில பெண்கள் சாமிக்கு சேவை செய்துமுடித்து அப்படியே அவருடைய சகாக்களுக்கும் சேவை செய்து விட்டுப்போகும் கதையையும் சொன்னார்கள். இதுமாதிரி எக்கச்சக்கமான கதைகள்... எல்லாவற்றையும் முறைப்படி பதிவு செய்தோம். மறுநாள் காலை அவர்களை கோர்ட்டில் ஒப்படைத்து, எங்கள் கஸ்டடிக்கு எடுத்தோம். அடுத்த கட்ட விசாரணைக்காக பெங்களூரு போலீ ஸாரிடம் ஒப்படைத்தோம்!'' என்றார்.

''ரஞ்சிதாதான் ஒரே சாட்சி!''

போலீஸ் விசாரணையில் இருந்த நித்தியானந்தாவிடம் நம் சார்பிலும் சில கேள்விகளை அடுக்கினோம். தயங்கிய குரலில் ஆரம்பித்தாலும் தைரியமாகவே கிடுகிடுக்கத் தொடங்கினார் நித்தியானந்தா.

''நான் எங்கேயும் ஒளிந்திருக்கவில்லை. போலீஸ் என்னை வலைவீசி தேடியதாகச் சொல்வது தவறு. மடத்தில் தங்கி இருந்தால், பக்தர்களுக்கு வீணான சிரமங்கள் ஏற்படும் என நினைத்துத்தான் நான் தனியே ஓரிடத்தில் தங்கி இருந்தேன். தனிமை தேடி தங்கி இருந்தேனே தவிர, தலைமறைவாகவில்லை! போலீஸ் என்னைத் தேடி வந்தபோது, இயல்பாகத்தான் அவர்களை எதிர்கொண்டேன். பதறி ஓடவோ பிரச்னை செய்யவோ இல்லை!''

''கடுமையான சட்டங்களின் கீழ் உங்களை சிறையில் தள்ளப் போவதாகச் சொல்லப்படுகிறதே?''

''வழக்கு குறித்த விவகாரங்கள் எல்லாம் என்னுடைய வழக்கறிஞர்களுக்குத்தான் தெரியும். எந்த வழக்கில் என்னை கைது செய்திருக்கிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால்,இந்த நிலையிலும் தைரியமாகவும்நம்பிக்கையோடும் இருக் கிறேன். சில போலீஸ் அதிகாரிகள் தன்மை யோடு நடத்துகிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஒரு போலீஸ் அதிகாரி என்னைப் பார்த்த உடனேயே கண் கலங்கி அழத் தொடங்கிவிட்டார். என் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்கள் எடுபடவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?''

''ரஞ்சிதாவை வற்புறுத்தி தமிழக போலீஸ் உங்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கைப் பாய்ச்சப் போவதாகப் பேசப் படுகிறதே?''

''ரஞ்சிதா மட்டுமல்ல... ஆசிரமத்தைச் சேர்ந்த யாரும் என் மீது தவறான புகார் கொடுக்க மாட்டார்கள். ரஞ்சிதாவை யார் நிர்ப் பந்தித்தாலும் அவர் எனக்கு எதிராகப் பேச மாட்டார். நான் தவறு செய்திருந்தால்தானே அவர் பேசுவார். என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு நன்றாகத் தெரியும். நான் நல்லவன் என்பதற்கு அவரைவிட வேறு சாட்சி வேண்டியதில்லை. அதனால் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் அவர் எனக்கு எதிராகத் திரும்ப மாட்டார்!''

''தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் நீங்கள் ரஞ்சிதாவோடு பேசினீர்களா?''

''இப்போதும் சொல்கிறேன்... நான் ஒருபோதும் தலைமறைவாக இருக்கவில்லை. நான் தங்கி இருந்த இடம் எல்லோருக்குமே தெரியும். என்னைத் தொடர்பு கொண்டு எத்தனையோ பேர் கண்ணீர்விட்டு அழுதார்கள். வெளிநாடுகளில் இருந்து இமெயில் மூலமாக நிறைய பேர் வருத்தப் பட்டார்கள். நான் யாரோடெல்லாம் பேச நினைத்தேனோ... அவர்கள் அனைவருடனும் பேசினேன்; தைரியம் சொன்னேன். 'எந்நாளும் ஆசிரமம் நிலைக்கும்' என நம்பிக்கை சொன்னேன். உண்மையாகவே போலீஸ் என்னைத் துரத்தி இருந் தால்... இன்றைக்கு இருக்கும் நவீன டெக்னாலஜிகளை வைத்து அரை மணி நேரத்துக்குள் என்னைப் பிடித் திருக்க முடியுமே..!''

படுக்கையில் பணக்கட்டுகள்!

சாமியார் தங்கி இருந்த வீட்டின் வாட்ச்மேன் ஜெக்தீஷிடம் பேசினோம். ''சிம்லாவை சேர்ந்த விவேக் என்பவரின் பெயரில்தான் இந்த வீடு இருக்கிறது. எங்கள் மேனேஜரான மஹாதேவ், கடந்த மார்ச் 27-ம் தேதி மாலை எனக்கு போன் செய்து, சில விருந்தாளிகள் வருவதாகச் சொன்னார். அதன்படியே ஒரு தனியார் டாக்ஸியில் அந்த சாமியாரும் அவரோடு சேர்ந்த ஆறு பேரும் வந்தார்கள். அவர்களுடன் பெண்கள் யாருமில்லை. என்னிடம் சாவி இல்லாததால் பூட்டை உடைத்து அவர்கள் தங்க ஏற்பாடு செய்தேன். தினமும் வீட்டைப் பெருக்குவதற்காக உள்ளே சென்ற நான், ஆங்காங்கே ஆயிரம் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்தேன். மேலும் கட்டுக்கட்டான நோட்டுகள் பத்திரப்படுத்தப்படாமல் படுக்கையின் மேலேயே கிடந்தன...'' என்றார் அதிர்ச்சியோடு.

கைதின்போது உடனிருந்த அக்ரி காவல் நிலைய இன்ஸ்பெக்டரான விக்ரம் சௌகானிடம் பேசினோம். ''மதியம் சுமார் 12.30 மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தோம். கைது செய்தபோது சாமியார் மாறுவேடம் இன்றி அதே உடையில் இருந்தார். பெரிய அளவில் பிடிவாதமோ, வாக்குவாதமோ செய்யாமல் அமைதியுடன் எங்களுடன் கிளம்பி விட்டார். வழி நெடுக ருத்ராட்ச மாலையை கையில் உருட்டிக்கொண்டு மந்திரங்கள் ஜபித்தபடி வந்தார். ஆனால், எங்கள் கேள்விகள் எதற்கும் பதில் கூற மறுத்துவிட்டார். அவருக்கு ஹைப்பர் டென்ஷன் இருப்பதால், பி.பி. மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டார்...'' என்றார்.

இந்நிலையில், நித்தியானந்தாவுக்கு இடம் கொடுத்த மேனேஜர் மஹாதேவ் பீகாரைச் சேர்ந்தவர் எனவும், அவர் மீது பாட்னாவில் ஒரு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸ் தேடி வருவதாகவும் தகவல் கிடைத் துள்ளது. அதேபோல், அந்த வீடு விவேக்குக்கு முன்பாக அஸ்வினி சிங் என்பவரிடம் இருந்துள்ளது. இவர் மர்மமான முறையில் 2009-ல் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு நித்தியானந்தாவுக்கு உதவிய பலரும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையவர்களாகவே இருப்பதால், சிம்லாவின் சி.ஐ.டி. போலீஸ் மேற்கொண்டும் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதற்கிடையில் பெங்களூரு அழைத்து வரப்பட்ட நித்யானந் தாவை புகைப்படம் எடுக்க ஏர்போர்ட்டில் மீடியாக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போலியாக ஒரு சாமியாரை உருவாக்கி அவரை போலீஸ் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்துவர... மீடியாக்கள் அந்தப் போலியைத் துரத்தியபடியே ஓடின. அந்த இடைவெளியில் நித்யானந்தாவை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தது போலீஸ்.


நித்தியானந்தா நாடகம்!

நித்தியானந்தா கைது செய்யப்பட்ட விவகாரமே ஒரு நாடகம் என்கிறார்கள் கர்நாடக பத்திரிகையாளர்கள்!

''ஆசிரமத்தைவிட்டு வெளியேறி னாலும் தன்னைப் பற்றிய சலசலப்பி லிருந்து நித்தியானந்தாவால் தப்ப முடியவில்லை. அதனால், அவரே கர்நாடக போலீஸ் அதிகாரிகள் சிலருடன் பேசி அடுத்தகட்ட திட்டங்களை வகுத்திருக் கிறார். அதனால், கைதுக்குப் பிறகு கடகடவென தன் மீதுள்ள வழக்குகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு மறுபடியும் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தா திட்டம் போட்டிருக்கிறார். கர்நாடக அரசு அவருக்கு ஆதரவாக இருப்பதால், இப்படி கைது நாடகம் அரங்கேற்றப் பட்டிருக்கிறது!'' என்கிறார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்.

- கே.ராஜாதிருவேங்கடம்


நித்தியானந்தாவை கைது செய்த வேணுகோபால் ஐ.பி.எஸ். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர். 1995-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தவர். ஹிமாசல பிரதேச மாநில கேடர் அதிகாரி. அங்கே, ஐந்து மாவட்டத்தில் எஸ்.பி-யாக பணிபுரிந்தவர். எல்லைப் பகுதியில் அட்டகாசம் செய்துகொண்டிருந்த முகமூடி கொள்ளையர்களை ஒழித்து மக்களது பாராட்டுதலை பெற்றவர். மேலும் அங்குள்ள அணையை தகர்க்க பஞ்சாப் மாநில தீவிரவாதிகள் முற்பட்டபோது, அவர்களுடன் சண்டையிட்டு வளைத்துப் பிடித்தார். அதேபோல், போதை கடத்தல் தொழிலில் கொடிகட்டிப்பறந்த சர்வதேச புள்ளிகள் பலரையும் பிடித்து உள்ளே தள்ளியவர். இவரது மனைவியின் பெயர் பாக்கியவதி. ரவி என்கிற மகனும் ரித்திமா என்கிற மகளும் இருக்கிறார்கள். ''என்னுடைய பேட்ச்சை சேர்ந்த டேவிட்சன், சங்கராச்சாரியரை கைது செய்தவர். நான் இப்போது நித்தியானந்தாவை கைது செய்திருக்கிறேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் வேணுகோபால்.

No comments:

Post a Comment