அரசாங்கம் சம்பந்தன், ஹக்கீம் கூட்டணியின் நிபந்தனைகளை நிராகரிக்கவேண்டும் எனவும் அவை நாட்டை துண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டவை எனவும் ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.
சுயநிர்ணய உரிமையும், வட கிழக்கு இணைப்பும் தமிழ் அரசியல்வாதிகளின் பிரச்சினைகளே தவிர சாதாரண தமிழ் மக்களின் பிரச்சினை அல்ல. இலங்கையில் மற்றுமொரு பிரிவினைவாதத்தை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் ஏழாவது பாராளுமன்றம் பல புதிய முகங்களுடன் இன்று கூடுகின்றது. இந்த ஆரம்பம் நாட்டின் அபிவிருத்தியை நோக்கியதாக அமைய வேண்டும். கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்து மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தோன்றாத வகையில் அரசாங்கமும் நாட்டுமக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸும் பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவும் நாட்டிற்கு ஒவ்வாத பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.

நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிபந்தனைகள் இன்றி ஒத்துழைப்பு வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் முன்வர வேண்டும். தமிழ்மக்களின் பிரச்சினைகள் தனிநாடு அல்ல. ஏனைய மக்களுடன் சமாதானத்துடன் சிறந்த பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு வாழ்வதேயாகும்.
புலிகளின் இலக்குகளை அடைய சம்பந்தனின் குழு தமிழ்மக்களை மீண்டும் ஒருமுறை பலியிடக்கூடாது. தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி இனவாதத்திற்கு இடமளிக்க எவரேனும் முயற்சி செய்வார்களாயின் அதற்கு எதிராக ஹெல உறுமய போராடும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment